மனித தலையீட்டால் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் சந்திக்கும் புதிய சவால்

Prasanth Karthick

திங்கள், 16 செப்டம்பர் 2024 (13:35 IST)

தெற்கு கோவாவில் `மொல்லம்’ என்ற அடர்ந்த காடு அமைந்துள்ளது. இந்தக் காட்டின் நடுவே இப்போது கர்நாடகாவுக்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. எனவே காடு இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. மனித இனம் பரந்து விரிந்திருந்த காட்டின் மீது அதன் அதிகாரத்தை நிலைநாட்டிவிட்டது.

 

 

நெடுஞ்சாலையில் ஓடும் வாகனங்களின் சத்தம் இந்த காட்டின் அமைதியைக் சீர்குலைத்துள்ளது. இதனால் பறவைகள் மற்றும் விலங்குகளின் சத்தம் காணாமல் போய்விட்டது.

 

தற்போது இந்த ஒரு வழி நெடுஞ்சாலையில் அதிக அளவில் வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் நிகழ்ந்துள்ளது. கோவா மற்றும் கர்நாடகாவை இணைக்க நான்கு வழி நெடுஞ்சாலை ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. எனவே காட்டில் சாலையின் அகலம் இன்னும் அதிகரிக்கப்படும்.

 

இந்த நான்கு வழிச் சாலை பகவான் மஹாவீர் சரணாலயம் மற்றும் மொல்லம் தேசிய பூங்கா பகுதியில் உள்ளது.

 

இதில் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் மொல்லம் காடு மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு முக்கிய பகுதி. இது யுனெஸ்கோவால் 'உலக பாரம்பரிய' சின்னமாக அறிவிக்கப்பட்டது மற்றும் உலகின் முக்கியமான பல்லுயிர் மையமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 

மொல்லம் வனப்பகுதி 240 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்த பசுமையான காடுகளைக் கொண்டுள்ளது. இங்கு இருக்கும் ஏரியில் 286 வகையான பறவைகள் உள்ளன. இதுவரை 75 வகையான எறும்புகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 7 இனங்கள் இந்த காட்டில் மட்டுமே காணப்படும் அரிய வகையைச் சேர்ந்தவை.

 

500 வகையான காளான்களை கொண்டிருக்கும் இந்த காடு, இந்திய பாங்கோலின் ( Indian pangolin), கழுகுகள் மற்றும் மலபார் பைட் ஹார்ன்பில் (Malabar pied hornbill) போன்ற அழிந்து வரும் உயிரினங்களின் தாயகமாகும்.

 

இத்தகைய இயற்கை வளங்களைக் கொண்ட இந்தப் பகுதியை முன்வைத்து மூன்று திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அதில் ஒன்று, நான்கு வழிச்சாலை. இது தவிர, இரட்டை ரயில் பாதை, தம்னார் மின் உற்பத்தி நிலையம் ஆகியவை இந்த வனப்பகுதி வழியாக செல்கின்றன.

 

இத்திட்டங்களுக்காக வனப்பகுதியில் இருந்த சுமார் 55 ஆயிரம் மரங்களை வெட்ட அனுமதி அளிக்கப்பட்டது, அதில் 20 ஆயிரம் மரங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்தன.

 

நீதிமன்றம் சென்ற உள்ளூர்வாசிகள்

 

முதலில் சாலைகள், பிறகு மின் திட்டங்களுக்காக மேலும் சில ஆயிரம் மரங்களும் வெட்டப்பட்டன. இதில் சுமார் 2,500 மரங்கள் சங்கோடு பகுதியில் இருந்தவை. இங்கு புதிதாக மரங்கள் நடப்பட்டாலும், ஆயிரக்கணக்கான மரங்கள் ஏற்படுத்திய வனச்சூழலை உருவாக்க முடியுமா என்னும் கேள்வி எழுகிறது.

 

இந்த காட்டை நேசிக்கும் உள்ளூர்வாசிகள் அதை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். காடுகளில் முன்மொழியப்பட்ட திட்டங்களை எதிர்த்து கோவா அறக்கட்டளை (https://goafoundation.org/) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. கோவா அறக்கட்டளையின் மனுவை அடுத்து, நீதிமன்றம் சிறப்பு குழுவை அமைத்தது.

