19 மாதங்கள், 95 நடன அசைவுகள் - ‘நாட்டு நாட்டு’ பாடல் உருவான கதை!

வியாழன், 12 ஜனவரி 2023 (06:55 IST)
வயது வித்தியாசம் இல்லாமல் மக்கள் விரும்பும் சில திரைப்படப் பாடல்களில் ஒன்றாக அமைந்தது ‘நாட்டு நாட்டு’ பாடல். ‘ஆர்ஆர்ஆர்’ தெலுங்கு திரைப்படத்தின் இந்தப் பாடல் திரைப்படப் பிரியர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.
 
இந்த ‘நாட்டு நாட்டு’(ஹிந்தியில் நாச்சோ நாச்சோ) பாடலுக்கு என்டிஆர்-ராம் சரண் ஜோடி நடனமும் எஸ்எஸ் ராஜமௌலியின் இயக்கமும் மேலும் உயிரூட்டம் கொடுத்துள்ளன.
 
கோல்டன் க்ளோம் விருதை வென்ற இந்த பாடல் பிறந்த கதையைப் பார்ப்போம்.
 
இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி, இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோரின் மனதில் இந்த பாடல் எப்படி உருவானது?
 
‘மூலப்பாடல்’ என்பது என்ன?
‘நாட்டு நாட்டு’ பாடல் பிறந்த கதைக்கு முன், ‘மூலப்பாடல்’ பிரிவு என்பது குறித்துச் சற்று விரிவாகப் பார்க்கலாம். ‘மூலம்’ என்ற சொல்லுக்கு ஏற்ப, உலகின் எந்த மொழிப் பாடலாக இருந்தாலும், அந்தத் திரைப்படத்திற்காகவே உருவாக்கப்பட்ட, வேறு எங்கிருந்தும் எடுக்கப்படாத பாடல் என்பதே மூலப்பாடல். ஏற்கெனவே இருக்கும் வேறு எந்தப் பாடலின், இசையின், பொருளின் தாக்கமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள்
 
தகுதி பெற்ற 81 பாடல்களில் 15 அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அவதார்: த வே ஆஃப் வாட்டர் திரைப்படத்தின் ‘நத்திங் இஸ் லாஸ்ட்(யூ கிவ் மீ ஸ்ட்ரெங்க்த்)’ பாடல் உட்பட இன்னும் 14 பாடல்கள் இந்த ‘நாட்டு நாட்டு’ பாடலுடன் போட்டியில் இருந்தன.
 
கலையுலகில் ஆஸ்கருக்கு அடுத்தபடியாக, பெருமைமிகு விருதாக கோல்டன் க்ளோப் விருது கருதப்படுகிறது.
 
பாடல் பிறந்த கதை
‘நாட்டு நாட்டு’ என்ற தெலுங்கு வார்த்தைகளின் படி, வெகுஜன மக்களுக்கான பாடலாக இது உருவாகியுள்ளது.
 
ஜூனியர் என் டி ஆர், ராம் சரண் இருவரும் தனிப்பட்ட முறையில் தங்கள் நடனத் திறமைகளைப் பல முறை நிரூபித்துள்ளனர். அந்த இருவரும் கால் உடையும் அளவுக்கு ஆடினால் எப்படி இருக்கும்? அதைப் பார்க்கும் ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்கும்? என்று சிந்தித்தார் எஸ் எஸ் ராஜமௌலி.
 
இதை அவர் இசையமைப்பாளர் கீரவாணியிடம் கூறியுள்ளார்.
 
“அண்ணே, ரெண்டு பெஸ்ட் டான்ஸர்கள் தங்கள் திறமை முழுவதையும் காட்டக்கூடிய ஒரு பாடல் வேண்டும்” என்று ராஜமௌலி தன்னிடம் கூறியதாக பிபிசி-யிடம் தெரிவித்தார் கீரவாணி.
 
இந்தப் பாடலுக்கான வரிகளை எழுத, கீரவாணி தேர்ந்தெடுத்தது, தற்காலத் தெலுங்குப் பாடலாசிரியர்களில் தனக்குப் பிடித்த சந்திரபோஸை.
 
“இரு முன்னணி நடிகர்களும் தங்கள் நடனங்களின் மூலம் மக்களைப் பரவசப் படுத்த வேண்டும். என்ன வேண்டுமானாலும் எழுதிக்கொள். ஆனால், இந்தக் கதை 1920-களில் நடப்பதாக இருப்பதால், அந்தக் கால கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சொல்லாடலாக இருக்கட்டும்.” என்று கீரவாணி, சந்திரபோஸிடம் கூறியுள்ளார்.
 
