கியூபாவில் 43 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரதமர் பதவி
திங்கள், 23 டிசம்பர் 2019 (17:47 IST)
கியூபாவில் 43 ஆண்டுகளுக்கு பின் பிரதமர் பதவிக்கு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் மேனுவேல் மாரேரோ க்ரூஸை நாட்டின் பிரதமாராக அதிபர் மிகேல் டயஸ் கனேல் நியமித்திருக்கிறார். கியூபப் புரட்சிக்கு தலைமை வகித்த ஃபிடல் காஸ்ட்ரோவால் பிரதமர் பதவி 1976ல் நீக்கப்பட்டது.
கியூபாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமலாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின்படி பிரதமர் பதவி மீண்டும் உருவாக்கப்பட்டது. அதிபரிடம் இருக்கும் சில பொறுப்புகளை தற்போது பிரதமாராகும் மாரேரோ ஏற்பார்.
அதிபரின் 'நிர்வாக ரீதியிலான வலது கரமாக பிரதமர் பொறுப்பு திகழும்' என கியூபாடிபேட் என்னும் அரசு நடத்தும் பத்திரிக்கை கூறியுள்ளது. ஆனால் இவையனைத்தும் வெறும் தோற்றத்திற்கானது என விமர்சகர்கள் கூறிவருகின்றனர். ஏனென்றால் கம்யூனிஸ்ட் கட்சியும் ராணுவமும்தான் இன்னும் நாட்டின் முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலையில் உள்ளன.
எவ்வாறு நியமிக்கப்பட்டார் பிரதமர்?
56 வயதாகும் மாரேரோ கியூபா நாடாளுமன்றத்தால் சனிக்கிழமையன்று பிரதமர் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கியூபா நாட்டின் முக்கிய அந்நிய செலவாணியை ஈட்டும் துறையான சுற்றுலாத்துறையே மாரேரோவுக்கு ’அரசியல் அடிப்படை’ என அந்நாட்டு பத்திரிக்கை க்ரான்மா கூறியுள்ளது.
2000ல் ராணுவத்தால் நடத்தப்படும் கேவியோட்டா சுற்றுலா குழுமத்தின் தலைவரானார் மாரேரோ. இந்நிறுவனத்திற்கு பொருளாதார தடை விதித்துள்ளது அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம். 2004ல் ஃபிடல் காஸ்ட்ரோவால் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக பாராட்டப்பட்டவர் சுற்றுலாத்துறை அமைச்சர் மாரேரோ.
அவர் பிரதமரானபின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பாரா என்பது தெளிவாக தெரியவில்லை. மாரேரோவை பிரதமராக அறிவித்தபோது அவர் அந்நிய முதலீட்டாளர்களை ஈர்த்தது குறித்து புகழ்ந்தார் மிகேல் டயஸ் கேனல்.
அவருடைய நேர்மை, வேலைத்திறன் ஆகியவற்றை மேற்கோள் காட்டினார் மிகேல். கம்யூனிஸ்ட் புரட்சியின் பின் ஃபிடல் காஸ்ட்ரோ 1956ல் கியூபாவின் பிரதமாராக தன்னை அறிவித்து கொண்டார்.
அதன்பின் 1976ல் பிரதமர் பதவி நீக்கப்பட்டபோது கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அமைச்சரவை மற்றும் சட்டமியற்றலில் முக்கிய முடிவுகளை எடுக்கும் கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் ஆகிய இரண்டுக்கும் தலைவரானார்.
2006ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக தன்னுடைய சகோதரனான ரவுல் காஸ்ட்ரோவிடம் தன் அதிகாரத்தைக் கொடுத்தார். 2016ல் இறந்தார் ஃபிடல் காஸ்ட்ரோ.
2018ல் ரவுல் காஸ்ட்ரோ அதிபர் பதவியைவிட்டு விலகினார். ஆனால் கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக அவர் தொடர்கிறார்.