தகனம் செய்யப்படும் கொரோனாவால் இறந்த முஸ்லிம்கள்: பிரச்சனை எழுப்பும் ஜாகிர் நாயக்
செவ்வாய், 5 ஜனவரி 2021 (14:04 IST)
இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை வலுக்கட்டாயமாக அந்த நாட்டு அரசு தகனம் செய்து வருகின்ற விவகாரம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு (Organization Islamic Cooperation) மிக விரைவில் கொண்டு செல்லப்படும் என இந்தியாவைச் சேர்ந்தவரும் தற்போது மலேசியாவில் வசித்து வருபவருமான இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.
மேலும், முஸ்லிம்கள் மட்டுமன்றி கிறிஸ்தவர்களும் மரணித்தவர்களின் உடல்களை தகனம் செய்வதில்லை என்றும், இவ் விவகாரம் தொடர்பில் கிறிஸ்தவ நாடுகளும் ஒன்றிணைந்து இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களை வழங்கும் என தாம் நம்புவதாக அவர் கூறினார்.
இதேவேளை, துரதிருஷ்டவசமாக உலகளவில் முஸ்லிம்கள் ஒற்றுமையாக இல்லை என்று கூறியுள்ள ஜாகிர் நாயக், "உலகில் 57 நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். 2 பில்லியன் முஸ்லிம்கள் உலகில் வாழ்கின்றனர். உலக சனத்தொகையில் முஸ்லிம்கள் 25 வீதம் உள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக முஸ்லிம்கள் ஒற்றுமையாக இல்லை" என தெரிவித்துள்ளார்.
"முஸ்லிம் நாடுகள் சுய லாபங்களுக்காக தங்களுக்கிடையில் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. கடந்த காலத்தைப் போல் முஸ்லிம் சமூகம் ஐக்கியப்படுமானால், அப்போது நிலைமை வித்தியாசமாக இருக்கும்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'முஸ்லிம்கள் ஒரு உடலைப் போன்றவர்கள், உடலின் ஒரு பகுதியில் வலித்தால், அந்த வலி முழு உடலுக்கும் பரவும்' என்கிற முகம்மது நபியவர்களின் உபதேசத்தை நினைவுபடுத்திய ஜாக்கீர் நாயக்; "இலங்கையில் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மேற்கொள்ளப்படும் அநீதிக்கு எதிராக சர்வதேச ரீதியில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு எழுந்து நின்றால், தனது சட்டத்தை இலங்கை அரசு மாற்றுவதற்கான அதிகபட்ச சந்தர்ப்பம் உள்ளது" எனவும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழப்போரை தகனம் செய்ய வேண்டும் என, இலங்கையின் சுகாதாரத்துறையினர் கூறுவதற்கு எந்தவிதமான விஞ்ஞானபூர்வ ஆதாரங்களும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
"இஸ்லாமும் கிறிஸ்தவமும் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் என்கிறது. எனவே, உலகிலுள்ள கிறிஸ்தவ நாடுகளும் ஒன்றாக இணைந்து, இலங்கையிலுள்ள இந்த அநீதியான சட்டத்தை மாற்றுவதற்கு அழுத்தம் கொடுக்கும் என நாம் நம்புகிறோம்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது 'பேஸ்புக்' பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தோன்றி பேசுகையிலேயே இந்த விடயங்களை டாக்டர் ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவின் ஆரம்பத்தில் இலங்கையில் இருந்து முஸ்லிம்கள் இருவர் தனக்கு அனுப்பியதாகக் குறிப்பிட்டு, இரண்டு தகவல்களை டாக்டர் ஜாகிர் நாயக் வாசித்துக் காட்டுகின்றார்.
அந்த தகவல்களில் இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை - அந்த நாட்டு அரசு பலாத்காரமாக எரிப்பதாகவும், இதுவரை 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ள ஜாகிர் நாயக்; "உலகிலுள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இலங்கை மட்டுமே கொரோனாவால் மரணிப்போரை தகனம் செய்யும் விந்தையான சட்டத்தை அமுல்படுத்தி வருகிறது" என கூறியுள்ளார்.
இதன்போதே, இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை பலாத்காரமாக அந்த நாட்டு அரசு தகனம் செய்து வருகின்ற விவகாரம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு (Organization Islamic Cooperation) மிக விரைவில் கொண்டு செல்லப்படும் என்றும் ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் 57 முஸ்லிம் நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.