அதிமுகவை கைப்பற்ற ஓ.பி.எஸ் அணி போடும் அதிரடி திட்டம்...

வியாழன், 2 மார்ச் 2017 (12:29 IST)
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் ஓ.பன்னீர் செல்வத்தை அமர வைக்கும் முயற்சியின் மூலம், கட்சியை கைப்பற்றும் முடிவில் ஓ.பி.எஸ் அணி செயல்பட்டு வருவதாக  செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின், ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி என அதிமுக இரண்டாக உடைந்தது போல் ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த வாக்கெடுப்பு தீர்மானத்திற்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்ததால், ஒ.பி.எஸ்-ஸால் மீண்டும் முதல்வராக முடியவில்லை. ஆனாலும், நிர்பந்தம்  எம்.எல்.ஏ பதவி மற்றும் ஆட்சி கலைந்து விடக்கூடாது என்பதற்காகவே அதிமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்ததாக கூறப்படுகிறது.  
 
ஓ.பி.எஸ்-ற்கு எதிராக வாக்களித்தாலும், அதிமுக எம்.எல்.ஏக்களில் பலர் ஓ.பி.எஸ் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்துள்ளனர். ஆனால், ஓ.பி.எஸ் அணி பலமாக இருந்தால் மட்டுமே,  ஆதரவு தெரிவிக்கும் சூழ்நிலையில் அவர்கள் இருப்பதை ஓ.பி.எஸ் அணி நன்றாகவே உணர்ந்துள்ளது. 
 
எனவே, அதற்கேற்றார் போல் தற்போது காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அதாவது, தேர்தல் ஆணையத்தின் உத்தரவு கண்டிப்பாக சசிகலாவிற்கு எதிராகவே திரும்பும். எனவே, பொதுச்செயலாளர் பதவியில் ஓ.பி.எஸ்-ஐ அமர வைத்துவிட்டால், கட்சியை கைப்பற்றலாம் என்ற முடிவில் ஓ.பி.எஸ் அணி இருக்கிறது. அதற்கேற்றார் போல் வியூகம் அமைக்கப்பட்டு வருகிறது. 
 
அதிமுக சட்ட விதிகளின் படி பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறிவிட்டால், கண்டிப்பாக ஓ.பி.எஸ் எளிதாக வெற்றி பெறுவார். எனவே, அதற்கான வேலையில் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்