ஹாலோகாஸ்ட் என்ற நடவடிக்கை மூலம் பல லட்சம் யூதர்களை கொன்ற, இரண்டாம் உலகப் போரின் மையப் பேசுபொருளாக விளங்கிய நாஜித் தலைவர் அடால்ஃப் ஹிட்லர் பிறந்த கட்டடத்தை காவல் நிலையமாக மாற்றுதாக ஆஸ்திரிய அரசு முடிவு செய்துள்ளது.
ஹிட்லரின் இந்த வீட்டுக்கு சுற்றுலாப்பயணிகள் வருவதை தடுக்கும் வகையில், இந்த கட்டடத்துக்கு வாடகை கொடுத்து பாதுகாத்து வந்த அரசாங்கம், இதே இடத்தில் அகதிகளுக்கான மறுவாழ்வு மையம் அமைப்பதற்கும், மொத்தமாக விலை கொடுத்து வாங்குவதற்கும், செப்பனிடுவதற்கும் மேற்கொண்ட முயற்சிகளை அந்த கட்டடத்தின் உரிமையாளர் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு கட்டாய விற்பனை உத்தரவின் மூலம் இந்த இல்லத்தை 8,10,000 யூரோக்களுக்கு அரசு கையகப்படுத்தியது.
அதன் பிறகு, இந்த கட்டடத்தை இடித்து விட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறுபட்ட கருத்துகளை முன்வைத்து வந்த நிலையில், தற்போது இதை காவல்நிலையமாக மாற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.