ஆஸ்திரேலியா காட்டுத்தீ: 50 கோடி விலங்குகள் உயிரிழந்ததா? உண்மை என்ன? - விரிவான தகவல்கள்
ஞாயிறு, 5 ஜனவரி 2020 (17:02 IST)
ரியாலிட்டி செக் அணி,
ஆஸ்திரேலியா முழுவதும் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 50 கோடி விலங்குகள் உயிரிழந்துள்ளதாக தகவல் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலியாவின் பல்லுயிர் குறித்த வல்லுநரும் சிட்னி பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான கிறிஸ் டிக்மேன் இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த எண்ணிக்கையை தான் எப்படி கணக்கிட்டேன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் கிறிஸ்.
ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் காடுகள் அழிக்கப்படுவதால் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து 2007ஆம் ஆண்டு இயற்கைக்கான உலகளாவிய நிதியத்துக்காக (WWF) தான் மற்ற ஆய்வாளர்களுடன் இணைந்து எழுதிய அறிக்கையை அடிப்படையாக கொண்டே இந்த எண்ணிக்கையை கணக்கிட்டுள்ளதாக கிறிஸ் டிக்மேன் விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 17.5 பாலூட்டிகள், 20.7 பறவைகள், 129.5 ஊர்வன ஆகியவை வாழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையின் தரவை தற்போது காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பரப்புக்கு கணக்கீடு செய்வதன் மூலம் இந்த எண்ணிக்கை கிடைத்துள்ளதாக கிறிஸ் கூறுகிறார்.
"நியூ சௌத் வேல்ஸின் குறிப்பிட்ட மூன்று மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பாதிப்புகளை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது, அநேகமாக 480 மில்லியன் பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்றவை தீவிபத்தால் பாதிக்கப்பட்டிருக்கும்" என்று பேராசிரியர் டிக்மேன் கூறுகிறார்.
"பெரிய விலங்கினங்களான கங்காரு, ஈமு மற்றும் பல்வேறு வகையான பறவைகள் ஆகியவை தங்களை நோக்கி தீ வருவதை பார்த்து சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றிருக்கக் கூடும்" என்று பிபிசியிடம் பேசிய அவர் மேலும் கூறினார்.
"அதிக தூரம் இடம்பெயர முடியாத மற்றும் காடுகளை மட்டுமே சார்ந்து வாழும் சிறிய உயிரிகள் இந்த காட்டுத்தீயில் சிக்கி என்ன ஆகியிருக்கும் என்று நான் அஞ்சுகிறேன்."
இந்நிலையில், ஆஸ்திரேலியா முழுவதும் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயில் தப்பிய பெரும்பாலான விலங்குகள் போதிய இடம், உணவு இல்லாமல் உயிரிழக்கக் கூடும் என்று அவர் எச்சரிக்கிறார்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய யார்க் பல்கலைக்கழகத்தின் சூழலியல் நிபுணர் கொலின் பீல், இந்த எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறினார்.
"நான் பெரும்பாலும் கவனம் செலுத்தும் ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்படும் தீ விபத்துகளில் சிக்கி சில பறவைகள் உயிரிழப்பது உண்மைதான். ஆனால், தீ பரவுவதை உணர்ந்தவுடனேயே அங்கிருந்து உடனுக்குடன் பறந்து செல்லும் திறனை பறவைகள் பெற்றுள்ளன. இதே சூழ்நிலை ஆஸ்திரேலியாவுக்கும் கண்டிப்பாக பொருந்த கூடியதே."
இந்த எண்ணிக்கைகளுக்கு ஒரு வரம்பு உள்ளது. நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அடிப்படையாக கொண்டே இந்த எண்ணிக்கை மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது காட்டுத்தீ நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்திலிருந்து அருகிலுள்ள விக்டோரியாவுக்கும் பரவிவிட்டது.
அதுமட்டுமின்றி, பேராசிரியர் கிறிஸின் மதிப்பீட்டில் வெறும் மூன்று மில்லியன் ஹெக்டேர்கள் நிலப்பகுதி மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஆனால், தற்போது காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட நிலப்பகுதி அதை எப்போதோ விஞ்சிட்டது. எனவே, தற்போது வெளிவந்துள்ள மதிப்பீடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட அதிகமான விலங்கினங்கள் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த எண்ணிக்கை வெறும் தோராயமான கணக்கீடு என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். மேலும், தாங்கள் வேண்டுமென்றே உயிரிழந்த விலங்குகளின் எண்ணிக்கையை குறைத்து காண்பித்துள்ளதாகவும், அதில் முக்கால்வாசி ஊர்வன உயிரிகளே பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
"இந்த காட்டுத்தீயில் உயிரிழந்த பல்வேறு விலங்கினங்களின் வாழ்விட அடர்த்தி குறித்த தரவுகள் கிடைக்காததால், ஏற்கனவே அறியப்பட்ட மற்ற விலங்கினங்களின் வாழ்விட அடர்த்தியை அடிப்படையாக கொண்டே இந்த கணக்கீடு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்" என்று கூறுகிறார் யூனிவர்சிட்டி ஆஃப் ரீடிங்கின் பேராசிரியர் டாம் ஆலிவர்.
"ஊர்வன உயிரிகளின் வாழ்விட அடர்த்தி குறித்த தரவுகள் இல்லவே இல்லை. 1985ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வை மையாக கொண்டே ஊர்வன குறித்த தரவுகள் இதுவரை கணக்கிடப்பட்டு வருகிறது."
"ஊர்வன தீயை எவ்வாறு தாக்குப்பிடித்து உயிர்வாழ்கின்றன என்பது குறித்த மதிப்பீடுகளை கண்டுபிடிப்பது கடினம். எனினும், ஆஸ்திரேலியாவில் தற்போது காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் வாழும் பெரும்பாலான ஊர்வன உயிரிகள் மண்ணில் வாழ்கின்றன. மிகவும் சிறந்த வெப்பம் கடத்தா மூலமாக மண் விளங்குவதால் தீவிரமான காட்டுத்தீயிலிருந்து கூட ஊர்வன உயிரிகள் தப்பிப்பிழைக்கக் கூடும்," என்று டாம் ஆலிவர் கூறுகிறார்.
"காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட விலங்குகளில் பெரும்பாலானவை இறந்திருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே. இருப்பினும் அவை நீண்ட காலத்திற்கு உயிர்வாழுமா என்ற கேள்வி எழுகிறது."