சசிகலாவிற்கு எதிராக களமிறங்கும் தீபா?: ”ஜெயலலிதா தீபா பேரவை” உதயம்

வியாழன், 22 டிசம்பர் 2016 (13:13 IST)
சேலத்தில் அதிமுக நிர்வாகிகள் சிலர் ஒன்றிணைந்து ஜெயலலிதா தீபா பேரவை என்ற புதிய அமைப்பை தொடங்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த டிசம்பர் 6ஆம் தேதி திங்கட்கிழமை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனையடுத்து, முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வமும், மற்ற அமைச்சர்களும் நள்ளிரவில் பதவியேற்றுக் கொண்டனர்.

ஆனால், கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்று அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு விவாதங்கள் ஏற்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், 25 ஆண்டு காலமாக அரசியல் ஆலோசகருமாக இருந்துவந்த சசிகலாதான் பதவியேற்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இதற்கிடையில் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமின் மகளான தீபா, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே தன்னை உள்ளே சென்று பார்ப்பதற்கு அனுமதி மறுக்கிறார்கள் என்று சசிகலாவிற்கு எதிரான புகாரை தெரிவித்தார். மேலும், தன் அத்தை சாவில் மர்மம் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.


 

இந்நிலையில், சேலத்தில் ஜெயலலிதா தீபா பேரவை தொடங்கப்பட்டுள்ளது. சேலத்தில் 44வது வார்டு அதிமுக நிர்வாகிகள், தீபாவை அதிமுகவிற்கு தலைமையேற்க அழைப்பு விடுத்து ஜெயலலிதா தீபா பேரவையை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், 60 வார்டுகளிலும் உள்ள அதிமுகவினரை இந்த பேரவையில் இணைக்க முடிவு செய்துள்ளதாகவும், தமிழகம் முழுவதும் விரிவு படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்