சுற்றுச்சூழல் தினம்: நோக்கம் என்ன? 2021ஆம் ஆண்டின் கருப்பொருள் என்ன?

வெள்ளி, 4 ஜூன் 2021 (23:30 IST)
நாளை ஜூன் 5, உலக சுற்றுச்சூழல் தினம், பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் ஆண்டுந்தோறும் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.
 
உலகெங்கும் வெப்பம் அதிகரித்து வரலாம், ஆனால் அதன் தாக்கத்தை எல்லோரும் ஒரே மாதிரியாக உணர்வதில்லை. இதேபோலதான் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளும் உள்ளன என்று ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
 
எந்த ஆண்டு முதல் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது?
இன்று உலக சுற்றுச்சூழல் தினம். 1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது.
 
உலக சுற்றுச் சூழல் தினம்: இந்த ஆண்டுக்கான கருப்பொருள் என்ன?
2021ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக `சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு' என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
 
சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு என்பது, சுற்றுச்சூழல் மோசமடைவதை தடுப்பது, அம்மாதிரியான செயல்களை நிறுத்துவது மற்றும் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய பணியாற்றுவது என ஐநா தெரிவித்துள்ளது.
 
எனவே தான் இந்த வருடத்திற்கான கருப்பொருளாக "மறுமுறை யோசிப்பது. மீண்டும் உருவாக்குவது, பாதுகாப்பது" என்பதை நிறுவி உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
 
கடந்த வருடம் 'பல்லுயிர்ப் பெருக்கத்தை' ஐக்கிய நாடுகள் சபை கருப்பொருளாக அறிவித்திருந்தது.
 
பல்லுயிர்ப் பெருக்கம் என்றால் என்ன? அது ஏன் முக்கியமானது?
பல்லுயிர்ப் பெருக்கம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருந்த கருத்து, "பல்லுயிர்ப் பெருக்கம் என்பது அவசரமானது மட்டுமின்றி நமது இருத்தலியலுக்கான நெருக்கடியும் கூட.
 
சமீப காலமாக, பிரேசில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை புரட்டிப்போட்ட காட்டுத்தீ, ஆப்பிரிக்காவை அச்சுறுத்திய வெட்டுக்கிளி தாக்குதல் மற்றும் தற்போது உலகையே உலுக்கி வரும் கோவிட்-19 பெருந்தொற்று நோய் என நாம் பல்வேறு அபாயங்களை சந்தித்து வருகிறோம்.
 
இவையனைத்தும் மனிதர்கள் மற்றும் வாழ்வின் வலைகள் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதை நிரூபிக்கிறது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிலையில், சுற்றுச்சூழல் மற்றும் அதுசார்ந்த தலைப்புகளில் பிபிசி தமிழ் இதுவரை பதிப்பித்த சில முக்கிய கட்டுரைகளை உங்களுக்காக இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
 
இந்தியாவில் 16 லட்சம் உயிர்களை பலி வாங்கிய காற்று மாசு - நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி?
 
38 நாடுகளில் பருவநிலை அவசர நிலை அறிவிப்பு: எல்லா நாடுகளும் அறிவிக்க வேண்டும் - ஐ.நா.
 
பருவநிலை மாற்றம் என்றால் என்ன?
 
புவி வெப்பமயமாதல் உலகில் பேரழிவை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 
மனிதர்களின் செயல்பாடுகளின் காரணமாக கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து, அதன் காரணமாக புவியின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து அதீத வானிலை மாற்றம், துருவ பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட மோசமான மாற்றங்கள் நிலவி வருகின்றன.
 
விரிவாகப் படிக்க: பருவநிலை மாற்றம் என்றால் என்ன? - ஓர் எளிய விளக்கம்
 
சுற்றுச்சூழல் பாதிப்புக்கு யார் காரணம்?
பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான முயற்சியில் ''நெருக்கடியான தருணம் வந்துவிட்டது'' என்று சர் டேவிட் அட்டன்பரோ எச்சரிக்கை விடுத்திருந்தார்.
 
