ஜெ.விடம் எதுவும் கேட்டதில்லை; என்னிடம் ஏன் கேள்வி? - சீறிய மு.க.ஸ்டாலின்

செவ்வாய், 27 டிசம்பர் 2016 (19:19 IST)
வருமான வரிச் சோதனைக்கு ஆளான தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 


 

 
அப்போது தன் மீது எந்த தவறும் இல்லை என்றும், ஜெயலலிதாவிடம் தான் பயிற்சி பெற்றதாகவும், ஜெயலலிதா மட்டும் உயிரோடு இருந்திருந்தால், வருமான வரித்துறையினர் என்னை நெருங்கியிருக்க முடியுமா என்றெல்லாம் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், தன்னை காக்க தமிழக அரசு தவறி விட்டதாகவும் அவர் புகார் கூறினார்.
 
இதுபற்றி திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், இது என்னிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி அல்ல. முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தை கேளுங்கள், இத்தனை வருடமாக ஜெ.விடம் நீங்கள் எதுவும் கேட்டதில்லை. இப்போது என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?. இதற்கெல்லாம் மத்திய அரசுதான் பதில் அளிக்க வேண்டும்” என அவர் கோபமாக கருத்து தெரிவித்தார்.
 
அதன்பின் அது பற்றி ஒரு அறிக்கையும் வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
 
இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் அவர்கள் தமிழக அரசின் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்கள் என்னை சந்தித்து கேள்வி எழுப்பினர். அவர்களுக்கு நான் அளித்த பதிலில்," வருமானவரித் துறை என்பது மத்திய அரசின் கீழ் அமைந்திருந்தாலும் அதற்கென தனி அதிகாரம், தனிச் சட்டம் இருக்கிறது என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும்.

ஏற்கனவே பலமுறை மத்திய அரசு அதிகாரிகளின் வீடுகளில், அவர்களது அலுவலகங்களில் எல்லாம் கூட இது போன்ற சோதனைகள் நடந்திருக்கின்றது. அதுமட்டுமல்ல, தகுந்த உரிய ஆதாரங்களின் அடிப்படையில் தான் இந்த சோதனைகள் நடந்திருப்பதாக வருமானவரித் துறை அதிகாரிகளும் கூறுகிறார்கள், மத்தியில் இருக்கும் அமைச்சர் பெருமக்களும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில், ஆதாரம் இருந்த காரணத்தால் தான் தலைமை செயலகத்திலும் சோதனை நடந்ததாக செய்திகள் வருகிறது. அதைவிட முக்கியமாக, இப்போதும் நான் தான் தலைமை செயலாளர் என்று அவரது பேட்டியில் கூறியிருப்பதாக கேள்விப்பட்டேன். ஏற்கனவே சோதனை நடந்துக் கொண்டிருந்த போதே நான் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தேன்.
 
தலைமை செயலகத்தில் சோதனை நடத்தப்படுகிறது என்று சொன்னால், அதில் ஏதோ பெரிய மர்மம் இருக்கிறது, பூதாகரமான செய்திகள் வரப்போகிறது. எனவே, இதுகுறித்து முதலமைச்சராக இருக்கும் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தான் விளக்கம் சொல்ல வேண்டும் என்று அப்போதே ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தேன். இப்போதும் நான் சொல்கிறேன், நான் தான் தலைமை செயலாளர் என்று முன்னாள் தலைமை செயலாளர் இருக்கிறார் பேட்டி அளிக்கிறார் என்றால், இதற்கு முதல்வர் அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
 
இந்த வருமானவரித் துறை சோதனையின் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதை மத்தியில் இருக்கும் அரசு, பாரதீய ஜனதா கட்சி, வருமான வரித்துறை அதிகாரிகள் தான் பதில் சொல்ல வேண்டும். மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக முதல்வராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களை சந்தித்து நீங்கள் கேள்வி கேட்காத செய்தியாளர்கள், இப்போதாவது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து, விளக்கங்களை கேட்டு, நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்" என கேட்டுக் கொண்டேன்.
 
என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்