நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் பெண்களுக்கு பருவம் எய்தியவுடன் வீட்டில் இருக்கவைத்து உடலுக்கு வலு கொடுக்கும் உணவுகளைக் கொடுத்து, மாதவிலக்கு காலங்களில் போதிய ஓய்வும் கொடுத்து வந்தனர். ஆனால், இன்றைய சூழலில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ஓய்வு என்பது கிடையாது. மேலும் உணவு தயாரித்து அதை சாப்பிடக்கூட நேரமில்லாமல் அவசர அவசரமாக கிளம்பி பயணத்தின்போதே சாப்பிடுகின்றனர், அல்லது பட்டினி கிடக்கின்றனர்.
மேலும் மாதவிலக்கு காலங்களில் 3 அல்லது 5 நாட்கள் தனியாக அமர வைத்து, எந்த வேலையும் செய்யவிடாமல், ஓய்வு கொடுத்தனர். அதை நாம் தவறாக புரிந்து கொண்டுள்ளோம். அந்த காலங்களில் போதிய ஓய்வு தேவை என்பதாலேதான் அவ்வாறு செய்தனர் என்பதனை உணரவேண்டும்.
போதிய சத்து குறைப்பாட்டால் குடலில் புண், பித்தம், அஜீரணம், தலைவலி, கை, கால் வலி, இடுப்பு, முதுகு வலி போன்றவற்றை ஏற்படுத்துகிறது. மேலும் உடல் அசைவில்லாமல் கணனி முன் அதிக நேரம் அமர்ந்திருந்து வேலை பார்ப்பவர்கள் இரவுப் பணி, குறைவான தூக்கம், மன அழுத்தம் இவைகளாலும் பெண்களின் உடல் பாதிப்படைகிறது. இத்தகைய பாதிப்புகள் பின்னாளில் பெரிய நோய்களாக மாறிவிடும்.
தீர்வு:
நம்முடைய அன்றாட உணவில் கீரைகள், காய்கள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பலபேர்களின் பிரச்சனைகளில் ஒன்று சிறுநீரை அடக்குவது அல்லது சிறுநீர் கழிவதைத் தடுக்க தண்ணீர் அருந்தாமல் இருப்பது போன்றவற்றை தவிர்த்து நன்கு நீர் அருந்த வேண்டும். முளை கட்டிய பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.