கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இயங்கி வரும் ஜெயின் பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி யூத் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாணவர்கள் சிலர் அம்பேத்கர் குறித்தும் பட்டியலின மக்கள் குறித்தும் இழிவுப்படுத்தும் விதத்தில் பேசியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து #BanJainUniversity என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
மேலும், இந்த நிகழ்வு தொடர்பாக மகாராஷ்டிராவில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பெங்களூரு மற்றும் பிற மாவட்டங்களிலும் இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான புகார்கள் பகுஜன் சமான் கட்சியின் உறுப்பினர்களால் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெங்களூரு தெற்கு சமூக நலத்துறை உதவி இயக்குநர் சி.என்.மதுசூதன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
"இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளோம். மேலும், பல்கலைக்கழக நிர்வாகம், பல்கலைக்கழக முதல்வர், யூத் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழு ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம்," என்று பெங்களூரு தெற்கு, இணை ஆணையர் பி. கிருஷ்ணகாந்த் பிபிசி இந்தியிடம் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தின் மேலாண்மைப் பிரிவு மாணவர்கள் நடத்திய நாடகத்தில் இடஒதுக்கீட்டைப் பயன்படுத்துவது தொடர்பாக பட்டியலின மக்களையும் அம்பேத்கரையும் விமர்சித்துள்ளனர். மேலும், பி.ஆர். அம்பேத்கரை `பீர்` அம்பேத்கர் என்று மாணவர் ஒருவர் இழிவுப்படுத்திக் கூறும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் பரவும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி இந்தியிடம் பேசிய பகுஜன் சமான் கட்சியின் மாநில தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, "பல்கலைக்கழகத்திற்கு எதிராக மாநிலம் முழுவதும் காவல்நிலையங்களில் எங்களின் கட்சியினர் புகார் அளித்து வருகின்றனர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் பல்கலைக்கழகத்தின் முதல்வரும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். மாணவர்கள் மீது பின்னர் நடவடிக்கை எடுத்துக்கொள்ளலாம். ஆசிரியர்களுக்குத் தெரியாமல் ஒரு கல்வி நிறுவனத்தில் இப்படியெல்லாம் நடக்க முடியாது. இது அங்குள்ள ஆசிரியர் சமூகத்தின் மனுஸ்மிருதி மனநிலையைக் காட்டுகிறது.
இந்தச் சம்பவம் பட்டியல் சாதியினருக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பானது மட்டுமல்ல. இந்திய அரசமைப்பு சட்டத்தை எழுதிய டாக்டர் அம்பேத்கரை அவமதிப்பது தேச விரோதம்," என்று கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
இது தொடர்பான அறிவிப்பு இன்று பின்னர் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ராஜ் சிங் தெரிவித்தார். பல்கலைக்கழக அறிக்கை வெளியானவுடன் இந்தச் செய்தி புதுப்பிக்கப்படும்.