சென்னையில் வெள்ளத்தைத் தடுப்பது எப்படி? சூழலியல் ஆர்வலர்கள் சொல்வது என்ன?

திங்கள், 15 நவம்பர் 2021 (11:08 IST)
சென்னை பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான அறிவுரைக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. ` கடந்த 15 ஆண்டுகளில் என்னென்ன பிரச்னைகள் ஏற்பட்டன, அதனை எதிர்கொண்ட விதம் ஆகியவற்றை வைத்தே அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும்' என்கின்றனர் நீரியல் நிபுணர்கள். தமிழ்நாடு அரசின் குழுவால் என்ன நடக்கும்?
 
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக கடந்த நவம்பர் முதல் தேதியில் இருந்து கனமழை பெய்து வந்தது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்பினை சந்தித்தன. தொடர் கனமழையின் காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் தேங்கி, பொதுமக்களின் அன்றாட வாழ்விலும் சிக்கலை ஏற்படுத்தியது. கடந்த வாரம் புதன்கிழமை இரவு பெய்த அதீத கனமழையால் சென்னை மற்றும் புறநகரில் உள்ள பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
 
மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள 909 ஏரிகளில் 404 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முக்கிய நீர் ஆதாரங்களான பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நீர்த்தேக்கங்களுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அங்கிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரித்தது.
அரசாணை சொல்வது என்ன?
2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் புயல், வெள்ளம் என இயற்கைச் சீற்றங்களால் சென்னை மக்கள் அவதிப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதனைக் களையும் வகையில், சென்னைப் பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான அறிவுரைக் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார். இந்தக் குழுவானது, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான வெ.திருப்புகழ் தலைமையில் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், `தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது, சென்னையில் வெள்ள பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் வெள்ள கட்டுப்பாடு நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் கால்வாய்களை வடிவமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக சுற்றுச்சூழல், நகர்ப்புற திட்டமிடல், பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
 
சென்னை மாநகராட்சி ஆணையாளர், அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், ` புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் அதிகளவில் பாதிக்கப்படும் பகுதியாகவும் மிகுந்த ஈரம் மற்றும் வறட்சியான பருவநிலையைக் கொண்ட பகுதியாகவும் சென்னை உள்ளது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் கடல் மட்டத்தில் இருந்து 2 மீட்டர் உயரமாகவும் சில பகுதிகள் கடல்மட்டத்தை விட தாழ்வாகவும் உள்ளன.
 
14 பேர் கொண்ட குழு
சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 2,500 ஏரிகள், குளங்கள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் தண்ணீர் அடையாறு, கூவம், கோவளம், கொசஸ்தலை ஆறுகள் வழியாகச் செல்கிறது. இதனால், மழைக் காலங்களில் அதிக பாதிப்புகள் ஏற்படுவதால் ஆளுநர் அறிவித்தபடி குழுவை அமைக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்தப் பரிந்துரையை ஏற்று சென்னை பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான அறிவுரைக் குழுவை அமைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான வெ.திருப்புகழ் தலைமையில் இயங்கப் போகும் இந்தக் குழுவில் காலநிலை பின்னடைவு பயிற்சி உலக வள நிறுவன இயக்குநர் நம்பி அப்பாதுரை, சென்னை வளர்ச்சி கல்வி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் ஜனகராஜன், மும்பை ஐ.ஐ.டி கட்டுமானப் பொறியியல் துறை பேராசிரியர் கபில் குப்தா, சென்னை அண்ணா பல்கலைக்கழக மனித குடியமர்வு மைய இயக்குநர் பிரதீப் மோசஸ், சென்னை அண்ணா பல்கலைக்கழக ரிமோட் சென்சிங் நிறுவனப் பேராசிரியர் திருமலைவாசன், சென்னை ஐ.ஐ.டி கட்டுமானப் பொறியியல் துறையின் தலைவர் பாலாஜி நரசிம்மன் உள்பட 14 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது,' என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதில், குஜராத் மாநிலப் பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான திருப்புகழ், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரான இறையன்புவின் மூத்த சகோதரர். குஜராத் முதல்வராக நரேந்திர மோதி இருந்த காலகட்டத்தில் அவருக்குக் கீழ் பணியாற்றியுள்ளார். மேலும், தேசிய பேரிடர் மேலாண்மையிலும் அவர் சில ஆண்டுகள் பணியாற்றியதால் நிபுணத்துவம் வாய்ந்தவராகப் பார்க்கப்படுகிறார்.
 