 

இந்தக் குழுவின் அறிக்கைக்குப் பிறகு, இங்கு திட்டமிடப்பட்ட மூன்று திட்டங்களில், தம்னார் மின் நிலைய திட்டத்தை இந்தப் பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதி வழியாக நிறைவேற்ற தடை விதிக்கப்பட்டது. ரயில் பாதையையும் மறுவரையறை செய்ய நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. ஆனால், நான்கு வழிச் சாலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

இங்குள்ள சுற்றுச்சூழல் ஆர்வலரான ராஜேந்திர கெர்கர் பிபிசி மராத்தியிடம், "கர்நாடகாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கரும்புலிகள் சரணாலயம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள சஹ்யாத்ரி புலிகள் காப்பகம் இடையே வனவிலங்குகள் பயணிக்கும் பாதையாக இந்த மொல்லம் பெல்ட் இருக்கிறது. எனவே இது முக்கியத்துவம் வாய்ந்த காட்டுப் பகுதி" என்கிறார்.

 

இது மட்டுமே காரணம் அல்ல. மேற்கு தொடர்ச்சி மலை சுமந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய கதையில், மொல்லம் ஒரு சிறிய உதாரணம். இந்தக் கதை ஒரு போராட்டத்தைப் பற்றியது, குறிப்பாக மனித தலையீடு பற்றியது. தற்போது அது உலகளாவிய காலநிலை மாற்றப் பிரச்னைக்கு வழிவகுத்துவிட்டது .

 

சிக்கலில் இருக்கும் 'உலக பாரம்பரிய சின்னம்’

 

குஜராத்தில் உள்ள தபி பள்ளத்தாக்கிலிருந்து, இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் தெற்கே இந்த மலைத்தொடர் செல்கிறது. மகாராஷ்டிராவின் சஹ்யாத்ரி ஊடுருவ முடியாத சுவர் போல நிற்கிறது. கோவா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் எல்லைகளைக் கடந்து தமிழகத்தில் நீலகிரி வரை மேற்கு தொடர்ச்சி மலை செல்கிறது.

 

பல ஆண்டுகளாக, மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை பல்லுயிர் உலகெங்கிலும் உள்ள இயற்கை ஆர்வலர்கள், தாவரவியலாளர்கள், விலங்கியல் வல்லுநர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கவர்ந்து வருகிறது.

 

மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்லுயிர் மற்றும் பல அரிய வகை தாவரங்கள், விலங்கு இனங்கள் இருப்பதால் 2012 இல் யுனெஸ்கோவால் 'உலகப் பாரம்பரியச் சின்னமாக' அறிவிக்கப்பட்டது.

 

யுனெஸ்கோ உலக பாரம்பரிய இணையதளம் மேற்குத் தொடர்ச்சி மலைகளை பின்வருமாறு விவரிக்கிறது: "மேற்குத் தொடர்ச்சி மலைகள் உலக அளவில் அழிவின் விளிம்பில் இருக்கும் 325 உயிரினங்களுக்கு (IUCN சிவப்பு பட்டியல்) தாயகமாக உள்ளன.

 

இந்த இனங்களில் 229 தாவர வகைகள், 31 பாலூட்டிகள், 15 பறவைகள், 43 நீர்வாழ் உயிரினம், 5 ஊர்வனம் மற்றும் 1 மீன் இனம் ஆகியவை அடங்கும். இவற்றில், 129 இனங்கள் பாதிக்கப்படக் கூடிய சூழலில் இருக்கின்றன. 145 இனங்கள் அபாயகரமான நிலையில் உள்ளன. 51 இனங்கள் மிகவும் அழிவின் விளிம்பில் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

 

இந்த தனித்துவமான வாழ்விடங்களால் மேற்குத் தொடர்ச்சி மலைகள் 'பல்லுயிர்களின் ஹாட்ஸ்பாட்' என்று அழைக்கப்படுகின்றன.

 

"சர்வதேச அளவில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய இடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 80-90 களில், ஆராய்ச்சியாளர்கள் இந்த பல்லுயிர் பெருக்கம் பற்றி ஆய்வு மேற்கொண்டபோது, அதிக எண்ணிக்கையிலான அரிய வகை உயிரினங்கள் உள்ளன என்பதை உணர்ந்தனர். தனித்துவமான விலங்குகள், பறவைகள், தாவரங்கள் இருப்பது தெரிய வந்தது" என முனைவர் அபர்ணா வத்வே கூறுகிறார், இவர் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் ( IUCN) மேற்குத் தொடர்ச்சி மலை சிறப்புக் குழுவின்' உறுப்பினர்.

