எவெரெஸ்ட் சிகரம் தொட்ட தம்பதிகளின் சாதனை உண்மையா?

வியாழன், 30 ஜூன் 2016 (14:59 IST)
உலகத்தின் மிக உயர்ந்த மலைச் சிகரமான எவெரெஸ் சிகரத்தின் மீது ஏறி சாதனை புரிந்த முதல் தம்பதி என்று இரண்டு மலை ஏறுபவர்கள் உரிமை கோருவதை இந்திய போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
 

 
தினேஷ் மற்றும் தாரகேஸ்வரி ரத்தோட் ஆகிய இந்த தம்பதியர், செய்தியாளர்களிடம் பேசுகையில், தங்கள் 8,850 மீட்டர் (29,035 அடி) உயரமான எவெரெஸ்ட் சிகரத்தை மே 23ம் தேதி ஏறியதாக தெரிவித்தனர்.
 
இந்த போலிஸ் தம்பதியினர், அவர்கள் மலை ஏறும் படங்களை போட்டோஷாப் மூலமாக திருத்தியமைத்து, தாங்கள் இந்த சாதனையை செய்த்தாகப் போலியாக கதை பரப்பியுள்ளனர் என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.
 
தரகேஷ்வரியும் அவரது கணவரும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்கள். மேலும் அவர்கள் மலை ஏற உதவிய வழிகாட்டிகளும் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
 
பிபிசி அவர்களைத் தொடர்பு கொண்டபோது, தாரகேஸ்வரி ரதோட் தானும் தனது கணவரும் ''எவெரெஸ்ட் சிகரம் மீது எறியதாக' வலியுறுத்தினார்.
 

 
இந்தியாவின் மேற்கில் புனே நகரத்தில் இந்த தம்பதியர் போலிஸ் கான்ஸ்டபிளாக வேலை செய்து வருகின்றனர். அந்நகரப் போலிசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
 
புனேவில் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், அதிகாரிகள் ''தம்பதியிடமும், அவர்கள் மீது சந்தேகம் கொண்டுள்ள மலை ஏறிகளிடமும் அவர்கள் கூறியுள்ளவை பற்றி உண்மை நிலையைத் தெளிவுபடுத்திக் கொள்ள முயன்று வருவதாக'' தெரிவித்தார்.
 
''அந்த தம்பதி மலை எறியதற்காக நேபாள அரசின் சுற்றுலா மற்றும் மலையேறுதல் துறையினரிடம் சான்றிதழ்களை பெற்றுள்ளதாக கூறுகின்றனர். நாங்கள் நேபாள அரசாங்கத்தை அணுகி இந்த சான்றிதழ்கள் உண்மையானவையா என்று கண்டுபிடிப்போம்,'' என்றார் அந்த தனது பெயரை வெளியிட விரும்பாத அதிகாரி.
 
தாரகேஷ்வரியும் அவரது கணவரும் ஜூன் 5ம் தேதியன்று பத்திரிகையாளர் சந்திப்பில் தாங்கள், தங்களது ''கனவை நனவாக்கிவிட்டதாகவும்'' எவரெஸ்ட் சிகர உச்சியை அடைந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.
 

 
ஆனால் புனேவை சேர்ந்த மலையேறுபவரான சுரேந்திர ஷெல்கி மற்றும் சில மலையேறுபவர்கள், போலிஸ் தம்பதியின் சாதனை மீது சந்தேகத்தை கிளப்பினர். ஷெல்கி, ''அந்த தம்பதி மலை உச்சியை அடைந்ததாக சொல்லப்பட்ட நேரமும், அவர்கள் சாதனை செய்துவிட்டதாக செய்தியாளர் சந்திப்பை நடத்திய நேரத்திற்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் தான் எங்களுக்கு முதலில் சந்தேகத்தை தூண்டியது'' என்றார்.
 
அவர்கள் மேலும் தம்பதிகள் மலை உச்சியை அடைந்த புகைபடம் போட்டோஷாப் மென்பொருள் மூலம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
 
ஆனால் இவர்கள் மலை ஏறுவதை ஒருங்கிணைத்த காத்மண்டுவில் உள்ள ‘மக்காலு அட்வென்ச்சர்’ என்ற நிறுவனத்தின் தலைவர் பி பிசியிடம், ''அந்த தம்பதியர் மலை உச்சியை ஏறியதில் ஒரு சந்தேகமும் இல்லை,'' என்றார்.
 
அந்த நிறுவனத்தின் இணையதளமும் போலிஸ் தம்பதியர் எவரெஸ்ட் உச்சியில் எடுக்கப்பட்ட படங்கள் என்று சொல்லப்படும் படங்களை வெளியிட்டுள்ளது.
 
''அவர்கள் எங்களது நிறுவனத்தில் பல ஆண்டுகளாக வேலை செய்து வரும் ஷெர்பாக்களின் உதவியோடு மே மாதம் 23ம் தேதி அன்று மலை உச்சியை அடைந்தார்கள்'' என மோகன் லாம்சால் பி பி சியிடம் தெரிவித்தார்.
 
லாசால், ''கீழ் இறங்குகையில் தாரகேஷ்வரி ரதோட் உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். எங்கள் நிறுவனத்தின் மூலம் ஹெலிகாப்டரை பயன்படுத்தி பேஸ் கேம்ப்பில் இருந்து காத்மாண்டுவிற்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார்'' என்றார்.
 
''தாரகேஷ்வரி ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்தார். அவரது உடல் நலம் சரியான பின்பு தான், அவர் மலை உச்சியை அடைந்த சாதனையைச் சொல்ல பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டது'' என்றார்.
 
சில மலை ஏறுபவர்களின் புகார்களைத் தொடர்ந்து அந்த தம்பதிகளை விசாரித்து, பிறகு தான் ''அவர்களுக்கு சான்றிதழ்களை நேபாள அதிகாரிகள் அளித்தனர்’’ என்றார் லாம்சால். ''இந்த விவகாரத்தில் அரசியல் உள்ளது'' என்றும் அவர் கூறினார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்