கோவை கார் சிலிண்டர் வெடி விபத்து! – தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற முதல்வர் பரிந்துரை!

புதன், 26 அக்டோபர் 2022 (15:23 IST)
கோவையில் நடந்த கார் வெடி விபத்தில் பயங்கரவாத தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில் இதுகுறித்து விசாரணையை என்.ஐ.ஏவுக்கு மாற்ற முதல்வர் பரிந்துரைத்துள்ளார்.

கோவை உக்கடத்தில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலியான நபரின் வீட்டிலிருந்து ஏராளமான வெடிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த 5 பேரில் ஒருவர் 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தண்டனை பெற்றவரின் மகன் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வெடிவிபத்து சம்பவம் குறித்து தமிழக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தேசிய புலனாய்வு முகமையும் கோவை விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றிய அவர் பரிந்துரைத்துள்ளார். மேலும் கோவை மாவட்டத்தில் பாதுகாப்பினை தொடர்ந்து உறுதி செய்யவும் காவல்துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Edited By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்