விவசாயிகள் போராட்டம்: "குடியரசு தினத்தன்று ராஜ்பாத்தில் டிராக்டர் விடுவோம்"

வெள்ளி, 8 ஜனவரி 2021 (08:02 IST)
டெல்லியில் வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவின்போது ராஜ்பாத் பகுதியில் தடையை மீறி டிராக்டர்களை ஓட்டி மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான உணர்வை வெளிப்படுத்துவோம் என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
 
கிழக்கு மற்றும் மேற்கு புறவழி அதிவிரைவு நெடுஞ்சாலைகளில் வியாழக்கிழமை மிகப்பெரிய அளவிலான டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தினார்கள்.
 
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயத்தை சட்டபூர்வமாக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 43ஆம் நாளாக வியாழக்கிழமை நடந்து வருகிறது. இதையொட்டி எல்லை பகுதிகளில் விவசாயிகள் டிராக்டர்கள் பேரணியை நடத்தினார்கள். சுமார் 1000 டிராக்டர்களில் விவசாயிகள் எல்லை பகுதிகளில் இருந்து புறப்பட்டு ஆங்காங்கே அரசுக்கு எதிராக கோஷமிட்டு சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தினர்.
 
இவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இதுவரை மத்திய அரசு ஏழு சுற்று பேச்சுவார்ததைகளை நடத்தியபோதும் சட்டங்களை திரும்பப் பெறும் நடவடிக்கையில் மத்திய அரசு இசைவு தெரிவிக்கவில்லை. அந்த சட்டங்களில் திருத்தம் செய்வது குறித்து விவாதிக்க தயார் என்று அரசு கூறினாலும், அவற்றை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் தரப்பு வலியுறுத்தி வருகிறது.
 
இந்த நிலையில், டெல்லி சிங்கு எல்லை பகுதியில் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சார்பில் அரசியல் ஆர்வலரும் சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் உறுப்பினருமான யோகேந்திர யாதவ், "ஜனவரி 26ஆம் தேதி சிங்கு, டிக்ரி, காஸிபூர் எல்லைகளிலிருந்து புறப்படும் டிராக்டர்கள் ரேவாசன் ஹரியாணா, கிழக்கு மற்றும் மேற்கு புறவழி அதிவேக விரைவுச்சாலை மற்றும் இடைப்பட்ட பகுதியில் சந்திக்கும்" என்று கூறினார்.
 
"இந்த டிராக்டர்கள் ஜனவரி 26ஆம் தேதியன்று என்ன நடக்கும் என்பதற்கான ஒத்திகையாகக் கருதப்படலாம்," என்று யோகேந்திர யாதவ் தெரிவித்தார்.
 
டெல்லியில் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் வெள்ளிக்கிழமை எட்டாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. இதற்கு முன்னதாக, விவசாயிகளின் ஒற்றுமையை அரசுக்கு காண்பிக்கும் வகையில் இந்த டிராக்டர் பேரணி வியாழக்கிழமை நடத்தப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
 
உச்ச நீதிமன்றத்தில் மனு
 
இதற்கிடையே, மத்திய அரசின் புதிய சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை வியாழக்கிழமை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா மற்றும் வி.ராமசுப்ராமணியன் அடங்கிய அமர்வு பரிசீலித்தபோது, இந்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ஜனவரி 8ஆம் தேதி நடக்கும் பேச்சுவார்த்தையில் விவசாயிகள் தரப்பும் அரசும் புரிந்துணர்வுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறினார்.
 
முன்னதாக, டெல்லி எல்லைகளில் போராட்டம் என்ற பெயரில் விவசாயிகள் பெருமளவில் கூடிவருவது குறித்து கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம், கொரோனா தொற்றில் இருந்து அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என உறுதி செய்யப்படுகிறதா என்று மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியது.
 
இதையடுத்து இந்த மனுக்கள் மீதான விசாரணை வரும் 11ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
அமைச்சரை சந்திக்கும் பிரதிநிதிகள்
 
இதேவேளை விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் இடையே 8ஆவது சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, மத தலைவர் பாபா லக்காவால் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்தார்.
 
இதேபோல, ஹரியாணாவைச் சேர்ந்த விவசாயிகள் குழு வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்து தங்கள் மாநிலத்தில் உள்ள எஸ்.ஒய்.எல் கால்வாயை முடிக்குமாறு கோரியது. டெல்லியில் ஜனவரி 8ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் தங்களுடைய சங்கத்தையும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த குழுவின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.
 
"விவசாயத்தை தனியார்மயமாக்க முயற்சி"
 
இந்த நிலையில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் அம்மாநில காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் புதிய வேளாண் சந்தைப்படுத்தல் சட்டங்கள் மூலம் விவசாயத்தை தனியார்மயமாக்க இந்திய அரசு விரும்புகிறது என்று குற்றம்சாட்டினார்.
 
"ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆரம்பத்தில் இருந்தே தனியார்மயமாக்கலுக்கு ஆதரவானவை. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மேற்கொண்ட வங்கிகளை தேசியமயமாக்கும் திட்டத்தை கூட அவர்கள் (இரு அமைப்புகளும்) எதிர்த்தனர்" என்று கமல்நாத் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்