செப்டம்பர் மாதம் 28ம் தேதி வானிலை கணிப்பின்படி அக்டோபர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக செப்டம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும், பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்யும் வாய்ப்புள்ளது.
தென் மேற்கு பருவமழையின் தாக்கம் தற்போது குறைந்து வருவதாலும், வங்க கடல் பகுதியில் வடகிழக்கு பருவ மழை பெய்வதற்கான சூழ்நிலைகள் உருவாகி வருவதாலும் அக்டோபர் முதல் வாரத்தில் பருவ மழை துவங்குவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துள்ளது. இதனால் அக்டோபர் 2ம் தேதி முதல் 9ம் தேதி வரையும், 13ம் தேதி முதல் 17ம் தேதி வரையும், 22ம் தேதி முதல் 27ம் தேதி வரையும் பெரும்பாலான நாட்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை சராசரியைவிட அதிகம் பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையிலும் மேகங்களின் அடிப்படையிலும் வடகிழக்கு பருவ மழை சராசரியைவிட மிக அதிகமாக பெய்யும் இடங்கள் - கடலூர், பாண்டிச்சேரி, திருவாரூர், நாகை, தஞ்சை, திருவள்ளூர், சென்னை, இராமநாதபுரம், சிவகங்கை, கோயமுத்தூர், நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, அரியலூர் ஆகிய மாவட்டங்கள். சராசரியைவிட சற்று அதிகமாக பெய்யும் இடங்கள் - விழுப்புரம், காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், புதுகோட்டை, கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி. சராசரி மழை பெய்யும் இடங்கள் - திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், விருதுநகர், திருநெல்வேலி, மதுரை.
தென்மேற்கு பருவ மழை காலத்தில் அதிக மழை பெறும் பகுதிகளான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட சில தென் மாவட்டங்கள் மிகவும் குறைந்த அளவு மழையே பெய்தது. வடகிழக்கு பருவமழை காலத்தில் இந்த பகுதிகளில் சற்று கூடுதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வட கிழக்கு பருவ மழை காலத்தில் கேரளாவில் கண்ணூர், கோழிக்கோடு, பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளிலும், மங்களூர் உள்பட தெற்கு கர்நாடகாவின் சில பகுதிகளிலும், வட கிழக்கு கர்நாடாகவிலும், மத்திய மேற்கு ஆந்திராவில் ஒரு சில இடங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் ஆந்திராவின் சில பகுதிகளிலும், வடக்கு ஆந்திராவின் பெரும்பாலான பகுதிகளிலும், ஒரிஸாவிலும் பலத்த மழைக்கான வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் கடலூர் அல்லது இராமநாதபுரத்தை மையமாக கொண்டும், ஒரிஸாவை மையமாகக் கொண்டும் இரண்டு இடங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாக வாய்ப்புள்ளது. இதனால் வங்க கடல் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிக பலத்த மழைக்கான வாய்ப்புள்ளது.