அதிக சதம்: சச்சினை வேகமாக நெருங்கும் விராட் கோலி

செவ்வாய், 10 ஜனவரி 2023 (23:25 IST)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இருபது ஓவர் தொடரை ஏற்கனவே இழந்துவிட்டது. இருபது ஓவர் தொடரில் விளையாடாத விராட் கோலி, அந்த அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளார்.

 
முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் - சுப்மன் கில் ஜோடி சிறப்பான தொடக்கம் தந்ததால் மூன்றாவது வீரராக எந்தவொரு நெருக்கடியும் இன்றி விராட் கோலி களமிறங்கினார். 
 
 
ஸ்ட்ரைக் ரேட் அதிகம் - அபாயகரமான ஷாட்கள் இல்லை
கடந்த மாதம் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் கண்டு சிறப்பான ஃபார்மில் இருந்த கோலி, அதனை அப்படியே தொடர்ந்தார். தொடக்கம் முதலே நேர்த்தியாக ஆடி முத்திரை பதித்தார்.

 
இந்திய அணிக்கு தொடக்க ஜோடி கொடுத்த சிறப்பான அடித்தளத்தை பயன்படுத்திக் கொண்ட அவர், அணியின் ரன் வேட்டையை அப்படியே தொடர்ந்து ரசிகர்களின் உத்வேகம் குறையாமல் பார்த்துக் கொண்டார். 

 
அரைசதம் அடித்த சிறிது நேரத்தில் ரஜிதா பந்துவீச்சில் கொடுத்த கேட்சை குசால் மென்டிஸ் தவறவிட, கிடைத்த வாய்ப்பை விராட் கோலி கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார்.

 
சொந்த ஸ்ட்ரைக் ரேட்டை 125க்கு குறையாமல் பார்த்துக் கொண்டாலும், பந்தை வானத்தை நோக்கி பறக்கவிடுவதை அவர் தவிர்த்தார். 

 
80 பந்துகளில் சதம் விளாசி அசத்திய அவர், முடிவில் 87 பந்துகளில் 113 ரன் சேர்த்து கடைசி ஓவர்களில் ஆட்டமிழந்தார். மொத்தம் 12 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் அவர் விளாசியிருந்தார். 
 
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கோலி அடுத்தடுத்து அடிக்கும் இரண்டாவது சதம் இது. கடந்த மாதம் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் சதம் கண்ட அவர், தற்போது இலங்கைக்கு எதிரான முதல் போட்டியிலேயே மூன்று இலக்க ரன்களை தொட்டுள்ளார்.
 
 
ஒருநாள் போட்டிகளில் 45, ஒட்டுமொத்தத்தில் 73-வது சதம்

 
கோலிக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் 45-வது சதமாகவும், ஒட்டுமொத்தத்தில் 73-வது சதமாகவும் இது பதிவானது. தற்போதைய நிலையில், கோலி 265 ஒரு நாள் போட்டிகளில் 45, டெஸ்டில் 27, இருபது ஓவர் போட்டிகளில் ஒரு சதம் கண்டுள்ளார். 

 
சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்த சதங்கள் வரிசையில் கோலி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்திய பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே கோலியைக் காட்டிலும் அதிக சதங்கள் (100 சதங்களுடன்) முதலிடத்தில் இருக்கிறார். 

 
இலங்கைக்கு எதிராக அதிக சதம் - சச்சின் முந்தினார்

 
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் வரிசையில் சச்சினுடனான இடைவெளியை வேகமாக குறைத்து வரும் கோலி, அவரது மற்ற சில சாதனைகளை தகர்த்துள்ளார். 

 
ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக அதிக சதங்கள் விளாசியவர் என்ற சாதனையை சச்சினிடம் இருந்து கோலி தனதாக்கிக் கொண்டுள்ளார். இலங்கைக்கு எதிராக சச்சின் 8 சதங்கள் விளாசியுள்ள நிலையில், அவரைத் தாண்டி கோலி 9 சதங்களை அடித்துள்ளார். ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக இருவருமே 9 சதங்கள் அடித்து சமநிலையில் உள்ளனர். 

 
சொந்த மண்ணில் அதிக சதம் - சச்சின் சாதனை சமன்

 
ஒருநாள் போட்டிகளில் 257 இன்னிங்ஸ்களில் 12,500 ரன்களை கடந்துள்ள விராட் கோலி, குறைந்த போட்டிகளில் அந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

 
சொந்த மண்ணில் அதிக சதம் அடித்தவர் என்ற சச்சினின் சாதனையை 20 சதங்களுடன் கோலி சமன் செய்துள்ளார். இந்த மைல்கல்லை எட்ட சச்சினுக்கு 160 போட்டிகள் தேவைப்பட்ட நிலையில், கோலி 99 போட்டிகளிலேயே அதனை சாதித்துள்ளார். 

 
ஒருநாள் போட்டி: சதத்தில் சச்சினை விரைவில் முந்த வாய்ப்பு

 
ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ள சச்சினின் சாதனையை தகர்க்க கோலிக்கு இன்னும் 5 சதங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது ஆடி வரும் வீரர்களில் ரோகித் சர்மா 29 சதங்களுடன் மிகப்பெரிய வித்தியாசத்தில் கோலியைப் பின்தொடர்கிறார். 

 
சச்சின் தனது கடைசி 5 சதங்களை அடிக்க 3 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். கோலியைப் பொருத்தவரை 2020-ம் ஆண்டுக்குப் பிறகு 2 சதங்கள் மட்டுமே கண்டுள்ளார். ஆனால், அவையிரண்டுமே அடுத்தடுத்த ஆட்டங்களில் வந்துள்ளன.

 
இதே பார்மை கோலி தொடர்ந்தால், ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் கண்ட வீரர் என்ற சாதனையை அவர் முறியடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்