பைடன் சந்திப்பில் நரேந்திர மோதி விளக்கிய 5 "டி" - எப்படி இருந்தது முதல் சந்திப்பு?

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான தமது சந்திப்பின்போது இந்திய-அமெரிக்க உறவுகளை ஆங்கில எழுத்தில் உள்ள 5 "டி" மூலம் விளக்கினார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.

Tradition - பாரம்பரியம், Talent - திறமை, Technology - தொழில்நுட்பம், Trade - வர்த்தகம், Trusteeship - அறங்காவலராக இருத்தல் என குறிப்பிட்டு அந்த ஐந்து "டி" எவ்வாறு செயல்வடிவம் பெறும் என்று தெரிவித்தார் மோதி.
 
பிரதமர் நரேந்திர மோதிக்கும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் இடையே சந்திப்பு, வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 
லேசான மனதுடன் , சில நகைச்சுவைகளுடன் தொடங்கிய உரையாடலில், இந்திய-அமெரிக்க உறவுகள், கோவிட் -19, சுற்றுச்சூழல் மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஆகிய விஷயங்கள் இடம்பெற்றன.
 
உரையாடலின் தொடக்கத்தில், ஜோ பைடனின் இந்தியாவுடனான குடும்ப உறவுகள் பற்றி ஒரு வேடிக்கையான பேச்சு இருந்தது. அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு, ஒரு முக்கியமான தருணத்தில் இருப்பதை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
 
வரும் தசாப்தம் 'மாற்றங்களை கொண்டு வரத்தக்கது' என்று பிரதமர் மோதி கூறினார். அதே நேரத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான 'புதிய அத்தியாயம்' குறித்த தனது கருத்தை பைடன் வெளிப்படுத்தினார்.
 
ஜோ பைடன் தலைமையில், இந்திய-அமெரிக்க உறவை விரிவுபடுத்த விதைக்கப்பட்ட விதை, இப்போது 'உருமாறும் கட்டத்தை' எட்டி வருகிறது என்று பிரதமர் மோதி குறிப்பிட்டார்.
 
இந்த சூழலில், இரு நாட்டு மக்களுக்கிடையேயான உறவுகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விஷயத்தில் இந்திய திறன் சார் வளங்கள் அதன் முழுமையான பங்களிப்பை வழங்கும் என்று கூறினார்.
 
இரு நாட்டு தொடர்புகள் வலுப்பெற்று வருவதற்கு இரு நாட்டு தலைவர்களும் பரஸ்பரம் பாராட்டு தெரிவித்துக் கொண்டனர். இருவரும் காந்தியின் கோட்பாடுகள் குறித்தும் அவரவர் பேச்சின்போது பதிவு செய்தனர். காந்தி ஜெயந்தி பற்றி பைடன் பேசியபோது, காந்தி முன்மொழிந்த அறங்காவலர் திட்டம் பற்றி பேசிய மோதி, வரும் காலங்களில் அத்தகைய அறங்காவலர் முறை உலகுக்கு அவசியம் தேவைப்படுகிறது என்று கூறினார்.
 
தமது பேச்சின்போது, Tradition - பாரம்பரியம், Talent - திறமை, Technology - தொழில்நுட்பம், Trade - வர்த்தகம், Trusteeship - அறங்காவலராக இருத்தல் என குறிப்பிட்டு அந்த ஐந்து "டி" எவ்வாறு செயல்வடிவம் பெறும் என்று தெரிவித்தார் மோதி.
 
இதில் அறங்காவலர் முறை என்பது காந்தியின் சிந்தனையில் உருவானது. வறிய நிலையில் வாழும் மக்களின் தரத்தை உயர்த்துவதற்கு செல்வந்தர்கள் உதவுவதற்காக இந்த அறங்காவலர் முறையை காந்தி அறிமுகப்படுத்தினார். அது சமூக, பொருளாதார வளத்தை நோக்கமாகக் கொண்டிருந்தது.
 
முன்னதாகப் பேசிய ஜோ பைடன் , இரு நாடுகளும் இரு தரப்பு உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகின்றன என்றும் கோவிட் 19 உட்பட பல கடினமான சவால்களை இது எதிர்கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
 
பருவநிலை மாற்றம், குவாட் கூட்டாளித்துவம் உட்பட இந்தோ-பசிஃபிக் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை ஆகியவை தங்கள் பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள் என்றும் அவர் கூறினார்.
 
