களமிறங்கும் சசிகலா நடராஜன் : தஞ்சாவூரில் போட்டி?

வெள்ளி, 14 அக்டோபர் 2016 (09:13 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நீண்ட வருட தோழியான சசிகலா நடராஜன், தஞ்சாவூர் தொகுதியில், அதிமுக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பிருக்கிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த மே 16ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆனால், வாக்களர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
 
அதேபோல், திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ சீனிவேல், உடல் நலக் குறைவால் காலமானார். எனவே அந்த தொகுதியும் காலியாக உள்ளது.
 
இந்நிலையில், அந்த மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது.  இதில், முதல்வர் ஜெயலலிதாவின் நீண்ட நாள் தோழியான சசிகலா நடராஜன், தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
 
உடல் நிலைக் குறைவு காரணமாக ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் இந்த சூழ்நிலையில், அவர் கட்சியில் களமிறங்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அநேகமாக, அவர் அதிமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்படலாம் எனவும் அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
 
இதன் மூலம் கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர அவர் முடிவெடுத்திருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்