தினகரன் நாளையே ஆஜராக வேண்டும் - டெல்லி காவல்துறை அதிரடி

வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (13:01 IST)
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில், தினகரன் கேட்ட அவகாசத்தை ஏற்க மறுத்த டெல்லி காவல்துறை, அவர் நாளையே அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 


 

 
அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தை பெற டெல்லியை சேர்ந்த சுகேஷ் சந்தர் என்பவரிடம் தினகரன் ரூ.60 கோடி பேரம் பேசி, ரூ.10 கோடியை முன்பணமாக கொடுத்தார் என டெல்லி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இதில் தொடர்புடைய சுகேஷ் சந்தரை கடந்த 17ம் தேதி போலீசார் கைது செய்ததோடு, அவரிடமிருந்து ரூ.1 கோடி 30 லட்சம் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர். மீதி பணம் ரூ. 8 கோடியே ரூ.70 லட்சம் எங்கே இருக்கிறது என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், இதில் தினகரனுக்கு எதிரான வலுவாக ஆதாரங்களை அவர்கள் சேகரித்து வருவதாகவும் கூறப்பட்டது.
 
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தினகரனிடம் விசாரணை செய்ய கடந்த 19ம் தேதி இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் டெல்லி போலீசார் சென்னை வந்தனர். அதன் பின் நேராக தினகரன் வீட்டிற்கு சென்ற அவர்கள், தினகரனிடம் வருகிற 22ம் தேதி (நாளை) ஆஜராக வேண்டும் எனக் கூறிவிட்டு, அதற்கான சம்மனை அளித்து விட்டு சென்றனர். 
 
ஆனால், டெல்லி போலீசாரிடம் ஆஜராக தனக்கு 3 நாட்கள் அவகாசம் வேண்டும் என தினகரன் தரப்பு கோரிக்கை மனுவை தாக்கல் செய்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை, நாளையே தினகரன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
 
ஏற்கனவே பல வழக்குகளில் சிக்கி தவிக்கும் தினகரன், இந்த வழக்கில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம், அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்