சசிகலாவின் அடுத்த அரசியல் வாரிசு ; விவேக்குடன் போட்டி போடும் ஜெயானந்த்

வியாழன், 16 நவம்பர் 2017 (11:54 IST)
சசிகலா குடும்பத்தினரிடையே வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையை அடுத்து விவேக் மற்றும் ஜெயானந்த் ஆகியோரிடையே அரசியலில் நுழைய போட்டி ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.


 

 
சசிகலா குடும்பம் மற்றும் உறவினர்களிடையே சமீபத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை அவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இளவரசியின் மகன் விவேக் மற்றும் மகள் கிருஷ்ணப்பிரியா ஆகியோரின் வீட்டில் 5 நாட்கள் சோதனை நடந்துள்ளது. அதேபோல், சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு, அலுவலகம், கல்லூரி ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. 
 
இந்த சோதனைகளில் பல கோடி மதிப்பாலான, பினாமி பெயரில் வாங்கப்பட்ட சொத்து ஆவணங்கள், தங்க மற்றும் வைர நகைகள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.1430 கோடி எனக் கூறப்படுகிறது. தற்போது அனைவரும் விசாரணை வளையத்தில் இருக்கிறார்கள். 
 
இந்நிலையில், இதுவரை மீடியாவை சந்திக்காத விவேக் முதன் முறையாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அதுவும், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், தான் என்ன கூற நினைத்தாரோ அதை மட்டுமே கூறிவிட்டு சென்றுவிட்டார். இது ஜெ.வின் ஸ்டல் எனவும், அண்ணன் விரைவில் அரசியலில் களம் இறங்குவார் என அவரின் அடிப்பொடிகள் கூறிவருகின்றனர். 


 

 
போயஸ்கார்டனில் ஜெ.வின் செல்லப்பிள்ளையாக வளர்ந்த விவேக், தற்போது ஜெயா தொலைக்காட்சி மற்றும் ஜாஸ் சினிமாஸ் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஒருபக்கம் திவாகரனின் மகன் ஜெயானந்த் அரசியலில் களம் இறங்க தயாராகி வருகிறார். வருமான வரி சோதனை குறித்து தனது முகநூல் பக்கத்தில் “ 70 மணி நேரம் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை நல்ல அனுபவமாக இருந்தது. அரசியலுக்கு வருவதற்கு இது முக்கியமானது” எனத் தெரிவித்துள்ளார்.
 
இவர் ஏற்கனவே, ஜெ.வின் மரணம் குறித்த பல கருத்துகளை முகநூல் பக்கத்திலும், தொலைக்காட்சியில் தொலைப்பேசி வழியாகவும் பேட்டி கொடுத்தார். மேலும், மருத்துவமனையில் ஜெ. இருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ தங்களிடம் இருப்பதாகவும், தக்க சமயத்தில் அதை வெளியிடுவோம் எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 
 
இந்நிலையில்தான் திவாகரன் வீட்டிலும் சோதனை நடைபெற்றுள்ளது. எனவே, அண்ணன் விரைவில் அரசியலுக்கு வருவார் என அவரின் அடிப்பொடிகள் சமூகவலைத்தளங்களில் கதறி வருகின்றனர்.
 
தினகரன், திவாகரனுக்கு பின் சசிகலாவின் அரசியல் வாரிசாக யார் களம் இறங்குவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்