8ஆம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு - மழைராஜ்
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2012 (21:00 IST)
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால் வரும் 8ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் பரவலாக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த கடந்த ஜுலை 24 ம்தேதி அனுப்பிய கடிதத்தில் கடந்த இரண்டு மாதமாக தென்மேற்கு பருவமழை பெய்யாததால் விவசாயிகள் வேதனை எனவும், அரபி கடல் பகுதியில் மழைக்கான வாய்ப்பு குறைந்ததால் மழை பெய்யவில்லை எனவும், வங்க கடல் பகுதியில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதால் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் மழையின் தீவிரம் அதிகமாகும் எனவும், வடக்கு ஆந்திரா உள்பட ஆந்திரா, ஒரிஸா மாநிலங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இதனால் கர்நாடாகா மற்றும் வடக்கு கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதுடன், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் எனவும் தெரிவித்திருந்தேன்.
அதே போல் தற்போது வட இந்தியாவிலும், கர்நாடகா மற்றும் வடக்கு கேரளா உள்பட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. எனவே விரைவில் மேட்டூர் அணையும் நிறையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என்பதால் இந்தியாவில் ஏற்கனவே குறிப்பிட்ட இடங்களில் வரலாறு காணாத மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் இந்தியாவில் சராசரியைவிட கூடுதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜுலை 29 ம்தேதி கடிதத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைகிறது எனவும், தமிழகத்தில் ஆகஸ்ட் 3 ம்தேதி முதல் 5ஆம் தேதி வரையும் மழை பெய்யும் எனவும் தெரிவித்திருந்தேன். ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்னை உள்பட வட மாவட்டங்களில் மழை துவங்கியது. தொடர்ந்து வட தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இந்த மழை ஆகஸ்ட் 8 ம்தேதி முதல் 17 ம்தேதி வரை பெரும்பாலான நாட்களில் வட தமிழகம் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், விவசாயிகள் மானாவாரி பயிர் செய்யவும் ஏற்றதாக இருக்கும்.
தென் தமிழகத்தில் கடந்த காலங்களைவிட சற்று கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வரலாறு காணாத மழை பெய்யும் வாய்ப்புள்ளது.