மாங்காடு காமாட்சியம்மன் திருக்கோயில்

மாங்காடு திருத்தலம் சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லிக்கும் குன்றத்தூருக்கும் இடையில் உள்ளது.


 


காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி என்று அகிலமெல்லாம் போற்றிப் புகழ்வது போன்றே மாங்காடு காமாட்சியம்மன் கோயிலும் பிரசித்தி பெற்றதாகும்.
 
இத்தலத்தைச் சுற்றிலும் வடவத்தீஸ்வரன் கோயில், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த திருவேற்காடும், கீர்த்தனைகள் பல பாடி புகழ் பெற்ற சுந்தரரேசுவரின் கோயில் உள்ள கோவூரும், சேக்கிழார் அவதரித்த குன்றத்தூரும் வேறு பல தலங்களும் மாங்காட்டைச் சுற்றி அமைந்துள்ளன.
 
இத்தலத்திற்கு ஆம்ராரண்யம், சூதவனம், மாலை என்ற திருப்பெயர்களும் உண்டு. இங்கு கோயில் கொண்டு அருள் வழங்கும் அன்னையின் பெயர். ஆதி காமாட்சியென்றும் தபசு காமாட்சி என்ற பெயரும் பெற்று விளங்குகிறாள். இத்தலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக தோன்றிய பழைமை வாய்ந்த தலமாகும். காஞ்சியில் திருத்தலம் தோன்றுவதற்கு முன்பாகவே இத்தலம் தோன்றி விட்டது.
 
இத்திருக்கோயிலில் அர்த்த மேரு பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. இந்த அர்த்தமேரு, ஸ்ரீ சக்கர எந்திரம் சந்தனம், அகில், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனம், சிலாஜித், ஜடா மஞ்சீ, கச்சோலம் போன்ற எட்டு வகையான வாசனைப் பொருள்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அர்த்தமேருவிலேயே அன்னை வாசம் செய்கின்றாள். 
 
இத்தலத்தில் தான் பார்க்கவ முனிவரும், மார்க்கண்டேய முனிவரும் கடுந்தவம் புரிந்து பேறு பெற்றனர். ஒருசமயம் திருக்கயிலையில் பரமேஸ்வரனும், பார்வதியும் கண்ணாமூச்சி விளையாட ஆவலுற்றனர். அச்சமயத்தில் இறைவனை சூரிய, சந்திரரின் திருநயனங்கள் என்று கூறுகிறார்களே, அவற்றை மூடினால் என்னவாகும் என்றெண்ணிய உமாதேவி இறைவன் திருநயனங்களை தம் திருக்கரங்களால் மூடினார்.
 
கண்களை பொத்திய மாத்திரத்தில் உலகமே இருள் சூழ்ந்தது. உயிர்கள் அனைத்தும் சுவாசிக்க முடியாமல் திணறின. அது கண்ட இறைவன் வெகுண்டெழுந்து, உமாதேவியாரை நோக்கி “பூவுலகில் அவதரித்து ஏகாம்பரம் என்றழைக்கப்படும் ஒற்றை மரத்தடியின் கீழ் கடுந்தவம் புரிந்து எம்மை வந்து அடைவாயாக என்று உத்தரவிட்டார்.
 
இறைவனது உத்தரவினை ஏற்றுக் கொண்ட அன்னை உமாதேவி இம்மாங்காடுத் தலம் வந்தடைந்து ஐந்தணல் வளர்த்து, பஞ்சாட்சரனை நினைந்து கடுந்தவம் புரிந்தாள்; அதன் பின்னர் கச்சியம்பதி சென்றடைந்து கம்பநதிக் கரையில் சிவ பூசை புரிந்து, தவத்தை மேம்படசெய்து முடித்து மீண்டும் இறைவனை வந்தடைந்தாள் என்பது வரலாறு.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்