ஆன்லைன் வகுப்பில் வளர்ப்பு பூனை தோன்றியதால் பணி நீக்கம்: ஆசிரியருக்கு ரூ4.8 லட்சம் இழப்பீடு

ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (13:58 IST)
சீனாவின் குவாங்சௌ நகரத்திலுள்ள ஓவிய ஆசிரியர் ஒருவர் ஆன்லைன் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தபோது, அவருடைய திரையில் பூனை தெரிந்த காரணத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நியாயமற்ற பணி நீக்கத்தை எதிர்த்து அவர் தொடுத்த வழக்கில் 40,000 யுவான், அதாவது இந்திய மதிப்பில் 4.79 லட்சம் ரூபாய் இழப்பீட்டை வென்றுள்ளார்.

லுவோ என்று மட்டுமே அறியப்படும் ஓவிய ஆசிரியர், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஒருநாள் ஆன்லைன் வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கும்போது இது நடந்தது.

லுவோ வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தபோது அவருடைய செல்லப் பூனை ஐந்து முறை கேமராவில் தெரிந்துள்ளது.

மெய்நிகர் வகுப்புகளை நடத்துகின்ற கல்விசார் தொழில்நுட்ப நிறுவனம், அவருடைய திரையில் பூனை திடீரென தோன்றியதைக் காரணம் காட்டி லூவை பணியிலிருந்து நீக்கியது.

லுவோ வகுப்பின்போது "கற்பித்தலோடு தொடர்பில்லாத" நடவடிக்கைகளில் பங்கேற்றதாகவும் அதற்கு முந்தைய வகுப்புக்கு 10 நிமிடங்கள் தாமதாக வந்ததாகவும், குவாங்சௌவ் டெய்லியில் வெளியான செய்தி கூறுகிறது.

லுவோ நடுவர் மன்றத்தில் இந்த முடிவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.

ஆனால், அவரை நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்ததற்காக இழப்பீடு வழங்க வேண்டுமென்று அளிக்கப்பட்ட உத்தரவை ஏற்க மறுத்த அந்நிறுவனம், நீதிமன்றத்தில் அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ததாக இதுகுறித்து அங்கு வெளியான செய்திகள் கூறுகின்றன.

இந்த வழக்கில், குவாங்சௌ டியானே மக்கள் நீதிமன்றத்தின் நீதிபதி லியாவோ யாஜிங் தீர்ப்பளித்தார். அப்போது, "முதலாளிகள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டுமெனச் சொன்னால், அவர்கள் அலுவலகத்திலிருந்து பணியாற்றுவதைப் போன்ற எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கக் கூடாது" என்று நீதிபதி கூறியதாக,சென்ட்ரல் நெட்வொர்க் வானொலி வெளியிட்ட செய்தி கூறுகிறது.

"நிறுவனங்களின் விதிகள் சட்டங்களுக்கு இணங்குவது மட்டுமல்லாமல், நியாயமானதாகவும் ஏற்புடையதாகவும் இருக்க வேண்டும்.

கோவிட் தொற்றுநோய்களின்போது ஊரடங்கு மற்றும் பள்ளிகள் மூடப்படுவதற்கு நடுவே, ஆன்லைன் வகுப்புகள் உலக அளவில் பொதுவானதாகிவிட்டன.

சீனாவிலும் அது தான் நடந்தது. ஆனால், கடந்த ஆண்டு கொள்கையளவில் கொண்டு வரப்பட்ட மாற்றம், கல்வி ஆசிரியர்கள் லாபம் ஈட்டுவதைத் தடை செய்தது. இதனால், நாட்டின் மிகப்பெரிய தனியார் கல்வி நிறுவனங்களின் மதிப்பில் பில்லியன் கணக்கில் இழப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்