அப்போது பாடலுக்கான இசை தயாராகவில்லை. விவரமாகப் பின்னணிக் கதையும் சந்திரபோஸுக்குத் தெரியாது.
 
பாடல் இறுதி செய்யப்பட்டது எப்படி?
 
ராஜமௌலி, கீரவாணி மற்றும் சந்திரபோஸ் மூவரும் ஹைதராபாத்தில் உள்ள அல்லுமினியம் ஃபேக்டரியில் உள்ள ஆர்ஆர்ஆர் அலுவலகத்தில் 2020 ஜனவரி 17 அன்று இந்தப் பாடலுக்கான முதல் பணியைத் தொடங்கினர்.
 
ராஜமௌலியும் கீரவாணியும் கூறிய விஷயங்களை மனதில் கொண்டு தனது காரில் ஏறி அமர்ந்தார் சந்திரபோஸ். அலுமினியம் ஃபேக்டரியிலிருந்து ஜூப்லி ஹில்ஸ் நோக்கி ஊர்ந்தது அந்த கார். அவரது கைகள் ஸ்டியரிங் வீலில் இருந்தாலும் அவர் நினைவு முழுவதும் அந்தப் பாடலின் மீது தான் இருந்தது. அப்போது தான் ‘நாட்டு நாட்டு’ என்ற முக்கிய வரி அவரது மனதில் மின்னலாகத் தோன்றியது.
 
அது வரை எந்த இசையும் உருவாகாததால், ‘6-8 தகிட தகிட திஸ்ர கதியில் அதைப் பின்னத் தொடங்கினார். அதுதான் கீரவாணிக்கு மிகவும் பிடித்தது என்று காரணம் கூறுகிறார் சந்திரபோஸ்.
 
“மக்களின் உற்சாகத்தைத் தூண்டும் நோக்கில் உருவாக்கப்படும் பாடல் இந்த வகையில் தான் இருக்க வேண்டும் என்று 25 ஆண்டுகளுக்கு முன்னரே,
 
தனக்குக் கீரவாணி அறிவுறுத்தியிருப்பதாக பிபிசியிடம் பேசிய சந்திரபோஸ் குறிப்பிடுகிறார்.
 
கதைப்படியும் இந்த இரு முன்னணி நடிகர்களும் தங்கள் நடனத் திறமையை வெளிப்படுத்தும் காட்சியில் இந்தப் பாடல் வருகிறது. எனவே அவர் இதை அமைத்திருந்தார். இரண்டு நாட்களில் மூன்று பாடல் அறிமுகங்களை உருவாக்கிக் கொண்டு கீரவாணியைச் சந்தித்துள்ளார்.
 
தனக்கு மிகவும் பிடித்த பத்தியை இறுதியில் படித்துக் காட்டினார். அதற்கு முன்னால், மற்ற இரண்டு பத்திகளைப் படித்துக்காட்டினார்.
 
சந்திரபோஸ் பரிந்துரைத்த பாடல் அறிமுகம் கீரவாணிக்கும் பிடித்துப்போய் விட்டது. அது இறுதி செய்யப்பட்டது.
 
காளைகள் வயலில் துள்ளிக் குதிப்பதுபோல்
 
போலேரம்மா பண்டிகையில் பொத்தராஜு ஆடுகிறார்
 
ஒலியெழுப்பும் காலணிகளை அணிந்து சிலம்பம் சுற்றுகிறார்
 
ஆலமர நிழலில் இளவட்டங்கள் கூடி நிற்கின்றனர்  
 
சிவப்புச் சோள ரொட்டியில் மிளகாய் தொக்கு சேர்ந்ததுபோல 
 
90% பாடல் இரண்டு நாட்களுக்குள் முடிந்துவிட்டது.
 
ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில மாற்றங்கள் செய்வதில் 19 மாதங்கள் பிடித்தது.
 
படப்பிடிப்பு முழுவதும் சந்திரபோஸும் கீரவாணியும் இந்தப் பாடல் குறித்த விவாதத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
 
சமூக-பொருளாதார நிலையின் பிரதிபலிப்பு
கதையின் படி பீம்(ஜூனியர் என்டிஆர்) தெலுங்கானாவையும் ராம்(ராம் சரண்) ஆந்திராவையும் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த இரு பிராந்தியங்களில் வட்டார வழக்கும் இந்தப் பாடலில் விரவிக் கிடக்கின்றன.
 
