மோடி பக்கம் சாய்ந்த குலாம் நபி ஆசாத்? பாஜகவில் இணைப்பா?
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (14:37 IST)
காங்கிரசில் இருந்து வெளியேற மோடியை ஒரு காரணமாகக் கூறுவது சாக்குபோக்கு குலாம் நபி ஆசாத் பேட்டி.
கடந்த நாடாளுமன்ற தேர்தல், 5 மாநில சட்டமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றில் தேசிய கட்சியான காங்கிரஸ் பலமான பின்னடைவை சந்தித்த நிலையில் மீண்டும் கட்சியை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸை நிலைப்படுத்த சமீபத்தில் நடந்த கூட்டத்தில் ஜம்மு மாநில காங்கிரஸிற்கு பல்வேறு பதவிகளில் பலரும் நியமிக்கப்பட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸின் பிரச்சாரக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் அவர் அந்த பதவி வழங்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள்ளாக அந்த பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தொடர்ந்து கட்சி செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருந்து வந்த குலாம் நபி ஆசாத் தற்போது காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர் பின்வருமாறு பேசினார். அவர் கூறியதாவது, காங்கிரஸ் தலைமை குறித்து ஜி23 கடிதம் எழுதப்பட்டதில் இருந்தே காங்கிரசாருக்கு என்னிடம் பிரச்சனை உள்ளது.
காங்கிரசிலிருந்து வெளியேற என்னை அவர்கள் கட்டாயப்படுத்தினார்கள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில என் நண்பர்களே என்னைப் பற்றி குற்றச்சாட்டு முன்வைக்கிறார்கள். காங்கிரசில் விரோதிகள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.
பாஜகவில் நான் இணையப் போவதில்லை. இன்னும் 10 நாள்களில் புதிய கட்சி தொடங்கப் போகிறேன். காங்கிரசில் இருந்து வெளியேற மோடியை ஒரு காரணமாகக் கூறுவது சாக்குபோக்கு. பிரதமர் மோடியை கசப்பான மனிதர் என்று நினைத்தேன் ஆனால் அவர் மனித நேயத்தை காட்டினார் என கூறியுள்ளார்.