அமைதியாகத்தான் இருந்தேன், அடங்கி போகவில்லை: டிடிவி தினகரன்

சனி, 5 ஆகஸ்ட் 2017 (05:41 IST)
அதிமுகவின் இரு அணிகள் இணைய தினகரன் கொடுத்த கெடு நேற்றுடன் முடிந்துவிட்டதால் இன்று முதல் அதிமுகவில் அதிரடி திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நேற்று தினகரன் புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவித்ததில் இருந்தே அதிரடி தொடங்கிவிட்டதாக கருதப்படுகிறது.



 
 
இந்த நிலையிலும் இரு அணிகள் இணைவது குறித்த எந்தவித பாசிட்டிவ் நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கட்சியின் ஒற்றுமைக்காக அமைதியாக இருந்தேனே தவிர அடங்கி போகவில்லை என்று நேற்று அளித்த ஒரு பேட்டியில் தினகரன் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: 60 நாட்கள் நேரம் கொடுத்த பின்பே புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கட்சியில் சிறப்பாக செயல்படக் கூடியவர்களுக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டிருந்தோம். சில அமைச்சர்களை பேச்சை கேட்டு கடந்த 2 மாதமாக அமைதியாக இருந்தேன்.  அணிகள் இணைப்புக்கு 60 நாட்கள் கால அவகாசம் அளித்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. கட்சியின் துணைப்பொதுசெயலாளரை தடுத்து நிறுத்த யாருக்கும் அதிகாரமில்லை. 2019 பாராளுமன்ற தேர்தலில் கட்சி வெற்றி பெறுவதற்காகவும் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்' என்று கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்