இருட்டடிப்பு செய்யப்படுகிறாரா பாடலாசிரியர் அறிவு? பின்னணி என்ன?

புதன், 25 ஆகஸ்ட் 2021 (11:43 IST)
கோடிக்கணக்கானவர்களால் பார்த்து ரசிக்கப்பட்ட "என்ஜாயி எஞ்சாமி" பாடலை இயற்றிய பாடலாசிரியரும் பாடகருமான அறிவு என்ற அறிவரசுவின் பெயர், பல தளங்களிலும் புறக்கணிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
 
பாடலாசிரியரும் பாடகருமான 'அறிவு' எனப்படும் அறிவரசு கலைநேசன், ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் அரசு ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தானே எழுதி, பாடிய பாடல்கள் மூலம் அறியப்பட்டவர்.
 
'காலா' திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமான அறிவு, சுயாதீனமான பாடல்கள் மூலமும் பெரும் கவனத்தை ஈர்த்து வந்தார். பாடகி 'தீ'யுடன் இணைந்து இவர் உருவாக்கிய "என்ஜாயி எஞ்சாமி" பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. யூட்யூபில் இந்த வீடியோ சுமார் 32 கோடிக்கு அதிகமான முறை பார்க்கப்பட்டிருக்கிறது.
 
அதேபோல, சந்தோஷ் நாராயணன் இசையில் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் 'நீயே ஒளி' என்ற பாடலை சான் வின்சென்ட் து பால் என்ற பாடகருடன் இணைந்து எழுதி, பாடியிருந்தார். படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் பாடலும் ரீ - மேக் செய்யப்பட்டு யூட்யூபில் வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சான் வின்சென்ட் து பால் தற்போது கனடாவில் வசித்துவருகிறார்.
 
இந்த இரு பாடல்களையும் மாஜா என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. சுயாதீன இசைக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் துணையுடன் இந்த நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் உருவாக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில், சுயாதீன இசைக்கென நடத்தப்படும் Rolling Stone India என்ற இதழின் ஆகஸ்ட் மாத பதிப்பில் தமிழ் இசைக் கலைஞர்கள் எப்படி எல்லை வரையறைகளைத் தாண்டிச் செல்கிறார்கள் என்பதை மையமாக வைத்து ஒரு கவர் ஸ்டோரியை வெளியிட்டது. அந்த இதழின் அட்டைப் படத்தில், பாடகி தீயும் சான் வின்சென்ட் து பாலும் இடம்பெற்றிருந்தனர்.
 
"என்ஜாயி எஞ்சாமி" பாடலையும் 'நீயே ஒளி' பாடலையும் அடிப்படையாக வைத்தே ரோலிங் ஸ்டோன் கட்டுரை எழுதப்பட்டிருந்தாலும் இந்தப் பாடல்களை எழுதிய அறிவு, அட்டைப் படத்தில் இடம்பெறாதது பலரது புருவங்களை உயர்த்தியது. தவிர, அந்தக் கட்டுரைக்குள்ளும் அறிவின் பெயர் சில இடங்களில் மட்டுமே இடம்பெற்றது. அவர் கூறியதாக ஓரிரு வரிகள் மட்டுமே அந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருந்தன.
 
இப்படி அறிவின் பெயர் புறக்கணிக்கப்படுவது குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் முதலில் கேள்வி எழுப்பினார். ரோலிங் ஸ்டோன் இதழ் வெளியிட்டிருந்த ட்வீட்டை முன்வைத்து கேள்வி எழுப்பிய ரஞ்சித், "'நீயே ஒளி' பாடலை எழுதியவர், 'என்ஜாயி எஞ்சாமி' பாடலை எழுதிப் பாடியவரான தெருக்குரல் அறிவு மீண்டும் ஒரு முறை காணாமலாக்கப்பட்டுள்ளார். பொதுவெளியில் ஒருவருக்கான அங்கீகாரத்தை அழிப்பது குறித்துத்தான் இந்த இரு பாடல்களும் பேசுகின்றன என்பதை புரிந்து கொள்வது அவ்வளவு சிரமமா?" என கூறியிருந்தார்.
 
இயக்குநர் சி.எஸ். அமுதனும் இதற்குத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்தார். "அறிவின் பெயர் வேண்டுமென்றே மறைக்கப்படவில்லையென்றால், தீ, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் இது குறித்துப் பேச வேண்டும். இல்லாவிட்டால், இது வரலாற்று அநீதியாகிவிடும். யுத்தத்தின் சரியான பக்கத்தில் இவர்கள் நிற்கிறார்கள் என நாம் நம்புகிறோம். அவர்கள் சரியான விஷயத்தைச் செய்வார்கள் என்று நம்புவோம்" என தனது ட்வீட்டில் குறிப்பிட்டார் சி.எஸ். அமுதன்.
 
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்தான் 'தீ'யின் தந்தை என்பதாலும் 'என்ஜாயி எஞ்சாமி' பாடலை உருவாக்கிய மாஜா நிறுவனத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆதரித்து வருகிறார் என்பதாலும் இருவரையும் தனது ட்வீட்டில் இணைத்திருந்தார் சி.எஸ். அமுதன்.
 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளரான வன்னியரசுவும் இது குறித்துக் கேள்வியெழுப்பியிருந்தார். "எஞ்ஜாயி எஞ்சாமி' பாடல் உலகம் முழுக்க பல கோடி பேரை ஈர்த்துள்ளது. இசை அமைத்து தயாரித்துள்ள இசை அமைப்பாளர் பெயர் இடம்பெற்றுள்ளது. ஆனால் அப்பாடலை எழுதிய கவிஞர் தெருக்குரல் அறிவின் பெயர் இப்போது நீக்கப்பட்டிருக்கிறது. இது அறிவுச் சுரண்டல். இதற்கான காரணத்தை இசையமைப்பாளர் சந்தோஷ் விளக்குவாரா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
 
அறிவின் பெயர் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்திருப்பது முதல்முறையில்லை என்பதுதான் இத்தனை கண்டனக் குரல்களுக்கும் காரணம். மாஜா நிறுவனம் 'என்ஜாயி எஞ்சாமி' பாடலை பிரெஞ்சு இசைக் கலைஞான டிஜே ஸ்னேக்குடன் இணைந்து ரீ - மேக் செய்தபோது, அதில் பாடகி தீ மட்டும் இணைத்துக்கொள்ளப்பட்டார். அறிவு சேர்த்துக்கொள்ளப்படவில்லை. மேலும் இந்தப் பாடலுக்காக அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயரில் விளம்பரப் பலகை வைக்கப்பட்டபோது, அதில் பாடகி தீ மற்றும் டிஜே ஸ்னேக் ஆகிய இருவரின் படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.
 
இந்தக் கண்டனக் குரல்களுக்குப் பிறகு ரோலிங்ஸ்டோன் இந்தியா வெளியிட்ட மற்றொரு ட்வீட்டில், இந்தப் பாடல்களோடு சம்பந்தப்பட்ட அனைவரது பெயரும் இடம்பெற்றதோடு படங்களும் இடம்பெற்றிருந்தன.
 
இந்த ட்வீட்டின் மூலம் இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர நினைத்தது ரோலிங்ஸ்டோன். ஆனால், அறிவின் பெயர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது ஏன் என்ற கேள்விகளுக்கு விடையில்லை.
 
இந்தப் பாடல்களோடு சம்பந்தப்பட்ட பல்வேறு நபர்கள் மீது இதற்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் இது குறித்து வெளிப்படையாகப் பேசுவதற்கு யாரும் முன்வரவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்