இந்தப் பாடலை உன்னிப்பாகப் பொருள் உணர்ந்து கேட்டால், அப்போதைய, அந்தப் பிராந்தியங்களின் சமூக- பொருளாதார நிலையையும் பிரதிபலிப்பதை உணரலாம்
 
‘மிரப்ப தொக்கு’ (மிளகாய்த் தொக்கு), துமுகுலாடட்டம்(மேலும் கீழும் குதிப்பது) போன்றவை தெலுங்கானாவில் மிகவும் பிரபலமான வழக்கு மொழிகள்.
 
அந்தக் காலகட்டத்தில் தெலுங்கானாவின் முக்கிய உணவாக சோளம் இருந்தது. அது மிளகாய்த் தொக்குடன் உண்ணப்பட்டது.
 
பாடல் என்பது, வரிகள் மறைந்து காட்சிகள் மேலோங்கி இருப்பது என்பது சந்திரபோஸின் விளக்கம். அது இந்தப் பாடலுக்குப் பொருத்தமாக இருக்கிறது.
 
தெலுங்கு மக்களிடையே புழங்கிய பல வார்த்தைகள், முக்கியக் குறியீடுகள் இந்தப் பாடலில் இடம்பெறுகின்றன. பொத்தராஜு(கிராமத் திருவிழாக்களில் முக்கிய பாத்திரம்), ரச்சபந்தா(கிராம சதுக்கம்) போன்றவை உதாரணங்கள்
 
இந்தப் பாடலைப் பாடியவர்கள் காலபைரவா மற்றும் ராஹுல் சிப்லிகுஞ்ச்.
 
யுக்ரேனில் பாடல் படப்பிடிப்பு
‘நாட்டு நாட்டு’ பாடல் என் டி ஆர், ராம்சரண் இருவரின் நடனத் திறமைக்கும் சவாலாக இருந்தது. நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித் இந்தப் பாடலுக்காக சுமார் 95 அசைவுகளை உருவாக்கினார்.
 
என்டிஆரும் ராம் சரணும் கை கோர்த்து ஆடும் காட்சிக்கு 30 வகையாக அசைவுகள் அமைத்தார். இந்தக் குறிப்பிட்ட அசைவுக்கு மட்டும் 18 டேக்குகள் ஆனதாகத் திரைப்படக் குழுவினர் கூறுகின்றனர்.
 
ஆனால், படத்தொகுப்பின் போது, இரண்டாவது டேக் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
 
‘ஒரு காட்சியை ஓகே சொல்லி ஒப்புக்கொண்ட பின்னரும் ராஜமௌலி ‘ஒன் மோர்’ என்று கேட்பார் என்று ப்ரேம் ரக்ஷித் பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.
 
தானே கண்டுபிடிக்க முடியாத வேறுபாடுகளை, ஒரு திரைக்கு முன்னால் அமர்ந்து ராஜமௌலி அடையாளம் கண்டுவிடுவார் என்றும் அவர் கூறுகிறார்.
 
இந்தப் பாடல் யுக்ரேன் அதிபர் மாளிகைக்கு எதிரில் படமாக்கப்பட்டது.
 
யுக்ரேனில் படப்பிடிப்பின் போது, ராஜமௌலியும் கீரவாணியும் பாடலின் இறுதிப் பத்தியை மாற்றியமைக்க முடிவு செய்தனர்.
 
அப்போது சந்திரபோஸ் புஷ்பா திரைப்படத்தில் படு பரபரப்பாக இருந்தார்.
 
காணொளி அழைப்பில் சந்திரபோஸுடன் பேசிய ராஜமௌலியும் கீரவாணியும் அந்தக் கடைசி பத்தியை மாற்றித் தரக் கோரினர்.
 
19 மாதங்கள் எடுத்துக்கொண்ட இந்தப் பாடலின் இறுதிப் பத்தியை மாற்றுவது 15 நிமிடத்தில் முடிந்தது.
 
மாற்றப்பட்ட அந்தப் பாடல் பிறகு பதிவு செய்யப்பட்டு, படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
 
இந்தப் பாடல், ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம் சரணின் நடனத் திறமையை வெளிப்படுத்தியதுடன், பீம், ராம் இருவரிடையே இருந்த நட்பு, பீமுக்காக ராம் செய்த தியாகம், தெலுங்கு மக்கள் ஆங்கிலேயரை எந்த அளவுக்கு எதிர்த்தனர், பீம் எப்படி ஆங்கிலப் பெண்ணின் மனதைக் கவர்ந்தார் என்று அனைத்தையும் வெளிப்படுத்துகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்