300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளனவா??

திங்கள், 22 ஜூலை 2019 (17:26 IST)
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சுமார் 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி. விக்னேஷ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியபோது இதனை அவர் கூறினார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் 9000 தமிழ் பெண்கள், இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக, தன்னிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பௌத்த பிக்குவுமான அத்துரலியே ரத்ன தேரர் கூறியதாகவும் இதன்போது விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

"எமது காணிகள் மற்றும் உரிமைகள் பறிபோவதோடு, எமது பெண்களும் பறிபோகின்றனர்" என்றும் இதன்போது அவர் விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
இதனையடுத்து, 300 தமிழர் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டமையை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் உங்களிடம் உள்ளனவா என்று, முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரனிடம் பிபிசி தமிழ் வினவியது. அதற்கு அவர் பதிலளிக்கையில், பத்திரிகையொன்றில் சில வருடங்களுக்கு முன்னர் வெளியான தொடர் கட்டுரைகளின் மூலம் இதனை தான் அறிந்து கொண்டதாக கூறியதோடு; "ஆதாரங்களை நீங்களே தேடிப்பார்க்க வேண்டும்" என்றார்.

"தமிழர் - முஸ்லிம் மக்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுவிடும் என்பதற்காக, இந்த உண்மையை சொல்லாமல் இருக்க முடியாது" என்றும் அவர் பிபிசி யிடம் கூறினார்.

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் கூறியுள்ள இந்த விடயமானது, தமிழர் - முஸ்லிம் நல்லுறவை பாதிக்கும் என, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கவலை தெரிவித்துள்ளார்.

விக்னேஷ்வரன் கூறுகின்றமை போல் தமிழர் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டிருந்தால், அது தொடர்பில் ஆராய்ந்து அந்தக் கிராமங்களை முடியுமான வரை தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டிய தேவை தமிழர், முஸ்லிம் மக்களின் தலைமைகளுக்கு உள்ளதாகவும் ஹிஸ்புல்லா சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, "பல முஸ்லிம் கிராமங்கள் தமிழர் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, முஸ்லிம் தரப்பினரும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்" எனவும் ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார்.

"முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் தன்னிடத்தில் முழுமையான ஆதாரங்கள் இல்லாமல், இந்த விடயத்தைக் கூறியிருக்க மாட்டார் என்று நம்புகிறேன். ஆகவே, அவர் குறிப்பிட்ட 300 தமிழர் கிராமங்களும் எந்த மாவட்டத்தில் உள்ளன என்ற விவரத்தினை அவசரமாக ஊடகங்கள் மூலமாக தெரியப்படுத்த வேண்டும்" என்றும் ஹிஸ்புல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்