புதிய கட்சி உருவாவதை யாரும் தடுக்க முடியாது: மகிந்த ராஜபக்ஷ
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (15:32 IST)
தற்போது புதிய கட்சியொன்று உருவாவதை யாரும் தடுக்க முடியாதென்று முன்னாள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை பத்தமுல்லை பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் இதனை அறிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்று சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு அரசாங்கமொன்றை முன்கொண்டு செல்வதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த தீர்மானம் தற்போது ஐந்து வருடங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
எனவே, தற்போது பொது மக்கள் சார்பில் குரல் கொடுக்கும் கட்சியொன்று இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இந்த பின்னணியில் புதிய கட்சியொன்று உருவாக்கப்படுவதை தடுக்க முடியாதென்று தெரிவித்தார்.
மேலும், கருத்துக்களை தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ புதிய கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டால், சகல ரகசியங்களும் வெளிப்படுத்தப்படுமென்று விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை அனுமதிக்க முடியாதென்று தெரிவித்தார்.
புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க சுதந்திரம் இருக்க வேண்டுமென்று கூறிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஆனால் புதிய கட்சியொன்றை அமைக்க தனக்குள் எந்த விதமான தீர்மானமும் இல்லை என்றும் அறிவித்தார்.