’131 கொத்தடிமைகள், 131 சோற்றால் அடித்த பிண்டங்கள்’ என கூறக்கூடாதா? - ஸ்டாலின்

வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (01:27 IST)
”89 வயக்காட்டு பொம்மைகள் என்று ஒரு அதிமுக உறுப்பினர் பேசுவது அவைக் குறிப்பிலே இருக்கலாம்; ஆனால், ’131 கொத்தடிமைகள், 131சோற்றால் அடித்த பிண்டங்கள்’ என குறிப்பிட்டு பேசியதை குறிப்பிலே இருந்து நீக்குகிறார்கள். இது என்ன நியாயம்? என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 

தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற விவாதத்தில் திமுகவினரை தரக்குறைவாக விமர்சித்து பேசிய அதிமுக உறுப்பினரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கும்படி திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
ஆனால், திமுகவினரின் கோரிக்கைகளை புறக்கணித்த சபாநாயகருக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவையை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ”சட்டசபையில் அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர், திமுக உறுப்பினர்களை வேண்டுமென்றே திட்டமிட்டு, 89 வயக்காட்டு பொம்மைகள் என்று அவையில் பேசுகிறார்.
 
எங்களை மையப்படுத்தி, எங்களை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நிலையில் அவர் அப்படி பேசியபோது நாங்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்தோம்.
 
அப்போது அவையில் மாண்புமிகு முதலமைச்சர் இருந்தார். அவர் உடனே எழுந்து, ’அது ஒன்றும் அன்பார்லிமெண்ட் வார்த்தை அல்ல, அவைக் குறிப்பிலிருந்து எடுக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
 
ஆனால் நாங்கள் கடைசி வரையில் அதை அவைக் குறிப்பிலே இருந்து நீக்க வேண்டும் என்று மன்றாடினோம்; சபாநாயகரிடத்தில் உரிமையோடு கேட்டோம். ஆனால், ”அதை பதிவு செய்து விட்டேன், எனவே நீக்கமுடியாது” என திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
 
அதன்பிறகு, எனக்கு பேசுவதற்கு வாய்ப்பு தாருங்கள் என்று அவரிடம் வாதாடி, போராடிய பிறகு எனக்கு அனுமதி கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி நான் பேசியபோது, ”89 வயக்காட்டு பொம்மைகள் என்று ஒரு அதிமுக உறுப்பினர் பேசுவது அவைக் குறிப்பிலே இருக்கலாம் எனச் சொல்கிறீர்கள்.
 
எனவே, 131 கொத்தடிமைகள், 131சோற்றால் அடித்த பிண்டங்கள்”, என்று குறிப்பிட்டு அது அவையின் பதிவில் இருக்க வேண்டும் எனச் சொன்னபோது, அவர்கள் உடனே அவைக் குறிப்பிலே இருந்து நீக்குகிறார்கள். இது என்ன நியாயம்?
 
நீக்கினால் அதிமுக உறுப்பினர் பேசியதையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், நான் பேசியதையும் நீக்க வேண்டும். ஆனால் அது அவைக் குறிப்பிலே இருக்கிறபோது நான் பேசியதில் என்ன தவறு? அதை ஏன் நீக்க வேண்டும்?
 
நான்  யாரையும் பெயரைச் சொல்லி விமர்சனம் செய்து பேசவில்லை. அவர்களும் அப்படி பேசவில்லை என்று சொல்லி தான் சபாநாயகர் தீர்ப்பு தந்தார். எனவே அந்த தீர்ப்பு தானே இதற்கும் பொருந்தும்?” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்