இந்த மருந்தினை தங்கள் உடலில் செலுத்தி பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள விரும்புகிற தன்னார்வலர்களுக்கு மருந்து செலுத்துவது தொடங்கிவிட்டது. அடுத்த சில வாரங்களில் 300 பேர்களுக்கு இந்த மருந்து செலுத்தப்படும். லண்டன் இம்பீரியல் கல்லூரிப் பேராசிரியர் ராபின் ஷட்டாக் குழுவினர் இந்தப் பரிசோதனையை நடத்துகிறார்கள்.
முன்னதாக விலங்குகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்பதும், பயனுள்ள வகையில் நோயெதிர்ப்பு எதிர்வினையைத் தூண்டுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக வல்லுநர்கள் ஏற்கெனவே மனிதர்களிடம் பரிசோதனையைத் தொடங்கிவிட்டனர்.
கொரோனாவுக்கு உலகின் பல இடங்களில் இது போல தனித்தனியாக சுமார் 120 தடுப்பு மருந்து ஆராய்ச்சித் திட்டங்கள் நடந்து வருகின்றன. நிதி துறையில் பணியாற்றும் 39 வயது கேத்தி என்பவர் இந்த தடுப்பு மருந்தினை முதலில் ஏற்றி பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள முன்வந்தவர்களில் ஒருவர். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்காற்றவேண்டும் என்பதற்காகவே இந்த பரிசோதனைக்கு முன்வந்ததாக அவர் குறிப்பிட்டார்.