 

IUCN என்னும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் அரசாங்கங்கள், ஆராய்ச்சியாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அமைப்புகளை இயற்கை பாதுகாப்பிற்காக ஒன்றிணைக்கும் உச்ச அமைப்பாகும்.

 

'மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அச்சுறுத்தல் இருப்பது உண்மைதான், அது தொடர்ந்து அதிகரித்து வருகிறது' என்று இந்த அமைப்பு பலமுறை எச்சரித்துள்ளது.

 

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், அவற்றின் தற்போதைய நிலை, அவை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் பற்றிய அறிக்கையை ஐயுசிஎன் தொடர்ந்து வெளியிடுகிறது. இது 'உலக பாரம்பரியக் கண்ணோட்ட அறிக்கை' (World Heritage Outlook Report) என்று அழைக்கப்படுகிறது.

 

சமீபத்திய அறிக்கை 2020 இல் வெளியிடப்பட்டது. அதன்படி, மேற்கு தொடர்ச்சி மலைகள் 'அதிக அக்கறை செலுத்த வேண்டிய' பிரிவில் இருப்பதாக குறிப்பிடப்பட்டது.

 

அதாவது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள உயிரினங்கள் ஆபத்தை எதிர்கொள்ளும் கட்டத்தை நெருங்கி வருகிறது. இது கவலையை ஏற்படுத்தும் நிலை.

 

 

அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள்

 

மேற்குத் தொடர்ச்சி மலையில் 'வளர்ச்சி' என்ற பெயரில் செய்யப்பட்ட கட்டமைப்புகள் மற்றும் மனித தலையீடு ஏற்படுத்திய தாக்கங்கள் இப்போது வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. இங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் கடுமையான விளைவுகளை சந்திப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

அழியும் விளிம்பில் உள்ள உயிரினங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று இந்திய கரடி.

 

வேட்டையாடுதல் மற்றும் வளர்ப்பதற்கு பிடித்து செல்வது ஆகிய நடவடிக்கைகளால் கரடிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்தது. இதனையடுத்து இந்த கரடி இனம் அழிந்து வரும் விலங்குகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

 

மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் இந்த கரடிகளால் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால்தான் அவை சஹ்யாத்ரிக்கும் ராதாநகரிக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்து மறைந்துவிட்டன.

 

சாலைகள், மனித குடியிருப்புகள் அதிகரிப்பு, காடுகளின் ஒரே மாதிரியான படுகை (belt) இரண்டு பகுதிகளாக பிளவுப்பட்டது ஆகிய காரணங்களால் கரடியின் நடமாட்டம் குறைந்தது. கரடிகள் சுதந்திரமாக அலைந்து திரிவதை மட்டுப்படுத்தியது. ஒரு பகுதியில் உள்ள கரடிகள் மற்றொரு பகுதியில் இருக்கும் கரடிகளை சந்திக்க இயலாததால் அவற்றின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டது. அதன் விளைவாக எண்ணிக்கை குறைந்தது.

 

அடைப்பட்டிருக்கும் கரடிகள்

 

'வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளையின் நிபுணரும், பல ஆண்டுகளாக கரடிகளைப் பற்றி ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சியாளருமான கிரிஷ் பஞ்சாபி, இது தீவிரமான பிரச்னை என்று குறிப்பிடுகிறார்.

 

ஆனால், கர்நாடகாவில் ராதாநகரி முதல் கோவா வரை கரடிகள் காணப்படுகின்றன. ஆனால் இந்த இனங்கள் அழியும் நிலையில் உள்ளன. அவற்றின் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு தொடர்பாக நிறைய பணிகள் செய்யப்பட வேண்டும். அவற்றின் இனப்பெருக்கம் நடக்க வழி செய்ய வேண்டும்."

 

"மனித இனத்தில் ஒரு குடும்பத்தை ஒரே அறையில் வைத்திருந்தால் அவர்கள் இறுதியில் இறந்துவிடுவார்கள். ஏனென்றால் வெளி உலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்கும் சூழல் ஏற்படும். கரடிகளுக்கும் இந்த சூழல் பொருந்தும். இது 'மரபணு தனிமை' (genetic isolation) என்று அழைக்கப்படுகிறது. இது தவிர்க்க முடியாத அழிவை ஏற்படுத்தும். இது நடக்க 100 ஆண்டுகள் ஆகும், ஆனால் நாம் அவற்றைப் பாதுகாக்க முயற்சிக்காத வரை அவை சீக்கிரத்தில் மறைந்துவிடும்" என்கிறார் கிரிஷ் பஞ்சாபி.