அதே நேரத்தில் பைடன், உலகின் 'பயங்கரமான' சவால்களை தீர்க்கும் சக்தி, அமெரிக்க-இந்திய உறவுகளுக்கு உள்ளது என்று குறிப்பிட்டார்.
 
இந்த நம்பிக்கையைப் பற்றி 2006இல் தாம் பேசியதாகவும், இந்தியாவும் அமெரிக்காவும் உலகின் இரண்டு நெருக்கமான நாடுகளில் ஒன்று' என்று 2020 இல் மீண்டும் கூறியதாகவும், பைடன் சுட்டிக்காட்டினார்.
 
"உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு வலுவாகவும் நெருக்கமாகவும் இருக்கும் என்று நான் நம்புகிறேன். இது உலகம் முழுவதற்கும் நன்மை பயக்கும் என்று நான் நினைக்கிறேன்," என்றார் பைடன்.
 
பிரதமர் மோதி, இருதரப்பு உறவுகளின் மீது உலகளாவிய நேர்மறை விளைவுகளின் தாக்கம் அதிகம் இருப்பதாகக் கூறினார்.
 
இந்திய பிரதமர் வர்த்தகம் பற்றியும் அப்போது குறிப்பிட்டார். இது மிகவும் அவசியமான ஒன்று என்றும் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் எப்போதும் மிகவும் திருப்திகரமாக இருந்துவருகிறது என்றும் அவர் கூறினார்.
 
"உங்களிடம் சில விஷயங்கள் உள்ளன, எங்களிடம் சில விஷயங்கள் இருக்கின்றன. நாம் உண்மையில் ஒருவர் மற்றவரை முழுமை அடையச்செய்கிறோம். இந்த தசாப்தத்தில் நமது வணிகம் மிக முக்கியமானதாக இருக்கும் என நான் பார்க்கிறேன்,"என்றார் மோதி.
 
இருப்பினும் பைடன் வர்த்தகத்தை பற்றிக் குறிப்பிடவில்லை. மறுபுறம் அவர் அமெரிக்க-இந்திய கூட்டாளித்துவம், ஜனநாயக மதிப்புகளில் வேரூன்றியுள்ளது என்று கூறினார்.
 
"நமது கூட்டாளித்துவம் நாம் செய்வதை விட அதிகம். நாம் யார் என்பது பற்றியது இது. ஜனநாயக மதிப்புகளை நிலைநிறுத்துவதற்கான நமது பகிரப்பட்ட பொறுப்பு, பன்முகத்தன்மைக்கான நமது கூட்டு அர்ப்பணிப்பு மற்றும் ஒவ்வொரு நாளும் அமெரிக்காவை வலிமைப்படுத்தும் 40 லட்சம் இந்திய-அமெரிக்க மக்கள் பற்றியது," என்று அவர் கூறினார்.
 
அதே நேரத்தில், இரு நாடுகளும் ஜனநாயக மதிப்புகள் மற்றும் மரபுகள் மீது உறுதியுடன் இருப்பதாக பிரதமர் மோதி கூறினார். "இந்த மரபுகளின் முக்கியத்துவம் இன்னும் வளரும் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் குறிப்பிட்டார்.
 
உரையாடலின் போது, இருவருமே மகாத்மா காந்தி பற்றியும் குறிப்பிட்டனர். இருப்பினும், இருவரும் வெவ்வேறு சூழல்களில் அவரைப் பற்றி பேசினார்கள்.
 
காந்தியின் சகிப்புத்தன்மையின் முக்கியத்துவத்தை அதிபர் பைடன் குறிப்பிட்ட அதே நேரம் பூமியைப் பாதுகாக்கும் காந்தியின் யோசனை குறித்து பிரதமர் மோதி பேசினார்.
 
கமலா ஹாரிஸுடன் நடந்த பேச்சுவார்த்தை
 
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை வியாழக்கிழமை பிற்பகலில் சந்தித்தார். வாஷிங்டனில் உள்ள துணை அதிபரின் அதிகாரபூர்வ அலுவலகமான 150 ஆண்டுகள் பழமையான ஐசன்ஹோவர் நிர்வாக அலுவலக கட்டிடத்தில் இருவரும் சந்தித்தனர்.
 
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின்போது வந்த ஹாரிஸின் தொலைபேசி அழைப்பை பிரதமர் மோதி குறிப்பிட்டார்.
 
