ஆபத்தான ஒமிக்ரானை லேசானது என்றழைக்கக் கூடாது - உலக சுகாதார அமைப்பு
வெள்ளி, 7 ஜனவரி 2022 (09:56 IST)
ஒமிக்ரான் திரிபு லேசான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்று விவரிப்பதற்கு எதிராக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக நாடுகளில் ஒமிக்ரான் திரிபு மக்களை கொன்று வருகிறது எனவும் கூறியுள்ளது.
கொரோனாவின் முந்தைய திரிபுகளை காட்டிலும், குறைந்த அளவிலேயே ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீவிரமான உடல் நலக்குறைவு ஏற்படுகிறது என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால் ஒமிக்ரான் திரிபு பரவும் வேகத்தால், அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சுகாதார அமைப்புகள் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த திங்கட்கிழமை மட்டும், 24 மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் 71% அதிகரித்திருப்பதாகவும், அமெரிக்காவில் 100% அதிகரித்திருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. உலகம் முழுக்க கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் 90% பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
"கொரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு, டெல்டா திரிபை விட குறைவாகவே நோய் தீவிரத்தன்மை கொண்டது போலத் தெரிகிறது. குறிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு. எனவே ஒமிக்ரானை லேசானது என வகைப்படுத்த முடியாது" என டெட்ரோஸ் வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறினார்.
"முந்தைய திரிபுகளைப் போல, ஒமிக்ரான் திரிபும் மக்களை மருத்துவமனையில் சிகிச்சை பெற வைக்கிறது, அது மக்களை கொல்கிறது.
"உண்மையில், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவான காலத்தில் மிக அதிகமாக உள்ளது, அது உலகம் முழுக்க உள்ள சுகாதார அமைப்புகளை கடுமையாக பாதிக்கின்றன." என்றார் டெட்ரோஸ்.
ஒமிக்ரான் திரிபு அதிக தொற்றுத்தன்மை கொண்டது மற்றும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்குக் கூட தொற்றை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது.
கடுமையாக நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதிலிருந்து, மக்களை பாதுகாப்பதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
வியாழக்கிழமை பிரிட்டனில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 756 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர், 231 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். அந்நாட்டில் உள்ள பல மருத்துவமனைகள், சுகாதாரப் பணியாளர்கள் இல்லாதது மற்றும் அதிகரித்து வரும் கொரோனா அழுத்தம் காரணமாக கிரிட்டிக்கல் இன்சிடண்ட்ஸ் என கூறப்படும், சிகிச்சையளிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளன.
மற்ற நாடுகளில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜனவரி 2022 மருத்துவமனைகளுக்கு கடினமானதாக இருக்கும் என பிரான்ஸ் நாட்டின் சுகாதார அமைச்சர் ஒலிவியர் வெரன் இந்த வாரம் எச்சரித்தது நினைவுகூரத்தக்கது.
ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சாதாரண படுக்கைகளை நிரப்புகிறார்கள், மறுபக்கம் டெல்டாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை தீவிர சிகிச்சை பிரிவின் மீது அழுத்தம் கொடுக்கிறது என்று கூறினார் ஒலிவியர். பிரான்ஸ் நாட்டில் வியாழக்கிழமை ஒரே நாளில் 2.61 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தங்கள் நாட்டின் சுகாதார கட்டமைப்புகள் பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டிருப்பதாக செர்பியாவின் அதிபர் அலெக்சாண்டர் வுசிக் கூறினார். அந்நாட்டில் வியாழக்கிழமை மட்டும் 9,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
ஏழை நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த நிறைய கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார் டாக்டர் டெட்ரோஸ்.
தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் வேகத்தை வைத்துப் பார்க்கும் போது, வரும் ஜூலைக்குள் 70% மக்கள்தொகை தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்கிற இலக்கை, 109 நாடுகள் எட்ட முடியாமல் போகலாம் என்று கூறினார்.
மேற்கத்திய நாடுகள் பூஸ்டர் திட்டங்களின் பெயரில் கொரோனா தடுப்பூசிகளைப் பதுக்கவில்லை எனில், 2022ஆம் ஆண்டு உலகில் வயது வந்தோர் அனைவருக்கும் தேவையான தடுப்பூசி கிடைக்கும் என கடந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.