அமெரிக்கா போகும் ஆசியக் குப்பைகள் - கடல் வழியாகப் பயணிக்கும் கழிவுகள்
சனி, 16 நவம்பர் 2019 (15:08 IST)
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நியூயார்க் நகரில் நவம்பர் 12 அன்று நடந்த கூட்டம் ஒன்றில் பருவநிலை மாற்றம் குறித்து பேசும்போது இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவை சாடியுள்ளார்.
"உலகம் முழுவதும் தூய்மையான காற்று வேண்டும் என விரும்புகிறேன். தூய நீர் வேண்டும் என்று விரும்புகிறேன். மக்கள் என்னிடம் அதற்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என கேட்கிறார்கள். இதில் எனக்கு ஒரு சிறிய பிரச்சனை இருக்கிறது. எங்களிடம் இருப்பது நிலத்தின் ஒரு சிறிய பகுதி. அதாவது அமெரிக்கா. இந்த கேள்வியை நீங்கள் சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிடம் கேட்டால் சரியாக இருக்கும். ஏனென்றால் பிற நாடுகளைப் போல இந்த நாடுகளும் எதுவும் செய்வதில்லை," என தன் உரையில் கூறியுள்ளார்.
மேலும், "இந்த நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள காற்றை தூய்மையாக வைக்க எதுவும் செய்வதில்லை. இந்த உலகத்தை தூய்மையாக வைக்க எதுவும் செய்வதில்லை. அத்துடன் இவர்கள் நாட்டின் குப்பைகள் கடலில் கொட்டப்படுகின்றன. அது மிதந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரை வருகிறது. நீங்கள் இதைப் பார்த்து கொண்டு இருக்கிறீர்களே தவிர இதைப் பற்றி யாரும் எதுவும் கேட்பதில்லை" எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் அதிபர் டிரம்ப் கூறுவதுபோல் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் குப்பைகள் அமெரிக்கா வரை செல்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
எங்கிருந்து வருகிறது இந்த குப்பைகள்
டிரம்ப் கூறும் அந்த குப்பைகள் 'தி க்ரேட் பசிஃபிக் கார்பேஜ் பேட்ஜ்' என்று அழைக்கப்படும். இது கலிஃபோர்னியா முதல் ஹவாய் தீவுகள் வரை கடலில் மிதக்கின்றன.
நேச்சர் அறிவியல் சஞ்சிகையின் அறிக்கைப்படி, இந்த குப்பைகள் ஆறு லட்சம் சதுர மைல் அளவுக்கு பரவியிருக்கின்றன. இது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பரப்பளவைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.
இந்த குப்பைகள் 1990களில் முதன்முதலில் உலகிற்கு தெரிய வந்தது. ஓஷன் க்ளீனப் ஃபவுண்டேஷனின் கூற்றுப்படி, பசிஃபிக் பெருங்கடலின் நில விளிம்பு முழுவதும் இந்த குப்பைகள் பரவி உள்ளன. அதாவது பசிஃபிக் கடலை சுற்றியுள்ள ஆசியா, வட அமெரிக்கா மற்றும் லதீன் அமெரிக்கா நாடுகளிலிருந்து இந்த குப்பை கடலில் கலக்கின்றன.
இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் இந்த குப்பைகள் ப்ளாஸ்டிக் திடக் கழிவுகளாக அல்லாமல் சிறிய ப்ளாஸ்டிக் துகள்களால் நிரம்பியுள்ளன. சுமாராக 1.8 ட்ரில்லியன் ப்ளாஸ்டிக் துகள்கள் இருக்கும். இதன் எடை 88 ஆயிரம் டன் இருக்கும் என கணிக்கப்படுகிறது. இது 500 பெரிய விமானங்களுக்கு ஈடானது.
எந்த நாட்டின் அரசும் இதை சுத்தம் செய்ய முன் வரவில்லை. ஆனால் ஓஷன் க்ளீனப் ஃபவுண்டேஷன் சிறிய குழுக்களைக் கொண்டு இதை சுத்தம் செய்ய முயற்சித்து வருகிறது
அதிகம் குப்பைகளை கலக்கும் நாடு
பசிஃபிக் பெருங்கடலின் கரையை ஒட்டியுள்ள நாடுகளினால் இந்த பகுதியில் குப்பைகள் சேர்ந்துள்ளன.
இந்த குப்பைகள் நதிகளில் கலந்து அதன் வழியாக கடலை வந்தடைகின்றன. பசிஃபிக் பெருங்கடலின் குப்பைகளில் பல்வேறு நாடுகளின் குப்பைகள் இருக்கும். இதில் லாஸ் ஏஞ்சல்ஸின் குப்பைகளையும் காணலாம்.
யூஎஸ் டூடேவின் அறிக்கையில், சீனா மற்றும் பிற நாடுகளிலிருந்து இந்த குப்பைகள் வருகின்றன. அவ்வாறு பார்த்தால் இந்தியா மீதும் கேள்வி எழும்.
ஆனால் 2015ல் வெளியான சயின்ஸ் அட்வான்ஸஸ் என்னும் சஞ்சகையின் ஆய்வின்படி ஆசியாவிலிருந்துதான் ப்ளாஸ்டிக் குப்பைகள் அதிகம் வருகிறது. இதில் சீனா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ். வியட்நாம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் கடலில் குப்பைகளை கலக்கும் ஆறு முக்கிய நாடுகள் ஆகும்.