சூழலியல் ஆர்வலர்கள் சொல்வது என்ன?
 
``சென்னையில் அதீத வெள்ளம், அதீத வறட்சி ஆகியவற்றை மாற்றியமைப்பதில் புதிய குழுவின் செயல்பாடுகள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?" என பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``சென்னையின் நிலவியல் வரைபடத்தில் எது மேடு, எது பள்ளம் என ஆராய வேண்டும். பள்ளத்தை நோக்கித்தான் தண்ணீர் செல்லும். அந்த இடங்களில் தண்ணீர் வடிந்து செல்லக் கூடிய மழைநீர் வடிகால் வாய்க்கால்களை வடிவமைக்க வேண்டும்.
 
குறிப்பாக, சாலைகளுக்குத் தண்ணீர் வராமல் தடுப்பதற்கு இருக்கின்ற நீர் நிலைகளை ஆழப்படுத்தலாம். செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு மூன்றரை டி.எம்.சி என இருப்பதை ஏழு டி.எம்.சி அளவுக்கு ஆழப்படுத்தலாம். சோழவரம், பூண்டி ஆகிய நீர்த் தேக்கங்களையும் அவ்வாறே செய்யலாம். மேலும், நான்காயிரம் நீர்நிலைகளை ஆழப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்" என்கிறார்.
 
`சென்னையின் மேற்குப் பக்கத்தில் உள்ள மாவட்டங்களில் பெய்கின்ற மழையானது, சென்னைக்குள் வெள்ளமாக வருகிறது. உதாரணமாக, தாம்பரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் பெய்கின்ற நீரை சென்னைக்குள் வரவிடாமல் தடுப்பதற்கு அங்குள்ள நீர் நிலைகளின் கொள்ளளவை அதிகப்படுத்தலாம். அப்படியே வெள்ளம் வந்தாலும் அதன் நீர்வழிப் பாதைகளில் உள்ள ஆக்ரமிப்பை அகற்றி தண்ணீர் செல்லும் வகையில் பாதையை எளிதாக்கலாம். தற்போது தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட குழுவில் பேராசிரியர் ஜனகராஜன், நம்பி அப்பாதுரை உள்ளிட்டவர்கள் மாறுபட்ட சிந்தனைகளைக் கொண்டவர்கள். இவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை மிகச் சரியாக செய்வார்கள் என நம்புகிறோம்," என்கிறார் சுந்தர்ராஜன்.
 
35 ஆக குறைந்த 650 நீர்நிலைகள்
``சென்னையின் நிலப்பரப்பு 1 சதவிகிதம் என்றாலும், அதன் மக்கள்தொகை என்பது 12 சதவிகிதமாக இருக்கிறது. எனவே, சென்னையை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அளவுக்குப் பிற மாவட்டங்களிலும் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். 1976 ஆம் ஆண்டில் சென்னை வெள்ளம் பற்றிய சிவலிங்கம் குழுவின் அறிக்கையை பொதுவெளியில் வைத்து கலந்துரையாடல் செய்வதன் மூலம் அரசு அமைத்துள்ள குழுவின் வேலை எளிதாகும் என நினைக்கிறோம்.
 
நீர்வழிப் பாதைகள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவை வெள்ளத்துக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. சென்னையில் 1970 ஆம் ஆண்டில் 650 நீர்நிலைகள் இருந்தன. அது சுருங்கி தற்போது 35 ஆக குறைந்துள்ளதை சீர்செய்யும் வகையில் 2007 ஆம் ஆண்டு நீர்நிலை ஆக்கிரமிப்பு சட்டத்தின்கீழ் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்கிறார், சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த புகழேந்தி.
 
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், `` மத்திய நீர்ஆணையத்தின் 1975 ஆம் ஆண்டு விதிகளின்படி நீரால் மூழ்கும் இடங்களை (Flood Plain Zones), சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டம் 3-ல் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சென்னை விரிவாக்கத்தின்போது அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வழிந்தோடும் பாதைகள், குழாய்கள் ஆகியவற்றை முடிந்தவரை 100 சதவிகிதம் இருப்பதை உறுதிபடுத்த வேண்டும். மேலும், அதிதீவிரமழையை கணக்கில் கொண்டு அதன் திறனை அதிகப்படுத்தியும் வழிந்தோடும் பாதையின் சாய்வு தேவைக்கு ஏற்றவாறு இருப்பதையும் நீர் வெளியேறும் இடத்தில் நீர்மட்டம் இயற்கை விதிகளுக்கு ஏற்ப இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும்," என்கிறார்.
 
