லெகரா: பாரா துப்பாக்கிச் சூடு உலக கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வென்றார்
செவ்வாய், 7 ஜூன் 2022 (23:52 IST)
டோக்யோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் பாரா துப்பாக்கிச் சுடும் வீராங்கனை அவனி லெகரா பிரான்சில் நடந்துவரும் பாரா துப்பாக்கிச் சுடும் உலகக் கோப்பைப் போட்டியில் செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம் வென்றார்.
பெண்கள் R2 10 மீட்டர் ஏர் ரைஃபில் எஸ்.எச்.1 பிரிவில் இந்த பதக்கத்தை வென்ற லெகரா, இந்தப் போட்டியில் தமது சொந்த சாதனையை முறியடித்து புதிய சாதனையையும் படைத்தார்.
அவர் பெற்ற புள்ளிகள் - 250.6. இதன் மூலம் தமது முந்தைய சாதனையான 249.6 புள்ளிகளை அவரே முறியடித்தார். இந்த சாதனை மூலம் அவர் 2024 பாராலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதியும் பெற்றுவிட்டார்.
போலந்து நாட்டின் எமிலியா பாப்ஸ்கா 247.6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்வீடன் நாட்டின் அன்னா நார்மன் 225.6 புள்ளிகளுடன் வென்கலப் பதக்கத்தையும் இந்தப் போட்டியில் வென்றனர்.
அவரது பயிற்சியாளருக்கு விசா கிடைக்காத காரணத்தால் இந்தப் போட்டிக்கே அவர் போக முடியாதோ என்ற அச்சம் நிலவியது. ஆனால், இந்திய அரசு தலையிட்டதை அடுத்து அந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டு போட்டிக்குச் சென்றார் லெகரா என்பது குறிப்பிடத்தக்கது.
அவனி
இந்தியாவுக்காக இந்தப் பதக்கத்தை வெல்வது பெருமையாக இருப்பதாகவும், தமக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தமது ட்வீட்டில் குறிப்பிட்டார்.
யார் இந்த அவனி
இந்த 20 வயது வீராங்கனை 2012ஆம் ஆண்டு நடந்த கார் விபத்து ஒன்றால் உண்டான முதுகுத் தண்டுவட பாதிப்பால் அவனி மாற்றுத்திறனாளி ஆனார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர். 2015இல் ஜெய்ப்பூரில் உள்ள ஜகத்புரா விளையாட்டு வளாகத்தில் தமது பயிற்சியைத் தொடங்கினார்.
அவரது தந்தை அவனி விளையாட்டில் ஈடுபட ஊக்கமளித்தாகவும், தொடக்கத்தில் அவர் துப்பாக்கி சுடுதல், வில் வித்தை என இரண்டிலுமே ஆர்வம் காட்டினார் என்றும் சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி இணையதளம் கூறுகிறது.