இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக பட்டம் விடும் நடவடிக்கை
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (22:11 IST)
இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக, கொழும்பு 'காலி' முகத்திடலில் பட்டம் விட்டு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 'SHE TALKS' என்ற பெண்கள் அமைப்பினால் இந்த பட்டம் விடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பயங்கரவாத தடுப்பு சட்டம் போன்ற சட்டங்களை பயன்படுத்தி, அமைதி வழி போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுகின்றமை, அவர்கள் தடுத்து வைக்கப்படுகின்றமை, போலீஸார் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த பட்டம் விடும் நடவடிக்கையை ஏற்பாடு செய்துள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிடுகின்றது.
அடக்குமுறைகளுக்கு அச்சப்பட்டு, போராட்டங்களை கைவிட போவதில்லை என அந்த அமைப்பினர் கூறுகின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட பலரின் உருவப்படங்களை பயன்படுத்தி, இந்த பட்டம் பறக்க விடப்பட்டது.
பயங்கரவாத தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களை பயன்படுத்தி, அமைதி வழி போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதாக 'SHE TALKS' அமைப்பின் அங்கத்தவரான சட்டத்தரணி திலினி ஹேவாவிதாரனகே தெரிவிக்கின்றார்.
''குறிப்பாக அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இலங்கை பிரஜைகளின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவது மற்றும் அதற்கு மதிப்பளியுங்கள் என்ற கோரிக்கையை தான் இதனூடாக நாம் செய்ய எதிர்பார்க்கின்றோம். அவரது ஆட்சி காலத்தில் நாம் அவதானித்தோம், பொது சொத்துக்கள் சட்டம் மற்றும் தொல்பொருள் சட்டம் ஆகியவற்றை பயன்படுத்தி, அமைதி வழியாக போராடிய மக்கள் கைது செய்யப்படுகின்றனர். அதேவேளை, பிணையின்றி விளக்கமறியலில் தடுத்து வைப்பதற்கு அரசாங்கம் மற்றும் போலீஸார் முயற்சிகளை மேற்கொண்டனர். அதேபோன்று, பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி அசாதாரணமான விதத்தில் அமைதி வழி போராட்டக்காரர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்," என அவர் கூறினார்.
அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதை தவிர வேறு தீர்வு கிடையாது என சட்டத்தரணி நிரூபா சேரசிங்க குறிப்பிடுகின்றார்.
''டாலர் இல்லாமல் நாடு பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த தருணத்தில், உலகத்தை கைவிட்டு ரணிலினால் தனியாக இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. உலகத்திடமிருந்து உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால், நாட்டில் அமைதியை ரணில் காண்பிக்க வேண்டும். மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாத்து, அதனை காண்பிக்க வேண்டும். அதனை மீறி என்ன செய்ய போகின்றார்கள் என்பதனை எம்மால் புரிந்துக்கொள்ள முடியவில்லை," என்கிறார் நிரூபா.
"அடக்குமுறையை எதிர்ப்போம்"
இலங்கை போராட்டம்
"நாம் அடக்குமுறைக்கு அச்சப்பட போவதில்லை. முடியுமானால், கைது செய்து காட்டுங்கள். எமக்கு பயம் கிடையாது. நாம் ஒன்றிணைவோம். நாளாந்த பிரச்னைகளை விடவும், இது பாரதூரமான பிரச்னை என மக்களிடம் கூறிக் கொள்ள வேண்டும். ஒன்றிணைவோம். ஒன்றிணைவதை தவிர வேறு தீர்வு கிடையாது," என சட்டத்தரணி நிரூபா சேரசிங்க குறிப்பிடுகின்றார்.
இந்த நிலையில், தமக்கான தீர்வு கிடைக்கும் வரை அடக்குமுறைக்கு எதிராக தாம் போராடவுள்ளதாக லங்கா டி சில்வா தெரிவிக்கின்றார்.
''ஊழலுடனான ஆட்சிக்கு எதிராகவே நாம் போராட்டங்களை நடத்தினோம். ஆனால், எம்மை பயங்கரவாதிகளை போன்று நடத்துகின்றார்கள். வசந்த முதலிகே போன்ற திறமையான பிள்ளைகளை பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறை வைத்துள்ளனர். நாம் எமது எதிர்ப்பை பட்டத்தின் மூலமே காண்பிக்கின்றோம். அது இந்த இடத்தில் முற்று பெற போவதில்லை. எமக்கான தீர்வு கிடைக்கும் வரை அடக்குமுறைக்கு எதிராக நாம் குரல் எழுப்புவோம்" என லங்கா டி சில்வா தெரிவிக்கின்றார்.