கமல், சீமான், தினகரன் அறிவித்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

செவ்வாய், 16 மார்ச் 2021 (09:56 IST)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தொடங்கிய நிலையில், முக்கிய கட்சிகள், கூட்டணிகளின் வேட்பாளர்கள் நேற்று தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
 
அவர்களின் முன்னணி வேட்பாளர்கள் சிலரது சொத்து மதிப்பு விவரங்கள்.
 
சீமான் சொத்து மதிப்பு எவ்வளவு?
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் நேற்று, திங்கள்கிழமை, தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
 
வேட்பு மனுவுடன் அவர் தாக்கல் செய்த சொத்து விவரத்தில், தமக்கு உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.31,06,500 என்றும், அசையா சொத்துகள் ஏதுமில்லை என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
 
தன் மனைவிக்கு உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.63,25,031 என்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.25,30,000 என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
 
தமக்குக் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.65,500 வருமானம் வந்துள்ளதாகவும் சீமான் அதில் குறிப்பிட்டுள்ளார்.
 
குறிப்பாக 2019-20ஆம் நிதியாண்டில் தமக்கு வந்த ஆண்டு வருமானம் ரூ.1000 மட்டுமே என சீமான் தெரிவித்துள்ளார்.
 
கமல்ஹாசன் சொத்து மதிப்பு எவ்வளவு?
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் நேற்று, திங்கள்கிழமை, தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
 
கமல் ஹாசன் தமக்கு 45,09,01,476 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், 131,84,45,000 ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். இவரது மொத்த சொத்து மதிப்பு 176.93 கோடி ரூபாய்.
 
தமக்கு 49 கோடியே 50 லட்சத்து 11 ஆயிரத்து 10 ரூபாய் கடன் இருப்பதாகவும் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
 
டிடிவி தினகரன் சொத்து மதிப்பு எவ்வளவு?
 
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் நேற்று தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
 
டிடிவி தினகரன் தமது பெயரில் உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு 19,18,485 ரூபாய் என்றும், அசையா சொத்துகளின் மதிப்பு 57,44,008 என்றும் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 
அவரது மனைவி பெயரில் உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு 7,66,76,730 ரூபாய் என்றும் அசையா சொத்துகளின் மதிப்பு 2,43,76,317 ரூபாய் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.
 
தமது வாரிசுதாரர் பெயரில் அசையும் சொத்தாக 1,39,76,777 ரூபாய் இருப்பதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்