ஆர்.கே.நகரில் தினகரன் போட்டி? ; குஷியான ஓ.பி.எஸ் அணி - பின்னணி என்ன?

செவ்வாய், 14 மார்ச் 2017 (08:48 IST)
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக தெரிகிறது.


 

 
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்நிலையில், அவர் கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணமடைந்தார். எனவே, அந்த தொகுதி தற்போது காலியாக இருக்கிறது. வருகிற ஏப்ரல் 12ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.   
 
ஏற்கனவே அறிவித்தபடி ஆர்.கே.நகர் தொகுதியில் தீபா போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார். சசிகலா அணி சார்பில், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினரன் போட்டியிடுவார் எனக்கூறப்பட்டது. ஆனால், அவர் அங்கு போட்டியிட தயக்கம் காட்டி வருவதாகவும் சில செய்திகள் வெளியானது.
 
ஏனெனில், அங்கு போட்டியிட்டு, தோல்வியுற்றாலோ, ஒபிஎஸ் அணியை விட குறைந்த வாக்கு வாங்கினாலோ அவரது அரசியல் வாழ்க்கைக்கு அது இடையூறு ஏற்படுத்தும் என அவரது நெருங்கிய நண்பர்கள் எச்சரித்ததால், அங்கு போட்டியிடலாமா வேண்டாமா என்ற குழப்பத்தைல் தினகரன் இருந்ததாக செய்திகள் உலா வந்தது. இந்நிலையில், அங்கு தினகரன் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
துணைப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடனேயே, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பது தினகரனின் எண்ணமாக இருந்துள்ளது. ஆனால், அந்த தொகுதி மக்களின் மனநிலை சசிகலா குடும்பத்திற்கு எதிராக இருப்பதை அதிகாரிகள் மூலம் தெரிந்து கொண்ட தினகரன், அதை சரி செய்யும் வேலையில் இறங்கியுள்ளாராம். அதற்கான ஆலோசனையில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. சில திட்டங்களும் திட்டப்பட்டு வருகிறதாம். 
 
ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெ. இரண்டு முறை நின்று வெற்றி பெற்ற போது, யாரெல்லாம அங்கு தேர்தல் பணி செய்தார்களோ, அவர்கள் அனைவரையும் அழைத்து தினகரன் பேசியதாக தெரிகிறது. தினகரன் வெற்றி பெற கடுமையாக உழைப்பவர்களுக்கு கட்சியில் நல்ல எதிர்காலம் உண்டு என வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. முக்கியமான சில நிர்வாகிகளை தேர்தல் பொறுப்பாளராகவும் தினகரன் நியமிக்க உள்ளார். எனவே, ஆர்.கே.நகர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் தினகரன் தான் என்று விரைவில் அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது.
 
இதனால் ஓ.பி.எஸ் அணி மகிழ்ச்சியில் இருக்கிறதாம். ஏனெனில், ஜெ. மரணத்தில் இருக்கும் மர்மத்தை முக்கிய ஆயுதமாக வைத்து தினகரனை எளிதில் வீழ்த்தி இடலாம் என ஓ.பி.எஸ் அணி கணக்கு போட்டு வைத்திருப்பதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்