'பை பை' சொல்லும் கேசிஆர் கட்சி போஸ்டர்கள் - கேசிஆர் ஆட்சிக்கு கவுன்டவுன் வைத்த பாஜக

ஞாயிறு, 3 ஜூலை 2022 (13:08 IST)
ஆளும் டிஆர்எஸ் கட்சியினரின் வரவேற்பு பேனர்கள் இருந்தனவோ அதனருகே மோதியின் வரவேற்பு விளம்பர பலகைகளை பாஜகவினர் அமைத்துள்ளனர்.

 
தெலங்கானா தலைநகரான ஹைதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இரண்டு நாட்கள் தேசிய செயற்குழு கூட்டம் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், அங்கு ஆளும் முதல்வர் கே.சந்திர ராவின் முகம், சுவரொட்டிகள், பதாகைகள், டிஜிட்டல் ஃபிளக்ஸ் பேனர்கள் முக்கிய இடங்களில் இடம் பிடித்துள்ளது. ஆனால், இது பிரச்னை இல்லை. இந்த போஸ்டர்கள், பேனர்கள் அனைத்தும் எங்கெல்லாம் நரேந்திர மோதியின் வரவேற்பு பேனர்கள் இடம் பிடித்துள்ளனவோ அதற்குப் பக்கத்திலேயே கேசிஆர் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
 
எந்த இடத்திலும் மாற்று கட்சி பேனர்கள், சுவரொட்டிகள், ஃபிளக்ஸ் போர்டுகள் அகற்றப்படவில்லை அல்லது சேதப்படுத்தப்படவில்லை. ஆனால், அதனருகருகே எதிர் தரப்பு சுவரொட்டிகள் இடம்பெற்றிருப்பதை டிஆர்எஸ், பாஜக ஆகிய இரு கட்சியினருமே போட்டி போட்டுக் கொண்டு உறுதிப்படுத்தியுள்ளனர்.
 
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொள்வதற்காக சனிக்கிழமை ஹைதராபாத் வந்தார். அவரை மாநில ஆளுநரான தமிழிசை செளந்தரராஜன் வரவேற்றார். ஆனால், சம்பிரதாய வழக்கத்தின்படி மாநிலத்துக்கு வந்த பிரதமரை வரவேற்பதற்கு மாநில முதல்வரான சந்திரசேகர ராவ் செல்லவில்லை. இதற்கு முன்பும் அவர் இரண்டு முறை பிரதமரை வரவேற்கும் நிகழ்வில் பங்கேற்காமல் தவிர்த்தார்.
 
ஏற்கெனவே இந்திய பிரதமர் நரேந்திர மோதியை மிகக் கடுமையான வார்த்தைகளால் கே. சந்திரசேகர ராவ் கடந்த சில வாரங்களாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவை ஆதரித்து வரவேற்கும் வகையில் சில பேனர்கள், மோதி செல்லும் பாதைகளில் நிறுவப்பட்டுள்ளன.
 
பிரதமர் நரேந்திர மோதி ஹைதராபாத் வருவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பே அங்கு யஷ்வந்த் சின்ஹா வந்ததால், அவரை வரவேற்கும் வகையில் மிகப்பெரிய ஏற்பாடுகளை ஆளும் கட்சி செய்திருந்தது.
 
கடந்த சில நாட்களாக, ஹைதராபாத் மெட்ரோ ரயில் தூண்களில் அனைத்து முக்கிய ஹோர்டிங்குகள் மற்றும் விளம்பர பேனல்களை தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) முன்பதிவு செய்துள்ளது.

அதில், கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான மாநில அரசின் சாதனைகளை அக்கட்சி விளம்பரப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மெட்ரோ தூண்களில், பாஜக அதன் தேசிய செயற்குழு பற்றிய விளம்பரத்தைச் செய்ய முடியாமல் போனது.
 
மோதி பேனருக்கு போட்டியாக டிஆர்எஸ் விளம்பரங்கள்
இந்நிலையில், ஹைதராபாத்துக்கு பிரதமர் மோதி வந்த அதேவேளை, அந்த நகருக்கு வந்த குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவை முதல்வர் சந்திரசேகர ராவ் வரவேற்கும் பேனர்கள் முக்கியப் பகுதிகளில் இடம்பிடித்தன.
 
ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து யஷ்வந்த் சின்ஹா சனிக்கிழமை பங்கேற்கும் மாநாடு நடைபெறவுள்ள ஜல் விஹார் வரை, ஆளும் கட்சியினர் மோட்டார் வாகன அணிவகுப்பை மேற்கொண்டனர்.
 
பிரதமரின் வருகையை முன்னிட்டு வழக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்துப் பாதை கட்டுப்பாடுகள் ஒருபுறமிருக்க அதற்கு நிகரான பாதுகாப்பு ஏற்பாடுகள், யஷ்வந்த் சின்ஹா வருகைக்காக செய்யப்பட்டிருந்தன.
 
இத்தகைய சூழலில்தான் பிரதமர் மோதிக்கு ஆதரவாக பாஜகவினர் நிறுவியிருந்த டிஜிட்டல் பேனர்கள், போஸ்டர்களுக்கு இணையாக கேசிஆர் ஆதரவாளர்கள் அவரது பேனர், போஸ்டர்களை முக்கியப் பகுதிகளில் இடம்பெறச் செய்தனர்.
 
ஆளும் டிஆர்எஸ் கட்சியினருக்குப் போட்டியாக, மக்களைக் கவரும் வகையில் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் முக்கியப் பாதைகளிலும் சுவர் விளம்பரங்கள், பெரிய கட்-அவுட்கள், பந்தல்கள், பேனர்கள் மற்றும் கொடிக் கம்பங்களை வைத்து நகரில் காணும் இடமெல்லாம் கிட்டத்தட்ட காவி வண்ணமயமாக இருப்பது போல பாஜகவினர் செய்திருந்தனர்.
 
ஒரு சில இடங்களில் ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு மொழிகளில் பல பேனர்கள் இருந்தன. தெலங்கானா மொழி பாணியில் சாலு தொரா, சம்பக்கு தொரா (நீங்கள் கொடுத்த தொந்தரவு போதும், ஐயா) என்று கிண்டல் செய்யும் வகையில் வாசகங்கள் இருந்தன.
 
மாநிலத்தில் கே.சி.ஆரின் ஆட்சிக்கான கவுன்ட் டவுனை காட்டும் மின்னணு கடிகாரத்துடன் கூடிய பலகையையும் பாஜகவினர் அமைத்துள்ளனர். ஒவ்வொரு நாளிலும் அவருக்கு எஞ்சியிருக்கும் நாட்களின் எண்ணிக்கையை அந்தப் பலகை காட்டுவதாக இருந்தது.
 
இதற்குப் பதிலடியாக, டிஆர்எஸ் கட்சியினர், செகந்திராபாத் மைதானத்துக்கு அருகிலுள்ள சாலை சந்திப்பு ஓரங்களில் வைத்துள்ள விளம்பர பேனல்களில் நரேந்திர மோதிக்கு எதிரான போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அந்த மைதானத்தில்தான் பிரதமர் நரேந்திர மோதி ஜூலை 3ஆம் தேதி மாலையில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில் உரையாற்ற உள்ளார்.
 
அந்த மைதானத்துக்குச் செல்லும் பாதையில் முக்கியப் பிரமுகர்கள் செல்லும் நுழைவு வாயில் அருகே, "பை பை மோதி" என்ற வாசகத்துடன், பெரிய போர்டு வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்பது, மத்திய பொதுத் துறை நிறுவனங்களை விற்பது, வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்துவது போன்ற பிரதமரின் தோல்வியுற்ற வாக்குறுதிகள் குறித்தும் அந்த விளம்பரப் பலகைகளில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
 
வேறு சில பகுதிகளில் மிகவும் மோசமான வார்த்தைகளால் பிரதமர் மோதியை கேலி செய்யும் பேனர்கள் நிறுவப்பட்டன. அவற்றை அகற்ற போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.
 
இதற்கிடையே, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, 19 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் இதர பாஜக உயர் அதிகாரிகள் இரண்டு நாள் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்