மேலும், ``அதிக மழை பெய்வதற்கான செயற்கைக் காரணங்களை ஆராய்ந்து புவி வெப்பமடைதலை தடுப்பதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும். வானிலையை சரியாக கணிப்பதற்கு ரேடார் கருவிகள், காற்றின் மேலடுக்கு சுழற்சியை சரியாக கணிக்கும் கருவிகள் தயார் நிலையில் இருப்பதையும் அரசு உறுதிசெய்ய வேண்டும். டோக்கியோ நகரைப் போன்று சாலைகளில் இருக்கும் மழைநீரை சேமிப்பதற்கு சாலைகளின் கீழ் பாதாள சேமிப்பு தொட்டிகளை ஏற்படுத்துவதுடன், மழைநீரை சேமிக்கும் குளங்களையும் கிணறுகளையும் தேவைக்கேற்ப ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நீண்டகால மற்றும் நிலைத்த மழை வெள்ளத் தடுப்புக்கு வழிவகுக்கும்," என்கிறார்.
 
புதிய குழுவின் முதல்கட்டப் பணி
``புதிய குழுவின் முதல்கட்டப் பணி என்னவாக இருக்கும்?" என சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரும் வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான அறிவுரைக் குழுவின் உறுப்பினருமான ஜனகராஜனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இதுநாள் வரையில் நான் கூறிய கருத்துகளை எல்லாம் கொண்டு போய் சேர்க்க முடியும் என நம்புகிறேன். இந்தக் குழுவின் கூட்டம் இன்னும் தொடங்கவில்லை. அதில், என்னென்ன வழிகாட்டல்கள் உள்ளன, எதிர்பார்ப்புகள் என்ன, அதற்கான கால அளவு என்ன என்பதைப் பார்த்த பிறகுதான் அதற்கேற்ப செயல்பட முடியும்," என்கிறார்.
 
தொடர்ந்து பேசுகையில், ``பொதுவாக, குறுகிய காலத்தில் செய்ய வேண்டியவை, அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், நீண்ட காலத் திட்டம் என சில வகைகள் உள்ளன. இதனை மூன்று பிரிவுகளாக பிரித்து அதில் செய்ய வேண்டியதைப் பார்க்க வேண்டும். முதலில், இதுவரையில் நாம் செய்த தவறுகள் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் என்னென்ன பிரச்னைகள் இருந்தன, அதனை எவ்வாறு எதிர்கொண்டனர், என்னென்ன தவறுகள் ஏற்பட்டன, அதில் உள்ள தடைகள், குறைகள் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு அதனை ஆராயாமல் அடுத்தகட்டத்துக்குச் செல்ல முடியாது. என்னுடைய முதல் பணி அதுவாகத்தான் இருக்கும்," என்கிறார்.
 
மழை பெய்வது என்பது சுமையல்ல
``முன்பெல்லாம் மழை பெய்வதை ஆண்டு சராசரியில் குறிப்பிட்டனர். இப்போது வார, நாள் சராசரி என்பதாக மாறிவிட்டதே?" என்றோம். `` இனி வரும் காலங்களில் குறுகிய காலங்களில் அதிக மழைப் பொழிவு என்பது தொடரத்தான் செய்யும். அந்த மழையை எவ்வாறு சேமிப்பது என்பதுதான் என்னுடைய அணுகுமுறையாக இருக்கும். உண்மையில் மழைப் பொழிவு என்பது வளம். அதனை எவ்வாறு சேமிப்பது என்பது முக்கியமானது. முன்பெல்லாம் சராசரி மழைப் பொழிவு என்பதை 1000 மி.மீ, 1150 மி.மீட்டர் என்றெல்லாம் குறிப்பிட்டனர்.
 
தற்போது மெட்ரோபாலிடன் பகுதியில் 1400 மி.மீ என்பது சராசரியாகிவிட்டது. இது ஒரு நல்ல மழைப் பொழிவுதான். இவ்வளவு மழை என்பதை சுமையாக நினைக்காமல் அதனை சேமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை நிரம்பிய சென்னையை அதிக நீர்வளம் உள்ள மாவட்டமாக மாற்ற வேண்டும். எனவே, மழை நீர் ஓடிச் செல்வதை எவ்வாறு தடுப்பது என்பதில் கவனம் செலுத்த உள்ளேன்," என்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்