"சில மாதங்களுக்கு முன்பு எனக்கு தொலைபேசியில் உங்களுடன் பேச வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் நாம் நீண்ட விவாதம் செய்தோம். நீங்கள் என்னிடம் பேசிய விதம் மிகவும் ஊக்கமளித்தது மற்றும் உங்கள் பேச்சு மிகவும் தன்னிச்சையான முறையில் இருந்தது. நான் அதை எப்போதும் நினைவில் கொள்வேன். மிக்க நன்றி," என்று அவர் கூறினார்.
 
ஹாரிஸை "உண்மையான நண்பர்" என்று வர்ணித்த அவர், அமெரிக்க அரசு, தனியார் துறையினருக்கும் இந்திய புலம்பெயர்ந்தோருக்கும் உதவியதை ஒப்புக் கொண்டார்.
 
இந்தியாவும் அமெரிக்காவும் மிகப் பெரிய மற்றும் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றாக இருப்பதாகவும், இரண்டும் பொதுவான மதிப்புகள் மற்றும் புவிசார் அரசியல் நலன்களைப் பகிர்ந்து கொள்ளும் "உண்மையான கூட்டாளிகள்" என்றும் பிரதமர் மோதி கூறினார்.
 
விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவது பற்றிக்குறிப்பிட்ட பிரதமர் மோதி, தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி போன்ற துறைகளை வலுப்படுத்துவதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார். இந்த துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பு மிகமுக்கியம் என்று அவர் கூறினார்.
 
கமலா ஹாரிஸின் வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது
பிரதமர் மோதி ஹாரிஸின் வெற்றியை "ஒரு முக்கியமான மற்றும் வரலாற்று நிகழ்வு" என்று விவரித்தார். அவர் உலகெங்கிலும் உள்ள பல மக்களுக்கு உத்வேகம் அளிப்பவர் என்றும் கூறினார்.
 
அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபரான ஹாரிஸ், ஆப்பிரிக்க-அமெரிக்க சமூகத்திலிருந்து வந்தவர். கூடவே இந்தியாவுடனும் அவருக்கு தொடர்பு உள்ளது.
 
இந்தியாவுடனான அவரது உறவைக் குறிப்பிட்ட பிரதமர் மோதி ஹாரிஸை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
 
"இந்த வெற்றிப் பயணத்தை இந்தியாவிலும் தொடர, இந்திய மக்கள் விரும்புகிறார்கள். அதனால்தான் அவர்கள் உங்களை அங்கு வரவேற்க ஆர்வமாக உள்ளனர். எனவே இந்தியா வருமாறு உங்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்," என்றார் அவர்.
 
மறுபுறம், துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்தியாவை அமெரிக்காவின் மிக முக்கியமான கூட்டாளி என்று வர்ணித்தார். மேலும் உலகத்தை பாதுகாப்பாகவும் வலிமையாகவும் மாற்ற இரு நாடுகளும் கடுமையாக உழைத்து வருவதாகவும் கூறினார்.
 
கொரோனா தொற்றின் தொடக்கத்தில் பல நாடுகளுக்கு இந்தியா கொரோனா தடுப்பூசியின் ஆதாரமாக இருந்தது என்றும் இந்தியாவின் தடுப்பூசி முயற்சிகளை ஆதரிப்பதில் அமெரிக்கா "பெருமை கொள்கிறது," என்றும் அவர் கூறினார்.
 
இந்தியாவில் தினசரி போடப்பட்டுவரும் கொரோனா தடுப்பூசி பற்றிப்பேசிய ஹாரிஸ், "அமெரிக்கா இந்தியாவை ஆதரிப்பதில் பெருமை கொள்கிறது, மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான தேவையும் பொறுப்பும் உள்ளது. தடுப்பூசியை மீண்டும் ஏற்றுமதி செய்வோம் என்ற இந்தியாவின் அறிவிப்பை நான் வரவேற்கிறேன்."என்று குறிப்பிட்டார்.
 
இது தவிர, இந்தியாவும் அமெரிக்காவும் பருவநிலை மாற்றத்தில் இணைந்து செயல்படுவதாகவும், இரு நாட்டு அரசுகளும் அதைப் பற்றி கவலைப்படுவதாகவும், அதன் சில 'ஆழமான' விளைவுகளை காண முடிவதாகவும் அவர் கூறினார்.
 
இந்தியாவும் அமெரிக்காவும் தத்தமது நாடுகளில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதும், ஜனநாயகக் கொள்கைகளையும் அமைப்புகளையும் பாதுகாப்பதும் "இன்றியமையாதது" என்று கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்