மேற்கு வங்கம் பவானிபூரில் செப்டம்பர் 30 இடைத் தேர்தல் - மம்தா போட்டி

சனி, 4 செப்டம்பர் 2021 (15:09 IST)
மேற்கு வங்க மாநிலம் பவானிபூர் சட்டமன்றத் தொகுதிக்கு செப்டம்பர் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று சனிக்கிழமை அறிவிப்பு. 
 
மேற்கு வங்க மாநிலம் பவானிபூர் சட்டமன்றத் தொகுதிக்கு செப்டம்பர் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று சனிக்கிழமை அறிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், மம்தா பானர்ஜி தாம் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தமது முன்னாள் தளபதியான சுவேந்து அதிகாரியிடம் நூலிழையில் தோற்றுப் போனார்.
 
தற்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லாத மம்தா பானர்ஜி தமது முதல்வர் பதவியில் தொடரவேண்டுமானால் ஏதாவது ஒரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெல்லவேண்டும். எனவே, அவர் பவானிபூரில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும். பவானிபூர் தவிர மேற்கு வங்கத்திலேயே சாம்சர்கஞ்ச், ஜாங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கும் ஒடிஷாவில் பிப்லி தொகுதியிலும் செப்டம்பர் 30-ம் தேதியே இடைத் தேர்தல் நடக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்