பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தாத்தா கைது

சனி, 26 ஜூன் 2021 (13:02 IST)
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தாத்தா, உடந்தையாக இருந்த ஓரு பெண் உள்ளிட்ட 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகளுக்கு 11 மற்றும் 13 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மகளின் கணவர் இறந்துவிட்டதால், மகள் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு தேவகோட்டை அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருகிறார். இதனால் குழந்தைகள் இருவரும் தாத்தா செல்வத்தின் பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர்.
 
இந்நிலையில் குழந்தைகள் அவரது தாய்க்கு போனில், தாத்தா செல்வம் மற்றும் சிலர் தங்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக கூறியுள்ளனர். இதனால் குழந்தைகளின் தாய் 1098 எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் விசாரணை நடத்தி காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
புகாரின் அடிப்படையில் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், சிறுமிகளின் தாத்தா செல்வம், மேலும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், மணி, மற்றும் உதவியாக இருந்த தெரசாள் புனிதாஆகிய நான்கு பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
 
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர் ஒருவர், தொடர்ந்து சிறுமிகளுக்கு தாத்தா செல்வம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் மேலும் ஒருவர் மீது சந்தேகம் உள்ளது. ஆனால் அவர் தற்போது வெளியூரில் உள்ளதால் அவர் குறித்தும் விசாரனை நடத்தப்பட்டு வருகிறது.
 
அக்கம் பக்கத்தினர் சிறுமிகளின் தாயாரிடம் உன் அப்பாவால் உன் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக கூறியும் அதை அந்த தாய் நம்பவில்லை.தொடர்ந்து செல்வம் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். பின்னர் சிறுமிகளே அவர் அம்மாவிடம் கூறியதால் புகார் அளிக்க முன்வந்துள்ளதாக காவலர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்