திருநங்கையர்கள் கௌரவமாக வாழ விழிப்புணர்வு முகாம்

வெள்ளி, 3 ஜூன் 2011 (18:07 IST)
சமூகத்தால் பல விதங்களில் ஒதுக்கப்பட்டும், அடக்கி ஒடுக்கப்பட்டும் வாழ்ந்து வரும் திருநங்கையர்களுக்கு கௌரவமாக வாழ சென்னையில் உள்ள 'ஃபீச்சர்ஸ்' என்ற அழகு நிலைய உரிமையாளர் உமா மகேஸ்வரி செய்துள்ள முயற்சிகளின் பலனாக 17 திருநங்கையர்கள் அழகுக் கலை நிபுணர்களாக உருவெடுத்துள்ளனர்.

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விக்னேஷின் மனைவி உமா மகெஸ்வரி பெண்களுக்கான அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவர் மெரோலின் சகாய ராணி என்ற சமூக சேவகரோடஇணைந்து திருநங்கையர் விழிப்புணர்வு முகாம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
WD

திருநங்கையர்களுக்கு தமிழக அரசு தக்க உரிமையும், பாதுகாப்பும் வழங்கி வந்தாலும், தனி நபர் அளவில் செய்யும் முயற்சிகளே அவர்களை மற்றவர்களுடன் சரிசமமாக வாழ வைக்க உதவுகிறது என்பதை உமா மகேஸ்வரியும், சமூக சேவகர் மெரோலின் சகாய ராணியும் நிரூபித்துள்ளனர்.

திருநங்கையர்களுக்கு அழகுக் கலை பயிற்சி அளித்து அவர்கள் வாழ்வில் சிறப்பு சேர்க்கவும், அவர்கள் வயிற்றுப்பாட்டிற்காக கீழ்நிலையான சில காரியங்களில் ஈடுபடுவதிலிருந்து தடுக்க விழிப்புணர்வு முகாமும் நடத்தப்படுகிறது.

மேற்கூறிய லட்சியத்தை நிறைவேற்ற 45 நாட்கள் அழகுக் கலை பயிற்சி முகாமைத் துவங்கி அதனை இன்று வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்கள். இதில் சுமார் 17 திருநங்கையர்கள் வெற்றிகரமாக பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர். 17 திருநங்கையர்களுக்கும் நடிகர் விக்னேஷ் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

திருநங்கையர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சித் துவக்கமும் இன்று முடிவு செய்யப்பட்டது.

தனது இந்த முயற்சி குறித்து உமா மகேஸ்வரி கூறுகையில், முதலில் இவர்களைத் தேர்வு செய்து கவுன்சிலிங் என்ற மனோநிலைப் பயிற்சி வழங்கியதாகவும், அதன் பிறகு இவர்களின் திறமை தன்னை அதிசயிக்க வைத்ததாகவும் அந்த அடிப்படையில் இவர்களுக்கு முதல்கட்ட பயிற்சி அளித்து மற்றவர்களுடன் சரிசமமாக கௌரவத்துடன் வாழ இவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டியதாகவும் தெரிவித்தார்.
WD

தன்னுடைய சொந்த அழகு நிலைய பார்லரில் 17 திருநங்கையர்களுடன் மற்ற பெண்களுக்கும் சேர்த்தே பயிற்சி அளித்துள்ளார் உமா மகேஸ்வரி.

இந்த 17 பேரில் 4 திருநங்கையர்கள் தனியாக அழகுக் கலை தொழில் செய்ய ஏற்பாடு செய்து கொடித்திருப்பதாகவும், ஒருவருக்கு தன்னுடைய பார்லரிலேயே வேலை கொடுத்து முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார் உமா மகேஸ்வரி.

அவர் மேலும் கூறுகயில், மற்ற பெண்களைக்காட்டிலும் திருநங்கையர்களிடம் புத்தி கூர்மை அதிகம் இருப்பதாகவும், பாடங்களை உடனுக்குடன் புரிந்து கொண்டு சிறப்புற செய்து காட்டும் திறமையும் இவர்களிடம் அதிகம் இருப்பதையும் தன்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பயிற்சிபெற்ற திருநங்கையர்கள் பலரும் இந்த முயற்சி தங்கள் வாழ்வில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

ஷோபா என்ற பெயருடைய திருநங்கை ஏற்கனவே அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சென்னை அரவாணிகள் முன்னேற்ற மறுவாழ்வு அறக்கட்டளையைச் செயலர் வெங்கடேஷ் என்பவர் தெரிவிக்கையில் அழகுக் கலை பயிற்சி மட்டுமல்லாது, தையற்கலை, பேஷன் உடை வடிவமைப்புப் பயிற்சி போன்ற துறைகளிலும் அரவாணிகளை தயார் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட அரவாணிகள் இருக்கின்றார்கள், ஆனால் இதில் தங்களை தைரியமாக அரவாணிகள் என்று கூறிக்கொண்டு வெளியே வந்திருப்பவர்கள் 50,000 பேர் மட்டுமே என்று தெரிகிறது.

மீதமுள்ளோர் தங்களை அரவாணிகள் என்று வெளியில் கூற அஞ்சி வாழ்ந்து வருகின்றனர். பலர் இன்னமும் சமூக ரீதியான கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர் என்று வெங்கடேஷ் கூறினார்.

இப்போது இது உமா மகேஸ்வரி-மெரோலின் சகாய ராணி போன்றோரின் முயற்சிகள் பரவலாக்கப்பட்டால் பல அரவாணிகள் தாங்கள் கொடூரங்களுடன் அனுபவித்து வரும் அந்தரங்க வாழ்விலிருந்து வெளியேறி சமூகத்தில் மற்றவர்களுக்கு சமமாக கௌரவமாக வாழும் நிலை ஏற்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்