தொடர்ந்து விலை சரிவு- மஞ்சள் விவசாயிகள் கவலை

வியாழன், 16 ஜூன் 2011 (11:26 IST)
மஞ்சள் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் மஞ்சள் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ஈரோடு என்றாலே நினைவுக்கு வருவது மஞ்சள். ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி மட்டும் அதிகம் என்பதால் இந்த பெயர் வரவில்லை. தமிழகத்திலேயே ஈரோட்டில்தான் முக்கியமான மஞ்சள் சந்தை உள்ளதால் இதை மஞ்சள் நகரம் என்று பெயர் பெற்றது.

கடந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவு மஞ்சள் விலை அதிகபட்சமாக குவிண்டால் ரூ.18 ஆயிரம் வரை விற்பனையாகி வரலாற்று சாதனை படைத்தது. இதன் காரணமாக நடப்பு ஆண்டில் விவசாயிகள் பெருமளவு மஞ்சள் பயிரிட்டனர். ஈரோடு மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மஞ்சள் பயிரிட்டனர். மேலும் கர்நாடக மாநிலத்திலும் வழக்கத்தைவிட அதிகமாக மஞ்சள் பயிரிடப்பட்டது.

இந்த நிலையில் மஞ்சள் விலை சற்று குறைந்து குவிண்டால் ரூ.12 ஆயிரத்திற்கு விற்றது. இந்த விலையே போதுமானதாக கருதிய விவசாயிகள் கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது மஞ்சள் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படியிருக்க கடந்த இரண்டு மாதங்களில் மஞ்சள் விலை பெரும் சரிவை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.

கடந்த மாதம் குவிண்டால் ஒன்று ரூ.7500 க்கு விற்பனையாகிய மஞ்சள் தற்போது அதிலும் குறைந்து குவிண்டால் ஒன்று ரூ. 6400 க்கு விற்பனையாகிறது. இதனால் மஞ்சள் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர். தற்போதைய விலை மஞ்சள் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை கொடுக்கும் என்பதால் விவசாயிகள் மஞ்சளை விற்பனை செய்யாமல் இருப்பு வைத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்