ஓ.பன்னீர் செல்வமா?.. சசிகலவா...? - நாளை தெரியும்.....

புதன், 28 டிசம்பர் 2016 (13:15 IST)
நாளை நடைபெற உள்ள அதிமுக செயற்குழு கூட்டத்தை தமிழகம் முழுவதும் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 5ம் தேதி இரவு காலமானார். அவரது மரணத்தில் மர்மம் உள்ளது என்று பலரும் கருத்து கூறிவருகின்றனர்.
 
இந்நிலையில் அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளரை தேர்வு செய்ய நாளை அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய கட்சியின் மூத்த உறுப்பினர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் ஒருதரப்பினரோ சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முதல்வர் பன்னீர் செல்வம் பொதுச்செயலாளராக வேண்டும் என்றும் கூறிவருகின்றனர். இதனால் நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில் தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகனராவ் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனையின்போது தமிழக முதல்வர் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இது சசிகலா வட்டாரத்தை கோபமடைய செய்தது. ராம மோகன ராவ் இல்லத்தை தொடர்ந்து அடுத்தது கார்டன்தான் என செய்திகளும் ரெக்கை கட்டி பறந்தன. இதனால் பீதி அடைந்த சசிகலா தரப்பு எப்படியும் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்று மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்காக அதிமுக எதிர்ப்பு உறுப்பினர்களை சரிகட்டும் வேலையும் ஜரூராக முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.


 

 
மத்திய அரசு பொருத்தவரை பன்னீர் செல்வத்திற்கு மட்டுமே ஆதரவு என்பது தெளிவாக தெரிகிறது. அதற்கு உதாரணம் சமீபத்தில் வெங்கய்ய நாயுடு கூறிய கருத்தே. இதனால் சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவதை மத்திய அரசு ரசிக்கவில்லை என்பது உறுதியாகிறது. அதே சமயம் பொதுமக்கள் மத்தியிலும் சசிகலா பொதுச் செயலாளராக நியமிப்பதை ஏற்கவில்லை என்றே தெரிகிறது.
 
இந்நிலையில் கடந்த சில தினக்களுக்கு முன் தில்லி சென்ற முதல்வர் பன்னீர் செல்வம் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். அப்போது முதல்வரிடம் பேசிய ஆளுநர், உங்களை தவிர வேறு யார் முதல்வர் பதவிக்கு வந்தாலும் அதனை ஏற்க மாட்டேன். அதே போன்று உங்களுக்கு எதிரான சூழல் வந்தாலும் அடுத்து மெஜாரிட்டியாக உள்ள திமுகவினரை பலத்தை நிரூபித்து ஆட்சி செய்யுமாறு அழைப்பு விடுப்போம் என்று கூறியதாக இணையத்தில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
 
இந்த சூழ்நிலையில் நாளை நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தை அரசியல் வட்டாரங்கள் மிகவும் எதிர்பார்த்து வருகின்றன. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு அதிமுகவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும் எனத் தெரிகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்