ஆஸ்திரேலிய கடற்கரையில் நிர்வாண போஸ் கொடுத்த 2500 பேர்: எதற்காக? போண்டி கடற்கரை
சனி, 26 நவம்பர் 2022 (23:23 IST)
தோல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கலைத் திட்டத்துக்காக ஆஸ்திரேலிய கடற்கரை ஒன்றில் காலை சூரிய ஒளியில் 2500 தன்னார்வலர்கள் நிர்வார்ணமாக போஸ் கொடுத்தனர்.
சிட்னியின் போண்டி கடற்கரையில் இந்த நிகழ்வு நடந்தது.
அமெரிக்க புகைப்படநிபுணர் ஸ்பென்சர் டுனிக் ஏற்பாடு செய்த திட்டத்துக்கான இந்த நிகழ்வானது, ஆஸ்திரேலியர்களை முறையாக தோல் பரிசோதனை செய்ய ஊக்கப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த திட்டத்துக்காக கடற்கரை போன்ற பொது இடத்தில் நிர்வாணமாகத் தோன்ற அனுமதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியத்தின் கூற்றுப்படி உலகிலேயே ஆஸ்திரேலிய நாடானது தோல் புற்றுநோயினால் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளான நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.
உள்ளூர் நேரப்படி காலை 3.30 மணியில் இருந்து தன்னார்வலர்கள் கடற்கரையில் இந்த கலைத் திட்டத்தில் பங்கேற்பதற்காக குவியத் தொடங்கினர். இந்த திட்டமானது புற்றுநோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு சாரிட்டி ஸ்கின் செக் சாம்பியன்கள்(charity Skin Check Champions ) என்ற அமைப்போடு சேர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.
“தோல் பரிசோதனை குறித்து விழிப்புணர்வை அதிகரிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. இங்கே வந்ததற்காக, இந்தக் கலைத்திட்டத்தை மேற்கொண்டதற்காக நான் பெருமைப்படுகிறேன். உடலையும், பாதுகாப்பையும் இது கொண்டாடுகிறது,” என ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் உலகப் புகழ்பெற்ற கலைஞர் டுனிக் கூறினார்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற புரூஸ் ஃபிஷர் எனும் 77 வயது முதியவர், “என்னுடைய வாழ்க்கையில் பாதியளவு நாட்களை சூரிய ஒளியில் செலவழித்திருக்கின்றேன். இரண்டு வீரியம் மிக்க தோல் புற்றுநோய் கட்டிகள் என் முதுகில் இருந்து எடுக்கப்பட்டன,” என ஏஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
“இது ஒரு நல்ல காரணத்துக்கான செயலாக நான் கருதுகின்றேன். போண்டி கடற்கரையில் நான் ஆடைகளை துறந்து நிற்பதை நான் விரும்புகின்றேன்,” என்றார்.
உலகின் மிகச் சிறந்த சில இடங்களில் வெகுஜன நிர்வாணப் படங்களைத் தயாரிப்பதில் டுனிக் நன்கு அறியப்பட்டவர்.