நித்தியானந்தாவின் கைலாசா போல உங்களுக்கும் சொந்த நாடு வேண்டுமா? – இப்படி செய்தால் கிடைக்கும்
திங்கள், 6 மார்ச் 2023 (23:51 IST)
இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா தான் ஒரு தேசத்தை உருவாக்கியதாக அறிவித்தார். அதற்கு கைலாசா என்றும் பெயர் சூட்டப்பட்டது. அதைப் போலவே நீங்களும் சொந்த நாட்டை உருவாக்கலாம். எப்படி என்பதை இங்கு பார்ப்பொம்.
இந்த கைலாசாவின் பிரதிநிதியாக சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டங்களில் பெண் ஒருவர் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இறுதியாக அந்தக் கூட்டங்களில் இருந்து கைலாசா பிரதிநிதியின் பேச்சு நீக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
அந்த சர்ச்சை ஒருபுறம் இருக்கட்டும், நித்தியானந்தாவை போல நமக்கென்று ஒரு தேசத்தையோ ராஜ்ஜியத்தையோ உருவாக்க முடியுமா?
இருக்கமுடியும். ஏற்கெனவே நித்தியானந்தா போல சொந்த நாடுகளைச் சிலர் அறிவித்துள்ளனர்.
சொந்த நாடு உருவாக்குவது எப்படி?
"எனக்கென ஒரு நாடு, அதில் நானே ராஜா, நானே மந்திரி" என்று கனவு காண்பவர்கள் உண்டு. அந்தக் கனவுகள் நனவாகிவிட்டன எனச் சொல்பவர்களும் உண்டு.
சொந்தமாக நாடு ஒன்றை உருவாக்க முதலில் கொஞ்சம் நிலம் இருக்க வேண்டும். லட்சம், கோடி ஏக்கர் என இல்லாவிட்டாலும், ஒரு ஏக்கராவது இருந்தாலும்கூட ஒரு நாடு உருவாக்கப்படலாம்.
இல்லையென்றால், உலகில் எந்த நாடும் கட்டுப்படுத்தாத நிலத்தில் ஒரு நாட்டை உருவாக்கலாம். உங்களுடைய கொடியை அங்கு நட்டு இது என் நாடு என்று சொல்லலாம்.
அன்டார்டிகாவில் இதுபோன்று மக்கள் வசிக்காத பகுதி நிறைய உள்ளது. எனவே நீங்கள் அங்கு ஒரு கொடியை நட்டு ஒரு நாட்டை உருவாக்கலாம். ஆனால் நீங்கள் -50 டிகிரி குளிரை தாங்குபவராக இருக்க வேண்டும். எகிப்துக்கும் சூடானுக்கும் இடையே உள்ள பிர் தவில் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. ஆனால், அது முழுவதும் மணல் பாலைவனம்.
இந்த பிர் தவில் பகுதியில் ஒரு தேசம் நிறுவப்பட்டுள்ளதாக இந்தூரை சேர்ந்த சுயாஸ் தீட்சித் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
மக்கள் இல்லாத அந்தப் பாலைவனப் பகுதிகள் எதற்கு என யோசித்தால், வேறு வழி இருக்கிறது. ஒருவரிடம் நிறைய பணம் இருந்தால், எந்த நாட்டிலாவது தீவுகளை விலைக்கு வாங்கலாம். அந்தத் தீவை ஒரு நாடாக அறிவிக்கலாம். ஆனால், அதற்கு உங்களுக்குத் தீவை விலைக்குக் கொடுக்கும் நாடும் சம்மதிக்க வேண்டும்.
லட்சங்களில் மக்கள்தொகை கொண்ட பல சிறிய தீவு நாடுகள் உள்ளன. அந்த நாட்டு அரசுகள் சம்மதித்தால், பணம் கொடுத்து அவற்றைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
நிலத்தில் கிடைக்கவில்லை என்றால் தண்ணீரில் கொடியை நட்டு ஒரு நாட்டை அமைக்கலாம். சர்வதேச கடல் பரப்பு எந்தவொரு நாட்டின் அதிகார வரம்புக்கும் உட்பட்டது அல்ல. எனவே, கடலில் ஒரு தீவை செயற்கையாக உருவாக்கி ஒரு நாடாக அறிவிக்கலாம்.
ஒரு நாட்டை உருவாக்குவது எப்படி?
தரையிலோ தண்ணீரிலோ ஒரு சிறிய இடத்தைப் பார்க்கிறிரீகள். இப்போது அதை ஒரு நாடாக அறிவிக்க வேண்டும். அதற்கு நான் தலைவன் என்று சொல்ல வேண்டும். சரி, இவையனைத்தையும் எப்படிச் செய்வது?
1933ஆம் ஆண்டின் மான்டிவீடியோ மாநாட்டின்படி, ஒரு நாடு என்றால் அது சில பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். அவை,
ஒரு நாடு அல்லது ஒரு ராஜ்ஜியம் என்பது இன்னும் பலவற்றைக் குறிக்கிறது. அதற்கென ஒரு பெயர் இருக்க வேண்டும். தேசிய கொடி, தேசிய சின்னம், மொழி என்றும் இன்னும் பல. அதற்கு அடுத்த முக்கியமான விஷயம் நிர்வாக அமைப்பு.
உங்கள் நாட்டில் ஜனநாயகம் வேண்டுமா அல்லது நானே அரசன், நானே மந்திரி என்ற முறையில் மன்னராட்சி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். அதன்படி அரசமைப்பு எழுதப்பட வேண்டும்.
