கொரோனா வைரஸ்: 900 கி.மீ நடந்து சொந்த ஊருக்கு செல்லும் கூலித் தொழிலாளர்கள் - இந்திய சோகம்

சனி, 28 மார்ச் 2020 (15:59 IST)
இந்திய தலைநகர் டெல்லியிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கூட்டம் கூட்டமாக நடந்தே செல்கின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 21 முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

டெல்லியில் வாழும் காய்கறி விற்பவர்கள், ரிக்ஷா ஓட்டுபவர்கள், கட்டுமான தொழிலாளர்கள் பலரும் அருகில் உள்ள உத்தரப்பிரதேசம், பிகார் போன்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

தற்போது இந்த ஊரடங்கு உத்தரவால் பணி இல்லாமல், செய்வதறியாமல் தவித்த தொழிலாளர்கள், சாரை சாரையாக அவர்களது சொந்த ஊர்களுக்கு நடந்து செல்கிறார்.

பல ஆண்கள், சில பெண்கள் மற்றும் குழந்தைகள் மூட்டை முடிச்சுடன் நேற்று டெல்லியிலிருந்து புறப்பட்டு காசிபூர் வழியாக உத்தரப்பிரதேசத்தை நோக்கி சென்றனர்.
 
ஒரு நாளில் மட்டும் சுமார் 10,000 பேர் டெல்லி எல்லையை கடந்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டெல்லி - உத்தர பிரதேச எல்லையான காசிபூரில் அரசு ஏற்பாடு செய்த சிறப்பு பேருந்துக்காக சிலர் காத்திருக்கிறார்கள் என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது

அப்படி மேற்கு டெல்லியின் நஜப்கர் பகுதியிலிருந்து, உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஃபதேப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு செல்ல 570 கிலோ மீட்டர் பயணத்தைத் தொடங்கினார் 35 வயதான தன்ராஜ்.

கட்டுமான இடங்களில் இரும்புக் கம்பிகளைப் பொறுத்தும் வேலையைச் செய்து கொண்டிருந்த அவர், நாள் ஒன்றுக்கு 300- 400 ரூபாய் வரை சம்பாதித்துக் கொண்டிருந்தார்.

"என்னிடம் பணம் இல்லை. என் வீட்டு உரிமையாளர் என்னிடம் வாடகை கேட்டார். என்னால் வாடகை கொடுக்க முடியவில்லை என்றால், வீட்டை விட்டு காலி செய்யுமாறு கூறினார். நான் வேலை பார்த்த இடத்திலும் காசு இல்லை என்று கூறிவிட்டார்கள். எனவே நான் என் ஊருக்குப் போவதுதான் நல்லது. ஆனால், நடந்து செல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை" என்று பிடிஐ நிறுவனத்திடம் பேசிய தன்ராஜ் கூறினார்.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், அனைத்து ரயில் சேவைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆயிரக்கணக்கானோர் உண்ண உணவு மற்றும் அருந்த தண்ணீர் இல்லாமல் தவிப்பதாக கூறுகின்றனர்.

தொண்டு நிறுவனங்கள் சில, இவ்வாறு பயணம் செய்யும் மக்களுக்கு ஆங்காங்கே உணவு மற்றும் குடிநீர் குடித்து உதவி வருகின்றனர்.

இதுகுறித்து ட்வீட் செய்திருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுமக்கள், காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள், பயணம் மேற்கொண்டிருக்கும் தொழிலாளர் மக்களுக்கு உணவு மற்றும் தங்கும் இடம் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும், இவ்வாறு ஆயிரக்கணக்கான மக்கள் இப்படி பயணிக்கும் அவல ஏற்பட்டதற்கு அரசாங்கம்தான் பொறுப்பு. இது மிகப்பெரிய குற்றம். பெரிய துன்பம் ஏதும் நேர்வதற்குள் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

"நான் அகமதாபாத்தில் இருந்து வருகிறேன். என் வீடு உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் இருக்கிறது. எனக்கு அகமதாபாத்தை விட்டு தற்போதைக்கு வர விருப்பம் இல்லை என்றாலும். என்னை வேலையில் வைத்திருந்த நபர் காசு கொடுக்க மறுத்துவிட்டார். கடந்த மூன்று நாட்களாக சரியாக சாப்பிடவில்லை" என்று கூறுகிறார் ராஜஸ்தான் ஜெய்பூரில் தற்போது இருக்கும் ஒருக்கூலித் தொழிலாளி.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருக்கும் மக்களை விமானம் வைத்து இந்தியா அழைத்து வர தெரிந்த அரசிற்கு, கூலித் தொழிலாளிகளுக்கு எந்த அடிப்படை போக்குவரத்து வசதிகளும் இல்லை என்பது தெரியவில்லையா என பலரும் சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்