அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் நியமனங்கள்- உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

திங்கள், 20 செப்டம்பர் 2021 (13:33 IST)
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
 
அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு 2017 ஆம் ஆண்டு அக்கட்சியின் பொதுக்குழு கூடியது. இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்ற பதவியை நீக்கிவிட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டன.
 
`அ.தி.மு.கவின் உள்கட்சி விதிகளுக்கு இது முரணானது' எனக் கூறி திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
அவர் தனது மனுவில், ` அ.தி.மு.கவின் உள்கட்சி விதிகளின்படி புதிய பதவிகளை உருவாக்குவதற்கு பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை. இதுதொடர்பாக, கட்சி விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை ஏற்று 2018 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஜெயலலிதா மரணம் அடைந்தபோது இருந்த உள்கட்சி விதிகளைப் பின்பற்றுவதற்கு அ.தி.மு.க தலைமைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பளித்த நீதிபதிகள், ` கட்சியில் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் அளித்த தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதில் எந்தவித சட்டவிரோதமும் இல்லை. இந்த விவகாரத்தில் உள்கட்சி விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா.. இல்லையா என தேர்தல் ஆணையம் ஆராய முடியாது. மேலும், உள்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது' எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்