 

கரடி போன்ற பெரிய விலங்குகளுக்கும் மட்டும் இது நடக்கவில்லை. சில உள்ளூர் ஊர்வனவங்களிலும் இது நிகழ்கிறது. மொல்லம் மற்றும் கோவாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சில வகை பாம்புகளை இப்போது காணமுடியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

 

முனைவர் நிதின் சாவந்த், கோவா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்கிறார். அவர் கூறுகையில், "நான் ஊர்வனவியல் (herpetology) படிக்கிறேன், இது ஊர்வன மற்றும் நீர்நில வாழ்வன உயிரினங்களை ஆராயும் பிரிவு. கடந்த ஐந்து ஆண்டுகளில், சில இனங்கள் காணப்படவில்லை என்பதை நான் கவனித்தேன்."

 

"உதாரணமாக, ஆற்றின் வெள்ளக்காப்பு அணைக்கரையில் சில செடிகள் வளர்வது வழக்கம். அவை கரையோர தாவரங்கள் (riparian plants) என்று அழைக்கப்படுகின்றன. அந்த மதகுகளுக்கு மேல் தற்போது கான்கிரீட் போட்டதால் அங்கு வாழ்ந்த நீர் பாம்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அணைக்கரையைச் சார்ந்திருக்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் பாதிக்கப்படுகின்றன.

 

காலநிலை மாற்றம்
 

மகாராஷ்டிராவின் தெற்கு முனையில் உள்ள `அம்போலி காட்’ காட்டு பகுதி அனைவருக்கும் பிடித்தமான பகுதி. பருவமழை மற்றும் குளிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் இந்த பகுதியில் குவிவார்கள். இது எண்ணற்ற உள்ளூர் உயிரினங்களின் தாயகமாக இருப்பதால் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆய்வுகளுக்காக இந்த பகுதி பயன்படுத்தப்பட்டது.

 

ஆகஸ்ட் மாதத்தில் அம்போலி காட் கனமழையை எதிர்கொள்ளும் ஒரு நாளில், இங்குள்ள சொக்குல் வனப்பகுதியில் ஹேமந்த் ஓக்லேவுடன் நாங்கள் நடந்தோம். இந்த பகுதி மேகங்களால் சூழப்பட்டிருந்தது. இங்கு மட்டும் காணப்படும் தவளை இனத்தை தேடி முன்னேறிச் சென்றனர். அதன் பெயர் 'அம்போலி டாட்'.

 

"இது அந்த தவளைகளின் இனப்பெருக்க காலம். சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கால் வைக்க கூட முடியாது. இந்த தவளைகள் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும். ஆனால் இப்போது அவற்றை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்" என்கிறார் ஹேமந்த் ஓக்லே. அரை மணி நேரத் தேடலுக்குப் பிறகு, ஓக்லே 5-6 தவளைகளையும் அவற்றின் குஞ்சுகளையும் கண்டுபிடித்தார்.

 

காணாமல் போன தவளை இனம்

 

ஹேமந்த் ஓக்லே அம்போலியில் வசிப்பவர். அவரைப் பொறுத்தவரை, தவளைகளின் எண்ணிக்கை குறைவுக்கு காலநிலை மாற்றமே காரணம். கடந்த சில ஆண்டுகளாக இங்குள்ள வானிலை, மழைக்காலப் போக்கு மாறியிருப்பதை பார்க்கிறார்கள்.

 

"மழைப்பொழிவில் மாற்றம் ஏற்பட்டிருப்பது உடனடியாக கவனிக்க வேண்டிய விஷயம். மழைப்பொழிவு 2 முதல் 2.5 ஆயிரம் மில்லிமீட்டர் வரை அதிகரித்துள்ளது. ஆனால் இந்த அதிகரிப்பு இங்குள்ள நிலப்பரப்பில் சமமாக இல்லை. 8-10 நாட்களுக்கு மழை பெய்யும். பின்னர் வறண்ட காலநிலை இருக்கும்.

 

வறண்ட காலநிலை அதிகரிப்பு தவளைகளின் இனப்பெருக்கத்தை பாதிக்கிறது இந்த சூழல் நிச்சயமாக ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும்" என்று ஓக்லே விளக்குகிறார்.