ஒரு தேசம் என்பது மக்களைக் கொண்டது. மக்கள் இருந்தால் அவர்களுக்கு உணவு தேவை. அதற்கு வேலை வேண்டும். வேலை செய்வதற்குப் பொருளாதாரம் இருக்க வேண்டும். எனவே, வருமானம் ஈட்டும் அம்சங்கள் கண்டறியப்பட வேண்டும். அதோடு நாட்டிற்கு என ஒரு நாணயம் உருவாக்கப்பட வேண்டும்.
இந்திய ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகள் நிதி விவகாரங்கள், பணப் பரிமாற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
இப்போது உங்களுக்கென ஒரு நாடு இருக்கிறது. மக்கள் அதில் வாழ்கிறார்கள். ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.
இதுபோக, உங்கள் நாட்டை நான்கு அடையாளங்கள் அடையாளப்படுத்துகின்றன. இன்றைய உலகில் எந்த தேசமும் தனித்து வாழ முடியாது. மற்ற நாடுகளின் உதவி தேவை, ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்.
சர்வதேச அங்கீகாரம் இல்லாவிட்டாலும்கூட உங்கள் நாடு நிலைத்து நிற்கும். ஐ.நா சாசனத்தின்கீழ் உங்களுக்குச் சில நன்மைகள் உள்ளன. எல்லைகளின் பாதுகாப்பும் இறையாண்மையின் பாதுகாப்பும் கிடைக்கும்.
சர்வதேச அங்கீகாரம் பெறவும் வர்த்தக உறவுகளை அதிகரிக்கவும் நாம் ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகளில் சேர வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து சுதந்திரமாக நாடுகள் இருக்க முடியும்.
ஒரு நாட்டிற்கு அங்கீகாரம் வழங்கும் சர்வதேச அமைப்பு என்று எதுவுமில்லை. சில நாடுகள் 'எங்கள் சுதந்திர நாடு' என்று சில பிரதேசங்களை அறிவிக்கின்றன. மற்றவர்கள் அதை அங்கீகரிப்பதில்லை. இது அந்தந்த நாடுகளைப் பொறுத்தது.
நீங்கள் ஐக்கிய நாடுகள் சபையில் சேர விரும்பினால், உறுப்பினராக சேர்க்கக் கோரி பொதுச் செயலாளருக்குக் கடிதம் எழுத வேண்டும்.
அதற்குப் பிறகு, ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் விவாதித்து பொதுச் சபைக்கு பரிந்துரைக்க வேண்டும்.
பொது சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஒரு நாடு ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக முடியும்.
யாராவது தனி நாடுகளை அமைத்துள்ளார்களா?
நாடுகளை உருவாக்குவதும் இறையாண்மையை அறிவிப்பதும் ஒன்றும் புதிதல்ல. அத்தகைய நாடுகள் ஏற்கெனவே உள்ளன.
பிரித்தானியாவிற்கு அருகில் வடக்கு கடலில் உள்ள 'பிரின்சிபாலிட்டி ஆஃப் சீலாண்ட்' என்ற சுய-அறிவிக்கப்பட்ட நாடு உள்ளது. இது பிரிட்டனின் கடற்கரையில் இருந்து சுமார் 12கிமீ தொலைவில் உள்ளது.
இரண்டாம் உலகப் போரின்போது நாஜி விமானத் தாக்குதல்களை எதிர்கொள்ள பிரிட்டன் விமான எதிர்ப்புத் தளங்களை உருவாக்கியது. அங்கு சுமார் 300 பிரிட்டிஷ் வீரர்கள் பணியாற்றினார்கள். 1956இல் பிரிட்டன் அங்கிருந்து வெளியேறியது.
முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி ராய் பேட்ஸ் 1967இல் ஹெச்எம் ஃபோர்ட் ரஃப்ஸை கோட்டையைக் கைப்பற்றினார். அதன்பிறகு அதை அவர் ஒரு தேசமாக அறிவித்தார். அவர் அதற்கு சீலாண்ட் என்று பெயரிட்டு தன்னை இளவரசர் என்று அழைத்துக்கொண்டார்.
ராய் பேட்ஸ் 2012இல் தனது 91 வயதில் உயிரிழந்தார். அதன் பிறகு அவரது மகன் மைக்கேல் ஆட்சியைப் பிடித்தார். அவர்களது உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் சேர்த்தால் 50 பேர் வரை அந்த நாட்டில் வசித்து வந்தனர்.
இந்த நாட்டை இதுவரை யாரும் அங்கீகரிக்கவில்லை. தங்களுக்கு யாருடைய அங்கீகாரமும் தேவையில்லை என்கிறார்கள். இதுவரை 500 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக மெக்கேல் தெரிவித்தார். சீலாண்ட் அதன் சொந்த நாணயம் மற்றும் கால்பந்து அணியையும் கொண்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த சுயாஸ் தீட்சித் என்பவர் 2017ஆம் ஆண்டு ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியதாக அறிவித்தார். எகிப்துக்கும் சூடானுக்கும் இடையே உள்ள பிர் தவில் என்ற இடத்தில் 'தீட்சித் ராஜ்ஜியம்' நிறுவப்பட்டதாக அவர் கூறினார்.
சுமார் 2,000 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட பிர் தவில் பகுதியில் எந்தவொரு நாட்டிற்கும் உரிமை இல்லை. அங்கு தனது ராஜ்ஜியத்தை நிறுவிய சூயாஸ் தன்னை ராஜாவாக அறிவித்தார்.