மியான்மரில் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட பிபிசி செய்தியாளர் ஆங் தோரா விடுவிப்பு
செவ்வாய், 23 மார்ச் 2021 (00:39 IST)
மியான்மரில் கைது செய்யப்பட்ட பிபிசி செய்தியாளர் ஆங் தோரா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பிபிசி பர்மிய சேவையை சேர்ந்த ஆங் தோரா மியான்மர் தலைநகர் நேப்பிடாவில் நீதிமன்றம் ஒன்றிற்கு வெளியே நின்று கொண்டு செய்தி வழங்கி கொண்டிருந்தபோது, சீருடை அணியாதவர்களால் அழைத்து செல்லப்பட்டார்.
பிப்ரவரி ஒன்றாம் தேதி மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ராணுவம் கவிழ்த்து ஆட்சியில் அமர்ந்தபின் 40 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஐந்து ஊடக நிறுவனங்களின் அனுமதியை ராணுவம் ரத்து செய்தது.
கடந்த வெள்ளியன்று, ஆங் தோரா, மற்றொரு பத்திரிகையாளர் தான் டிகேவுடன் கைது செய்யப்பட்டார். இவர் உள்ளூர் ஊடக செய்தி நிறுவனமான மிஸ்ஸிமாவில் பணிபுரிகிறார். மிஸ்ஸிமாவின் அனுமதி ராணுவத்தால் சில தினங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையாளர்களை அழைத்து சென்றவர்கள், பெயர் ஏதும் இல்லாத வாகனத்தில் வந்து அவர்களை பார்க்க வேண்டும் என்றனர். அதன்பிறகு அவரை பிபிசியால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
செய்தியாளர் ஆங்கின் விடுதலையை உறுதி செய்த பிபிசி அது குறித்து வேறு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
ஐநாவின் தகவல்படி ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் குறைந்தது 149 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் எண்ணிக்கை இதைவிடவும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதில் மார்ச் 14ஆம் தேதி மட்டும் மிக மோசமாக 38 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த வார இறுதியிலும் பல போராட்டங்கள் வெடித்தன. பலர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
வார இறுதியில் நாடுமுழுவதும் ராணுவ ஆட்சிக்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் புத்த துறவிகளும் கலந்துகொண்டனர்.
திங்களன்று மேலும் பல போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நாட்டிலேயே மிகப்பெரிய நகரமான யாங்கூன் நகரில் போராட்டங்கள் அதிகமாக உள்ளன.
இதற்கிடையில் மியான்மரில் நடைபெறும் ராணுவ ஆட்சிக்கு சர்வதேச அளவில் பல கண்டனங்களும் எழுந்துள்ளன.
மியான்மரில் நிலவும் சூழல் குறித்து பேச தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு சந்திப்பு ஒன்றை நடத்த வேண்டும் என இந்தோனீசியாவின் அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்திருந்தார்.
எப்படித் தொடங்கியது இந்த அமைதியின்மை?
கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சி மற்றும் மியான்மரின் அதிபர் வின் மின்ட் ஆகியோர் ராணுவத்தினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, ராணுவ ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கிறது.
அடுத்த ஓராண்டுக்கு ராணுவம் அவசர நிலையை அறிவித்திருக்கிறது. 2020ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, தன் ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது மியான்மர் ராணுவம்.
மக்கள் ஆங் சான் சூச்சிக்கு ஆதரவாக சாலைகளில் இறங்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பலரும் வேலைக்குச் செல்ல மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் கூட்டத்தைக் கலைக்க, மியான்மர் ராணுவம் துப்பாக்கியால் சுட்டு பலரைக் கொன்றுள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
ஐ.நா-வின் மனித உரிமைகள் சபையின் ஆணையர் மிஷெல் பசெலெட்டின் கணக்குப்படி, 1,700-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் மியான்மர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 29 பத்திரிகையாளர்களும் அடக்கம்.
மியான்மர் - சில குறிப்புகள்
மியான்மர், பர்மா என்று அறியப்படுகிறது. 1948-ம் ஆண்டு இந்த நாடு பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. நவீன வரலாற்றில் பெரும்பாலான காலம் இந்த நாடு ராணுவ ஆட்சியில்தான் இருந்தது.
2010-ம் ஆண்டு வாக்கில் இந்தப் பிடி தளரத் தொடங்கியது. இதையடுத்து 2015-ம் ஆண்டு சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்பட்டு, ஆங் சான் சூச்சி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.
2017-ம் ஆண்டு காவலர்கள் மீது ரோஹிஞ்சாக்கள் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலுக்கு மிகக் கடுமையாக ராணுவம் எதிர்வினையாற்றியதால், சுமார் 5 லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்களை நாட்டை விட்டு அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.