 

மனிதர்களின் தலையீட்டுடன் மேற்குத் தொடர்ச்சி மலைகள் எதிர்கொள்ளும் புதிய சவால் இது, உலகளாவிய காலநிலை மாற்றம் அனைத்து இயற்கை சுழற்சியையும் பாதித்துள்ளது.

 

புனேவைச் சேர்ந்த முனைவர் அங்கூர் பட்வர்தன் தனது 'ரணவா' அமைப்பின் மூலம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பல்லுயிர் மற்றும் அதன் விளைவுகளை ஆய்வு செய்து வருகிறார். புனேவில் உள்ள கார்வேர் கல்லூரியில் பல்லுயிர் துறையின் தலைவராக உள்ளார். அழிந்து வரும் தாவரங்களின் வாழ்க்கைச் சுழற்சியில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் தவிர்க்க முடியாததாக அவர்கள் கருதுகின்றனர்.

 

கடந்த ஏழு ஆண்டுகளாக, அம்போலி காடுகளில் அழிந்து வரும் 40 இனங்களைச் சேர்ந்த 400 மரங்களை ஆய்வு செய்து கண்காணித்து வருகிறார். அவரை பொறுத்தவரை இதனை மேலும் ஆய்வு செய்ய காலம் எடுத்தால், நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விடும். காலநிலை மாற்றத்தின் விளைவு இந்த இனங்களில் அப்பட்டமாக தெரிகிறது.

 

“2017ஆம் ஆண்டு தொடங்கி அம்போலி வனப்பகுதியில் தொடர்ந்து கண்காணித்து பதிவுகளை செய்து வருகிறோம். இதுவரை 10,000க்கும் மேற்பட்ட ஆய்வுப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் படி மழைப்பொழிவு அதிகரிப்பால் சில தாவரங்களில் பூக்கள் அதிகரிக்கிறது. ஆனால் அவை காய்களாக மாறுவதும், பழமாவதும் இல்லை. காரணம் இங்குள்ள தாவரங்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல. சில இனங்கள் பாதிக்கப்படுவதில்லை, ஆனால் பெரும்பாலானவை பாதிக்கப்படுகின்றன" என்று பட்வர்தன் கூறுகிறார்.

 

"இருபது ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் என்று நினைத்தது இப்போது நடக்கிறது. காலநிலை மாற்றம் வேகமாக நடக்கிறது. மேக வெடிப்புகள், நீண்ட கால வறட்சி, இவை அனைத்தும் இவ்வளவு விரைவாக நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. விஞ்ஞானிகள் கூட குழப்பம் அடைகிறார்கள். இது விலங்குகள், தாவரங்களை எப்படி வேகமாக பாதிக்கிறது? பல்லுயிர் பெருக்கமும் பாதிக்கப்படுவது புதிராக உள்ளது" என்கிறார் அபர்ணா வாட்வே.

 

"சுற்றுச்சூழலில் இந்த மாற்றங்கள் நிகழும்போது, அங்கு உருவாகியுள்ள வாழ்விட மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள நேரம் தேவைப்படுகிறது. பரிணாம வளர்ச்சிக்கு நேரம் தேவை. ஆனால் இப்போது நடக்கும் மாற்றங்களை பல்லுயிர் மற்றும் மனிதர்களால் நிறுத்த முடியாது. " என்கிறார் அபர்ணா.

 

இந்த அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் நிகழும் என்று சொல்லும் காலம் கடந்துவிட்டது. அது தற்போது நிகழ் காலத்தில் நடக்கிறது. மகாராஷ்டிராவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இப்போது கிட்டத்தட்ட 10 வகையான தாவரங்கள் காணவில்லை என்று புனேவின் 'அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்தின்' ஆராய்ச்சியாளர் மாந்தர் தாதர் கூறினார். மாந்தர் தாதாரின் ஆய்வு காணாமல் போல மேலும் சில தாவரங்களின் உதாரணங்களை காட்டுகிறது.

 

"சினமா அனமோலா' என்ற செடி இருந்தது. லோனாவாலாவின் பூஷி அணை பகுதியில் 'போனோலிடிஸ்' என்ற செடி இருந்தது. அதை இப்போது காணவில்லை. 1930-40 ரத்னகிரி நதியில் இதற்கு முன்பு கிடைத்த 'எரிகோலன் ரத்தினகிரிகஸ்' தாவரம் இப்போது இல்லை.

 

முடிவடையாத மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு போராட்டம்

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்