''ஒவ்வொரு வருடமும் நாம் பிரச்சனைகளை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறோம்,'' என்று பிரபல இயற்கை ஆர்வலரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான அட்டன்பரோ கூறியுள்ளார்.
 
எதிர்காலத்தில் மிக அபாயகரமான அளவுக்கு வெப்பநிலை உயர்வதைத் தவிர்ப்பதற்கு என்ன மாதிரியான, சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது பற்றி 2018ல் ஐ.நா. பருவநிலை மாற்ற அறிவியல் குழு பட்டியலிட்டது.
 
விரிவாகப் படிக்க: பருவநிலை மாற்றம்: காரணமாகும் பணக்கார நாடுகள்; பாதிக்கப்படும் ஏழை நாடுகள்
 
’எல்லா நாடுகளும் பருவநிலை அவசரநிலை அறிவிக்க வேண்டும்’
உலகில் உள்ள எல்லா நாடுகளும் பருவநிலை அவசர நிலையை அறிவிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறைகூவல் விடுத்திருந்தார் ஐ.நா. தலைமைச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ்.
 
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் 5ம் ஆண்டு தினத்தை ஒட்டி நடந்த ஒரு முக்கியமான உலகத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பேசும்போது அன்டோனியா குட்டரெஸ் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
 
மேலும் படிக்க: 38 நாடுகளில் பருவநிலை அவசர நிலை அறிவிப்பு: எல்லா நாடுகளும் அறிவிக்க வேண்டும் - ஐ.நா.
 
மரம் நடுவது எப்படி
 
மரம் நடுவது நன்மை தரும்; பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைக் காக்க உதவும் என மரங்கள் பல பலனை தரும். ஆனால் இடத்திற்கு தகுந்தாற்போல ஒரு மரத்தை நடவில்லை என்றால் அதுவே தவறாக முடிந்துவிடும் என்கின்றனர் லண்டனில் உள்ள க்யூ தாவரவியல் பூங்காவை சேர்ந்த நிபுணர்கள்.
 
அதேபோல மரம் நடுவதற்கு முன் நாம் இருக்கும் காடுகளை அழிக்காமல் காப்பதும் முக்கியமான ஒன்று. பூமியில் வாழ்வதற்கு காடுகள் மிக அவசியம்.
 
உலகில் உள்ள நான்கில் மூன்று பங்கு மரங்கள், உயிரினங்களுக்குக் காடுகள்தான் இருப்பிடம். கரியமில வாயுவை உள்வாங்கி, உணவு, எரிபொருள் மற்றும் மருந்து எல்லாம் அளித்து வருவது காடுகள்தான்.
 
மேலும் படிக்க: மரம் நடும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விதிகள்
 
பூமியைக் காக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
"இப்போது செயலாற்றுங்கள். அல்லது மோசமான பிரச்சனையை எதிர்க்கொள்ளுங்கள்.!"
 
இந்த எச்சரிக்கையானது வெப்பமயமாதல் குறித்து ஆய்வில் ஈடுபட்டிருக்கும் உலகின் தலைசிறந்த பருவநிலை ஆய்வாளர்களிடமிருந்து வந்துள்ளது.
 
மேலும் படிக்க: புவியின் எதிர்காலம் உங்கள் கையில் - இதனை செய்வீர்களா?
 
இயற்கையை காக்காவிடில் மனித குலத்தின் எதிர்காலம் என்னாகும்?
பருவநிலை மாற்றத்தின் காரணமாக நமது கடல், பனிக்கட்டிகள் அழிந்து வருகின்றன என ஐ.நா எச்சரித்துள்ளது.
 
ஐ.நா. ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது என்றும், பனிக்கட்டிகள் உருகிவருகின்றன என்றும், மனித செயல்பாடுகளால் சில உயிரினங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்கின்றன என்றும் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்