வங்கதேசத்தில் விமானத்தை கடத்த முயன்ற நபர் சுட்டுக்கொலை

திங்கள், 25 பிப்ரவரி 2019 (15:30 IST)
வங்கதேசத்தில் இருந்து துபாய் சென்று கொண்டிருந்த விமானத்தை கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்பட்ட பயணி, வங்கதேச சிறப்பு படைகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என அந்நாட்டின் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிட்டாகாங்கில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட பின் தன்னிடம் துப்பாக்கி இருப்பதாக அந்த பயணி எச்சரித்தப்பின் பாதுகாப்பு படையினரால் சுடப்பட்டார்.
 
'பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ்' விமானத்தின் BG147 விமானத்தில் இருந்த 148 பயணிகளும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்.
 
சந்தேக நபர் விமானத்தை கடத்த முயன்றதற்கான காரணம் தெரியவில்லை.
 
"25 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் சுடப்பட்டபின் முதலில் காயமடைந்தார், பின் அவர் உயிரிழந்தார்" என ராணுவத்தினர் தெரிவித்ததாக ஏஎஃப்பி செய்தி முகமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
"நாங்கள் அவரை கைது செய்யவோ அல்லது சரணடைய வைக்கவோதான் முயற்சி செய்தோம். ஆனால், அவர் மறுத்துவிட்டார். எனவே, நாங்கள் அவரை சுட்டு விட்டோம்" என ராணுவ மேஜர் ஜென் மோடியூர் ரகுமான் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
 
"அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர். அவரிடம் துப்பாக்கி இருந்தது. அதனை தவிர அவரிடம் ஒன்றும் இல்லை" என அவர் மேலும் தெரிவித்தார்.
 
முன்னதாக சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் கடற்கரை நகரான சிட்டாகாங்கிற்கு செல்லும் மேற்கொள்ளும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் பேச வேண்டும் என கோரியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
பயணி ஒருவர் சந்தேகப்படும்படியாக நடந்து கொள்வதாகவும், விமானத்தை கடத்தப் போவதுபோல் அறிகுறிகள் தெரிவதாகவும் விமான ஊழியர் ஒருவர் தெரிவித்தார் என ராயட்டர்ஸ் செய்தி முகமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சிட்டாகாங்கில் உள்ள ஷா அமநாத் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு, சுற்றி வளைக்கப்பட்டவுடன் சந்தேக நபருடன் அதிகாரிகள் பேச முயன்றனர்.
 
சமூக ஊடகங்களில், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அந்த போயிங் 737-800 விமானத்தை மக்கள் சுற்றி நின்று பார்ப்பது போலான புகைப்படங்கள் பகிரப்பட்டன.
 
இந்த விமானம் ஞாயிறன்று டாக்காவில் இருந்து புறப்பட்டு துபாயில் தரையிறங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்